Tuesday, July 6, 2010

தஞ்சை மாவட்ட கடலோர கிராமங்களின் சில அரிய மர வகைகள் - ஒரு ஆய்வு

தஞ்சை மாவட்ட கடலோர கிராமங்களின்
சில அரிய மர வகைகள்
- ஒரு ஆய்வு
Dr.V.பாலாஜி மற்றும் G.முருகேசன்
ஓம்கார் பவுண்டேஷன்
பட்டுக்கோட்டை

2009 மே மாதம் ஓம்கார் பௌண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட கடலோர கிராமங்களில் உள்ள அரிய வகை மரங்கள் பற்றியும்,அதன் மருத்துவ பயன்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.இதில் ஏரிப்புரக்கரை,சேதுபாவாசத்திரம்,சம்பைபட்டினம்,அம்மணிசத்திரம்,செந்தலை வயல்,அடைகத்தேவன்,மகிழங்கோட்டை ஆகிய கிராமங்களில் உள்ள மகாலிங்க மரம்,மகிழ மரம்,இழுப்பை மரம்,மருது மரம்,லெசேட்டை மரம், வெப்பாலை மரம் ,பின்னை மரம்,விலா மரம் மற்றும் குதிரை மரம் போன்ற ஒன்பது வகை மரங்கள் இருப்பது தெரியவந்தது.

மகாலிங்க மரம் :

இது ஏரிப்புரக்கரை கிராமத்தில் உள்ள வழுதியம்மன் கோவில் அருகில் உள்ளது.இதன் விதை லிங்க வடிவில் உள்ளது.இது சிவன் கோவிலுக்கு உரிய மரம் என்றும் சொல்லப்படுகிறது. இது கோவில் சார்பில் பரமரிக்கப்படுகிறது. இது இப்பகுதியில் எங்கும் காண இயலாத மரம் என்று சொல்லப்படுகிறது.

மகாலிங்க மரம்

மகிழமரம்:

இம்மரம் சேதுபாவசத்திரத்தில் உள்ள சத்திர வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த மரத்தின் பூவை மணம் உடையதாகவும், இப்பூவிலிருந்து வாசனை திரவியம் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பூவில் காய்ந்த பிறகும் நறுமணம் வீசும் என்றும்,இது மகிழவனேஸ்வரர் என்ற சொல்லப்படும் சிவனுக்கு உரிய பூ என்பதால் ஆகவே இது சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

இழுப்பைமரம்:

இம்மரம் அம்மணிசத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது.இம்மரத்தின் பூ இனிப்பு தன்மை உடையதாக இருக்கும்.இதன் பூவை காய வைத்து பொடி செய்து சர்க்கரைக்கு பதிலாக பயன்படுதப்பட்டதாக கூறப்படுகிறது.இதன் இலைகளை ஆடுகள் நன்றாக சாப்பிடுவதால் கிராம மக்கள் இதன் இலைகளை கால்நடைகளுக்கு உணவாக வெட்டி விடுகின்றனர். எனவே இம்மரம் இலைகள் அதிகம் இல்லாமல் காணப்படுகிறது.

இலுப்பை மரம்

மருதுமரம்:

இம்மரம் செந்தலைவயல் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ளது.இம்மரத்தின் பட்டை கொய்யா மரத்தின் பட்டையை போன்று உள்ளது.இதன் இலையை தண்ணீரில் போட்டு குடித்தால் உடல் வெப்பத்தை தணிப்பதாக இக்கிராம மக்கள் கூறுகின்றனர்.

வெப்பாளைமரம்:

இம்மரங்கள் அடைக்கத்தேவன் மற்றும் செந்தலைவயல் கிராமங்களுக்கு இடையில் ECR ரோடு அருகில் அதிகளவில் உள்ளது.இதன் விதைகள் காற்றில் வெடித்து சிதறி பரவும் தன்மை கொண்டதாக உள்ளது.இம்மரத்தின் பட்டையின் சாரானது புண்களையும்,தோல்வியாதிகளையும் குணப்படுத்துவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

வேப்பாளை மரம்

பின்னைமரம்:

இது அடைக்கத்தேவன் கிராமத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. இம்மரம் மணற்பங்கான இடங்களில் மட்டுமே வளரும் என்று கூறப்படுகிறது.இதன் இலைகள் முந்திரி மரத்தின் இலைகள் போன்று காணப்படுகிறது.இம்மரத்தின் இலைகளை ஆடுமாடுகள் மேய்வது இல்லை.

பின்னை மரம்

பின்னைமரக்காய்

லெசேட்டைமரம்:

இம்மரம் சம்பைபட்டினம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள குளக்கரையில் அமைந்துள்ளது.இதன் பழம் திராட்சை பழத்தை போன்று கொத்து கொத்தாய் காணப்படுகிறது.இம்மரத்தின் இலைகளை கீரையாக சமைத்து சாப்பிடலாம் என்று கூறுகிறார்கள்.இம்மரத்தில் பால் வடியும்,ஆதலால் ஆடுமாடுகள் குட்டி போட்டவுடன் அதன் நஞ்சு கொடியை [தொப்புள் கொடியை] இம்மரத்தில் கட்டுகின்றனர்.இதனால் ஆடுமாடுகளில் பால் அதிகம் சுரப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.

லேசேட்டை மர இலைகள்

விளாமரம்

இம்மரம் மகிழங்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது.இதன் காய் துவர்ப்பும்,புளிப்பும் உடையதாக உள்ளது.

விளாமரம்
ஒரு கிராமத்தின் சாலையோர விளாமரம்

குதிரைமரம்:

இம்மரம் இராஜாமடம் செல்லும் வழியில் மகிழங்கோட்டை கிராமத்திற்கு சொந்தமான அய்யனார் கோவிலில் அமைந்துள்ளது.இதன் காய் வெடித்து சிதறும் தன்மை கொண்டதாக உள்ளது.

குதிரை மரம்
குதிரைமர விதைகள்