நேற்று, தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேது பாவா சத்திரம் மீன்பிடி தளத்தில் இருந்து, செயற்கை பவளப்பாறைளில் உள்ள மீன் இனங்களை ஆய்வு செய்ய எனது குழுவினருடன் சென்றேன்.
நாங்கள் ஆய்வு செய்ய வேண்டிய செயற்கை பவள பாறைகள், தமிழக அரசின் மீன்வளத்துறை மூலமாக கடந்த 2006-07 வருடங்களில் போடப்பட்டது. செயற்கை பவளப்பாறைகள் என்பவை கான்கீரிட் கொண்டு கட்டப்பட்ட பல்வேறு வடிவங்களை கொண்ட (முக்கோணம், வட்டம் மற்றும் செவ்வகம்) வார்ப்புகளாகும்.
மீன் கூட்டங்கள் செயற்கை பவளப்பாறைகளை சுற்றி நீந்தி வரும் காட்சி,
இடம்: சேது பாவா சத்திரம் கடற்பகுதி , தஞ்சை மாவட்டம்.
தாக்க வரும் பெரிய மீன்களிளிருந்து இந்த மீன்கள் பாதுகாப்பாக இங்கு ஒளிந்து கொள்கின்றன
இந்த வார்ப்புகள் கடலில் போடப்படுவதால், பவளப்பாறைகளை போன்று ஒரு பாதுகாப்பான மறைவிடத்தை ஏற்படுத்துகின்றன. இங்கு வந்து முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்யவும், இங்கு நிரந்தரமாக வாசிக்கவும் வேகமாக நீந்தாத சிலவகை மீன்கள் வந்து குழுமுகின்றன. இவற்றை உண்பதற்காக மற்ற பெரிய மீன்கள் இங்கு வந்து செல்கின்றன. எனவே, ஒரு சிறிய மீன் நகரமாக சில வருடங்களில் இந்த செயற்கை பவளப்பாறைகள் உருவாகி விடுகின்றன. இந்த செயற்கை பவளப்பாறைகளில் மீன்பிடித்தொழில் செய்வது மீன்வலத்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், சிறு மீன் பிடி தொழில் செய்யும் மீனவர்கள், தூண்டில் மூலமாகவோ அல்லது கடலுக்குள் மூச்சை பிடித்து இறங்கியோ மீன்களை பிடிப்பதால் இந்த செயற்கை பவளப்பாறைகளில் பாதிப்பு ஏற்படுவதில்லை.
நீரடி சுவாச கருவிகளுடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எங்கள் ஆய்வு நடைபெற்றது. ஒரு ஒழுங்கற்ற அமைப்பில் கடலுக்குள் வீசப்பட்ட இந்த கான்கிரிட் வார்ப்புகள், சில இடங்களில் குவியலாகவும், சில இடங்களில் தனித்தனியாகவும் கடலடியில் பரவலாக இருந்ததை காண முடிந்தது. சில மீட்டர்கள் மட்டுமே நீருக்கடியில் பார்க்க முடிந்ததால், மெதுவாக நீந்தி சென்று ஒவ்வொரு காங்கிரிட் பிளாக்கையும் பார்த்து சென்று கொண்டு இருந்தேன்.
கடலடியில் புகைப்படங்களை எடுத்து கொண்டு இருந்தபோது, திடிரென ஒரு இடத்திலிருந்து செயற்கை பவளப்பாறைகள் நொறுங்கி கிடந்ததையும், அந்த இடத்தை சுற்றி இறந்த மீன்கள் சிதறி கிடப்பதையும் கண்டேன். நொறுங்கிய கான்கிரிட் துணுக்குகளை எடுத்து பார்த்தபோது, அவை புதியதாக உடைப்பட்டது போன்று தோற்றமளித்தன.
இங்குள்ள மீனவர்களை கேட்டதில், வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு வந்து செயற்கை பவளப்பாறைகளை குறிவைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி, எல்லா மீன்களையும் அள்ளி சென்று விடுவதாக கூறினார்கள். மீன்பிடி முறைகளில், மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தும் இந்த முறையில், சுமார் பத்து சதவீத மீன்களை பிடிப்பதற்காக 90% மீன்கள் கொல்லப்படுகின்றன.
வெடிகுண்டு வீசப்பட்ட இடத்தை சுற்றி சிதறிகிடக்கும் செயற்கை பவளப்பாறை துகள்களும், அதில் வசித்த மீன்களும் . இடம்: சேது பாவா சத்திரம் கடற்பகுதி , தஞ்சை மாவட்டம்.
கடலுக்கு அடியில் வீசப்படும் நாட்டு வெடிகுண்டு, சில வினாடிகளில் பெரும் அதிர்வுடன் வெடிக்கிறது. இந்த அதிர்ச்சியில், லட்சகணக்கான மீன் குஞ்சுகளும், ஆயிரக்கணக்கான நாம் சாப்பிடாத (ஆனால் நாம் உண்ணும மீன்கள் சாப்பிடக்கூடிய) மீன்களும், கடல் தாவரங்களும் ஒரு நொடியில் அழிகின்றன. அவற்றில் விலைபோகும் சிலவகை மீன்களை மட்டும், கடலுக்குள் இறங்கி சேகரித்து விடுகின்றார்கள்.
கரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர்கள் தொலைவில், கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள செயற்கை பவளப்பாறைகளை எப்படி கண்டறிந்து வெடிகுண்டுகளை குறிப்பாக அந்த இடத்தில் வீசுகின்றனர் என்பது புதிராக இருந்தது. GPS கருவி கொண்டு கண்டுபிடித்து இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதாக என்னுடன் வந்த மீனவர் சொன்னார்.
ஆனால், GPS கருவியை கொண்டு ஒரு இடத்தை கண்டு பிடிக்க, அந்த இடத்தின் waypoint (Latitude and Longitude) ஏற்கனவே தெரிந்தால் மட்டுமே, அதை கருவியில் பதிவு செய்து, அங்கு செல்ல முடியும். அப்படியெனில், இந்த இடத்தின் GPS எண்ணை தெரிந்த நபர்கள், மட்டுமே இதை வெடிகுண்டு மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்களுக்கு கொடுத்திருக்க முடியும்!
வெடிகுண்டு வீசப்பட்டதில் சிதறிய செயற்கை பவளப்பாறைகள்: இடம்: சேது பாவா சத்திரம் கடற்பகுதி , தஞ்சை மாவட்டம்.
கடலுக்கு அடியில் கிடந்த இந்த பிளாஸ்டிக் குழாயில் பசை போன்ற பொருள் நிரப்பபட்டு இருந்தது. இது கடலில் வீசப்பட்ட வெடிகுண்டின் பகுதி என்று ஒரு மீனவர் கூறினார். இந்த பொருள் சேது பாவா சத்திரம் மெரின் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல், ராமேஸ்வரம் முதல் மனோரா வரையிலான அனைத்து செயற்கை பவளப்பாறைகளின் GPS எண்களும், வெடிகுண்டு வீசி மீன்பிடி தொழில் செய்யும் சமுக விரோதிகளுக்கு, சிலர் பணத்திற்காக விற்றுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மீனவ நண்பர் கூறினார்.
இதற்கு முன்பும் கடந்த இரண்டு வருடங்களில் இப்பகுதியில் வெடிகுண்டு வீசி மீன் பிடித்ததை விற்கும்போது காவல்துறையால் சிலர் கைது செய்யப்ப்ட்டுள்ளதாக செய்தி தாள்களில் வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தங்க முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்து பார்ப்பது போன்ற இந்த கொடூர செயலால், மீன் உற்பத்தியாகும் செயற்கை பவளப்பாறைகள் அழிகின்றன. இதனால் மீன்பிடி தொழில் நசிந்து போவதிலிருந்து காப்பதற்காக அரசினால் போடப்பட்ட பலகோடி மதிப்பிலான திட்டம் பலனலிக்காமல் போகிறது.
ஒரே தட்ப வெப்பநிலை கொண்ட பாக் ஜலசந்தியின் தமிழக கரையோர மீன்வளங்கள், இப்படி சில சுய நலம் கொண்டவர்களால் சூரையாடப்படுவதால் இங்குள்ள மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்கு சென்று மீன் பிடிக்க செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
எத்தனை படகுகள் ஒரு நாளைக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும் என்பதில் தொடங்கி, யார் யாரால்லாம் மீன்பிடிக்கலாம் என்பதை வகுத்து, எந்த முறையில் மட்டும் மீன்பிடிக்கலாம் என்பதை கருத்தாய் கண்காணித்தால், தமிழகத்தின் எந்த மீனவரும் பாதுகாப்பாக நம் பகுதியிலயே மீன் பிடிக்கலாம்.
முடிவற்ற நெடுமரமாய் வளர்ந்து நிற்கும் மீனவர் பிரச்சனையின், ஆணி வேரை (ஏன் நம் பகுதி மீன்வளங்கள் குறைந்து காணப்படுகிறது?) அறிந்து களைந்தால், வளமான எதிர்காலம் உண்டு.