Tuesday, June 21, 2011
The beautiful mermaid - her sad end in our coast
Wednesday, June 1, 2011
அற்புத கடல் நீரோட்டங்களில் சில அனுபவங்கள்
உலக கடல் பரப்பை பெருங்கடல்களாகவும் (ocean), கடல்களாகவும் (sea) பிரிக்கலாம். இதில் பெருங்கடல்களின் ஒரு சிறு பகுதியே கடல்கள் ஆகும். உதாரணத்திற்கு இந்திய பெருங்கடலின் ஒருசிறு பகுதியே வங்காள விரிகுடா கடல் ஆகும். இப்படி பல பெயர்களால் நாம் பிரித்து வைத்தாலும், மற்ற எல்லா பெருங்கடல்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டே உள்ளன
எனவே, நீங்கள் கன்னியாகுமரியிலிருந்து நேராக தெற்கு நோக்கி சுமார் 8,000 கிலோமீட்டர் ஒரு படகில் பயணித்தால், எந்த தடையுமின்றி பெங்குயின் பறவைகள் வாழும் பனி படர்ந்த அண்டார்டிகாவில் சென்று கரை ஏறலாம். இந்த தூரம் நமக்கு மலைப்பாக இருந்தாலும், கடல் ஆமைகளும், திமிங்கலங்களும் கம்பன் எக்ஸ்பிரசில் சென்னையிலிருந்து ஊருக்கு விடுமுறைக்கு வருவதை போல பல இடங்களுக்கு சர்வ சாதாரணமாக பயணிக்கின்றன. இதில் ஒரு சின்ன வித்தியாசம், இந்த கடல் விலங்குகள் கம்பனுக்கு பதில் கடல் நீரோட்டத்தில் பயணிக்கின்றன.
கடல் நீரோட்டங்கள் வலிமையானவை. அவற்றின் நீளமும், அகலமும், உலகில் ஓடும் எந்த ஒரு ஆற்றின் அளவையும் விட மிக பெரியதாகும். மழைக்காலங்களில் நம் ஊர் ஆற்றில் ஓடும் நீரின் வேகத்தையும், வளைந்து நெளிந்து செல்லும் அதன் இயல்பையும் நாம் நன்றாக பார்க்கமுடியும். ஆனால், பூமியின் 29% மேற்பரப்பை மட்டுமே மூடியுள்ள நிலத்தில் வாழும் நாம், பூமியின் 71% மேற்பரப்பை நீலவண்ண நீர்போர்வையாக போர்த்தியுள்ள க்டலில் ஓடிக்கொண்டு இருக்கும் பிரம்மாண்டமான கடல் நீரோட்டங்களை நம்மால் கரையிலிருந்து பார்க்கும் போது தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதில்லை.
கடலின் ஒவ்வொரு துளி நீரும் காற்றினால் தள்ளப்படுவதாலும், உப்பு தன்மை மற்றும் வெப்பநிலை மாறுபாட்டாலும், சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே ஏற்படும் ஈர்ப்பு விசை மாறுபாட்டாலும் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றது. எனவே, சென்னை மெரினா கடற்கரையில் உங்கள் கால்களை நனைத்து செல்லும் கடல் நீர் இதற்கு முன்பு அண்டார்டிகாவிலோ பசுபிக் பெருங்கடலிலோ இருந்திருக்கலாம். அதாவது, உடலின் எல்லா பகுதிகளுக்கும் இரத்தம் பாய்வதை போல கடல் நீரோட்டங்கள் கடலின் உயிரோட்டமாய் உலகெங்கிலும் ஓடுகின்றன. இந்த வேலிய்ற்ற மாபெரும் கடற்பரப்பில், ஆர்க்டிக் முதல் அன்டார்டிக் வரையிலும், இந்திய பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையிலும் கடல் நீரோட்டங்கள் ஒரு கன்வேயர் பெல்ட் போல தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கின்றன. இந்த கடல் கன்வேயர் பெல்டில் மீன்களும், நண்டுகளும், ஆமைகளும், திமிங்கலங்களும் சுறாக்களும் இலவசமாக பயணித்து இனப்பெருக்கம் செய்ய பல்வேறு இடங்களுக்கு செல்கின்றன. இதன் காரணமாகவே, குறிப்பிட்ட கடல் நீரோட்டங்கள் பாயும் குறிப்பிட்ட சீசனில் மட்டும் அதிக அளவில் மீன்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, வடகிழக்கு பருவக்காற்று எனப்படும் வாடைக்காற்று வீசும் மாதங்களில், வடக்கிலிருந்து தமிழகத்தின் கரையோரமாக வன்னி வெள்ளம என்ற நீரோட்டம் வலிமையுடன் ஓடுகிறது. வாடை காற்றினால் தள்ளப்படும் இந்த வன்னி வெள்ளம் பலவிதமான மீன்களையும், நண்டுகளையும், இறால்களையும் அள்ளி கொண்டு வந்து கோடியக்கரை பகுதியில் குவிப்பதால் (டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) பலகோடி ரூபாய் மதிப்பிலான மீன்பிடித்தொழில் இங்கு நடைபெறுகிறது. எனவே, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மீனவர்கள் இந்த சீசனில் இங்கு வந்து தங்கி மீன்பிடித்து செல்கின்றனர்
.காற்றினால் உருவாகும் இந்த நீரோட்டத்தை போல, கடல் நீரின் வெப்பநிலை மாறும்போதும் நீரோட்டம் உருவாகிறது. சாதாரண தண்ணீர் 0 (ஜீரோ டிகிரி) யில் உறைந்து விடும் ஆனால் கடல் நீரில் உப்பு இருப்பதால் -4 (மைனஸ் நான்கு டிகிரி) யில் மட்டுமே உறைந்து பனிக்கட்டியாகும். ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற துருவப்பகுதிகளில் உள்ள கடல்நீர் பனிக்கட்டியாக மாறாமல், அதே சமயம் குளிர்ச்சியாகவும், அடர்த்தி அதிகமாகவும் இருப்பதால் எடை அதிகரித்து கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. இந்த குளிர்ந்த கடல் நீர் கடல் அடிப்பகுதியில் ஆழ்கடல் நீரோட்டமாக மாறி பூமத்திய பகுதி நோக்கி மெதுவாக நகர்கிறது. இதனால் துருவ கடல் பகுதியின் மேல்பரப்பில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப, பூமியின் வெப்பமான மத்திய பகுதியில் உள்ள கடல் நீரானது ஒரு மேல்பரப்பு வெப்ப நீரோட்டமாக மாறி துருவத்தை நோக்கி ஓடுகிறது. ஒரு மாபெரும் நீர்சக்கரம் மிக மெதுவாக சுழல்வதை போல இந்த நிகழ்வு கடலுக்கடியில் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வெப்ப அல்லது குளிர் நீரோட்டங்கள் பயணிக்கும்போது, அதன் வெப்பமோ அல்லது குளிர்ச்சியோ காற்றுக்கு கடத்தப்பட்டு, அதனருகில் உள்ள நாடுகளின் வெப்பநிலையை மாற்றுகின்றன.
நடுக்கடலின் மேற்பரப்புநீர் கண்ணாடி போன்று மிக தெளிவாகவும், ஊட்டச்சத்து குறைவாகவும் காணப்படும். எனவே ஆங்கிலத்தில் இதை நீலப்பாலைவனம் (blue desert) என்று அழைப்பார்கள். நிலத்தில் ஓடி கடலில் பாய்கின்ற ஆற்றின் மூலமாகவோ அல்லது கடல் நீரோட்டங்கள் மூலமாகவோ மட்டுமே இந்த கடல் நீர் சத்து மிகுந்ததாக மாற்றப்படுகிறது. நாம், முதலில் குறிப்பிட்ட ஆழ்கடல் நீரோட்டங்கள், கடலின் அடிப்பகுதியில் செல்லும்போது கடலடி பரப்பில் படிந்துள்ள ஊட்டசத்துக்களை கிளறி தன்னுடன் இழுத்து செல்கிறன. இவை, ஆழம் குறைவான கரைப்பகுதியில் மோதும்போது மேலே எழும்பி, ஆழ்கடலின் சத்துபொருட்களை மேலே கொண்டு வருகின்றன. இந்த செயலினால், கடல்நீர் வளமிக்கதாக மாறி அதில் ஏராளமான நுண்ணிய தாவர மற்றும் விலங்கு உயிரினங்கள் உற்பத்தி ஆகின்றன. அதை தொடர்ந்து, இவற்றை சாப்பிட கூடிய சிறு மீன்களும் பெரிய மீன்களும் உற்பத்தியாகி கடலின் மீன்வளம் அதிகரிக்கின்றது, இதனால் மீன்பிடி தொழிலில் நல்ல வருமானமும் கிடைக்கிறது.
நம் அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொருவருடமும் மே முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலங்களில், கடல்நீரோட்டங்கள் கேரள கடற்கரையை நோக்கி கடலடியில் படிந்துள்ள சத்துப்போருட்களை மேலே கொண்டு வருகின்றன. இதனால் பெருகும் சிறு உயிரினங்களை சாப்பிட்டு, இறால்கள் மற்றும் மத்திக்கவளை மீன்கள் ஏராளமாக உற்பத்தி ஆகின்றன. இந்த சீசனில் பெருமளவில் பிடிக்கப்படும் இந்த வகை இறால்களும் மீன்களும், அம்மாநில கடலோர கிராம பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த கடல் நீரோட்டங்கள் அனைத்தும் ஒரே விதமான வேகத்தில் இருப்பதில்லை. தீவுகளுக்கு இடையே ஓடும கடல் நீரோட்டங்களும், இரண்டு கடல்களுக்கு இடையே உள்ள நீரிணைப்பில் ஓடும் கடல் நீரோட்டங்களும் அதி வேகமானவை. கடந்த 2009 ஆம் வருடம், பிலிப்பின்ஸ் நாட்டிற்கு செல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்தபோது தீவுகளுக்கு இடையே அதிவேக நீரோட்டங்களில் மாட்டிகொண்ட அனுபவம் எனக்கு ஏற்பட்டது. சுமார் ஏழாயிரம் தீவுகள் கொண்ட அந்த நாட்டில் நெக்ரோஸ் என்ற தீவுக்கு அருகில் இருந்த ஒரு சிறிய குட்டி தீவுக்கு செயற்கையாக பவளப்பாறைகள் வளர்க்கப்படுவதையும், ஜெயன்ட் க்ளாம்ப்ஸ் (giant clams) என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய சிப்பி வகைகள் இருப்பதையும் பார்ப்பதற்காக ஒரு குழுவாக சென்றோம். எங்கள் குழுவில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த கடல் ஆராய்ச்சியாளர்களும், சுற்று சூழல் ஆர்வலர்களும் வந்திருந்தனர். வெள்ளை நிற மணலும், பளிங்கு போன்ற தண்ணீருடனும் மிகவும் ரம்யமாக காட்சியளித்த அந்த தீவை சுற்றி அலைகளே இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது.
நீளவாக்கில் இருந்த அந்த தீவிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் செயற்கை பவளப்பாறைகள் வளர்க்கப்படும் இடம் இருப்பதாக எங்களை அழைத்து சென்ற வழிகாட்டி சொன்னார். ஆர்வகோளாறில் நானும் என்னுடன் வந்திருந்த இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டு நண்பர்களும் சிலிண்டர் போன்ற எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அதை பார்ப்பதற்காக நீந்த துவங்கினோம். காலில் துடுப்பும் முகத்தில் நீரடி கண்ணாடியும் அணிந்து இருந்ததால், அவ்வபோது கடலுக்குள் மூழ்கி சென்று மீன்களையும், பவளப்பாறைகளையும் ரசித்து கொண்டு உற்சாகத்துடன் நீந்தி சென்று கொண்டு இருந்தோம். அரைமணி நேரத்தில் செயற்கை பவளப்பாறை வளர்க்கும் இடத்திற்கு நீந்தி வந்தடைந்தோம். அங்கு சுமார் 20 அடி ஆழத்தில் வைக்கப்பட்டு இருந்த செயற்கை பவளப்பாறைகள் கூண்டை சுற்றிலும் ஏராளமான மீன்கள் நீந்தி கொண்டு இருந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சிறிது நேரம் கழித்து, இளைப்பாற எந்த வழியும் இல்லாததால் மூவரும் தொடர்ந்து நீந்தி மீண்டும் கரைக்கு வர முடிவு செய்தோம்.
ஆனால், நாங்கள் வரும்பொழுது இருந்ததை விட கடலின் நீரோட்டம் திசை மாறி, வேறு திசையில் வேகமாக இழுப்பதை அப்போதுதான் உணர ஆரம்பித்தோம். நாங்கள் கிட்டதட்ட தீவின் முனைப்பகுதிக்கு நீந்தி வந்துவிட்டதால் நீரோட்டத்தில் நடுவில் நன்றாக சிக்கி கொண்டோம். நம் ஊர் ஆற்றில் தண்ணீர் ஓடுவதை போன்ற அதன் வேகத்தில் ஒரு அடி எதிர்த்து நீந்தினால் நான்கு அடி பின்னோக்கி தள்ளியது. அதற்கு மேல் எதிர்த்து நீந்த முடியாது என்பதால் அதன் போக்கிலேயே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நீந்தி சென்றோம். அதிர்ஷ்டவசமாக, நீளமான அந்த தீவின் கரைக்கு இணையாக நீரோட்ட திசை இருந்ததால், அதன் வழியாகவே நீந்தி சென்று தீவின் மற்றொரு இடத்தில் கரை சேர்ந்தோம். பலர் இப்படி நீரோட்டங்களில் ஆபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் உலகெங்கும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நிலையில் தைரியமாக இருப்பதும், நன்றாக நீச்சல் தெரிவதும் மட்டுமின்றி கடலின் இயல்பை பற்றிய அறிவும் இருந்தால் தப்பி உயிர் பிழைக்க முடியும்.
கோடியக்கரைக்கும் யாழ்பாணத்திற்கும் இடையில் உள்ள 55 கி.மி குறுகிய கடலில் ஒரு வலிமையான நீரோட்டம் வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் மாறி மாறி எப்போதும் ஓடி கொண்டு இருக்கின்றது. வேதாரண்யம் பகுதியை சேர்ந்த ஒரு வயதான மீனவர் கூறியபடி “நீரோட்டத்தை எதிர்த்து இந்த பகுதியில் ஒரு படகை அதன் முழு வேகத்தில் இயக்கினாலும், அது ஒரு அடி முன்னேறி செல்வது கூட மிக கடினமாக இருக்கும். மேலும், ஒரு படகு விபத்தில் ஆழமற்ற பகுதியில் மூழ்கினால் கூட உடனே அதை கரைக்கு கொண்டு வந்து விட வேண்டும், இல்லையெனில் நீரோட்டத்தினால் அரித்து வரப்படும் மணல் அதை வேகமாக மூடிவிடும்” என்று கூறினார். இந்த வார்த்தைகள் கடல் பற்றிய அவரின் ஆழ்ந்த அனுபவத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.
மீனவர்களுக்குள்ள பரம்பரையான கடல்சார் அனுபவ அறிவை எண்ணி வியக்கும் அதே வேளையில், கடல் வழியாக படையெடுத்து சென்ற பண்டைகால தமிழக மன்னர்களும், திரை கடல் ஓடி திரவியம் தேடிய பழந்தமிழர்களையும் எண்ணிப்பார்த்தால், அவர்களுக்கு இந்த கடல் நீரோட்டங்கள் பற்றிய அபாரமான அறிவு இருந்திருக்க கூடும் என உணர முடிகிறது.
இந்தோனேசியாவில் பேசப்படும் பாலி என்ற மொழியை தாய்மொழியாக கொண்ட என்னுடைய நண்பரிடம் பேசி கொண்டு இருக்கும்போது, யதார்த்தமாக, பாலி மொழியின் உள்ள உயிர் மற்றும் மெய் எழுத்துக்களை உச்சரிக்குமாறு கேட்டேன். அவர் இந்தியாவிற்கு இதுவரை வந்ததே இல்லை, மேலும் அவருக்கு தமிழ் மொழி பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், பாலி மொழியின் உயிர்மெய் எழுத்துகளை அவர் சொன்னபோது, அவை தமிழ் மொழியின் அத்தனை உயிர்மெய் எழுத்துக்களை போல இருந்தது.
இதிலிருந்து, பண்டைய கால தமிழர்கள் அந்த தீவுகளுக்கு சென்று நமது கலாச்சாரத்தையும், மொழியையும் பரப்பி இருக்கின்றார்கள் என்பதையும் இன்னும் அந்த நாட்டு மக்கள் அவற்றையே பயன்படுத்துகிறார்கள் என்பதையும் ஆதாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள முடிகிறது. பாலி மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வு இளம் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு தலைப்பாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன். எனவே, கடல் காற்றை பற்றியும், நீரோட்டங்கள் பற்றியும் தெளிவான புரிதல் இல்லாமல் நாகப்பட்டினத்திலிருந்து நாலாயிரத்து ஐநூறு கி.மி தொலைவுள்ள பாலி தீவுக்கு பழந்தமிழர்கள் சென்று இருக்க இயலாது.
பண்டைய தமிழரின் கடல் வாணிகத்தில் கடல் நீரோட்டங்கள் எந்த அளவுக்கு முக்கிய பங்கு வகித்திருக்க கூடும் என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.
ஒரு பாய்மர கப்பலில் தமிழகத்திலிருந்து கடல் வழியாக பர்மா செல்ல வேண்டுமானால் தென்னங்காற்று (தென்கிழக்கு பருவக்காற்று) வீசும் காலங்களில் ஓடும் உறுதியான தெண்டி வெள்ளத்தை (தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் கடல் நீரோட்டம்) பயன்படுத்தி எளிதாக சென்றிருப்பார்கள். அது போலவே, பர்மாவிலிருந்து தமிழகத்திற்கு திரும்பி வர வாடை காற்று (வடகிழக்கு பருவக்காற்று) வீசும் காலங்களில் கடலில் ஓடக்கூடிய வலிமையான வன்னி வெள்ளத்தை (வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடும் கடல் நீரோட்டம்) பயன்படுத்தி வந்து சேர்ந்திருப்பார்கள். தெண்டி வெள்ளம், வன்னி வெள்ளம் போன்ற பழந்தமிழ் வார்த்தைகள் இன்றும் தமிழக மீனவர்களால் பயன்படுத்தபடுகின்றன. மேலும், எனது முந்தைய கட்டுரையில் குறிப்பிட்ட படி பல வகையான கடல் மீன்களின் தமிழ் பெயர்களும் காலம் காலமாக இன்னும் மீனவர்களிடையே வழக்கில் இருந்து வருகின்றன. ஆனால், தற்போது அதிகரித்து வரும் சுற்று சூழல் சீர்கேட்டால், தமிழக கடலில் ஒரு மீன்வகை அழிந்து விட்டால், அத்துடன் ஒரு பழந்தமிழ் சொல் பயன்பாட்டையும் நாம் முற்றிலும் இழந்து விடுகிறோம் என்று நினைக்கின்றேன்.
பொருளாதார, அரசியல் மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு என மற்ற எல்லா காரணங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு யதார்த்தமாக பார்க்கும்போது, இன்று இந்த பகுதியில் வெட்டப்பட்ட சேது சமுத்திர திட்டம் பாதியில் நின்று போனதற்கு இந்த அதிவேக நீரோட்டங்களும் ஒரு முக்கிய காரணமாகும். அட்லாண்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் பனாமா கால்வாயும், எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயும் வெற்றிகரமாக இயங்கும்போது சேது சமுத்திர கால்வாய் மட்டும் ஏன் கடினமான பணியாக இருக்கின்றது என்று நீங்கள் கேட்கலாம்?
இதை ஒரு எளிமையான உதாரணம் மூலம் விளக்க விரும்புகிறேன். இரண்டு குளங்களை இணைப்பதற்கு நிலத்தில் வெட்டப்படும் வாய்க்கால் போல இரண்டு கடல்களை இணைக்க நாம் வாழக்கூடிய நிலத்தில் வெட்டப்பட்டவைதான் இந்த சூயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும் ஆகும். அதனால், அவற்றின் கரைகள் உறுதியாக இருக்கின்றன .
ஆனால், சேது சமுத்திரம் திட்ட பணியானது, நம் கொள்ளிடம் ஆற்றில் முழுவதும் தண்ணீர் போய்கொண்டு இருக்கும்போது, ஆற்றின் நடுவில் ஒரு அடி அகலத்திற்கு சிறு வாய்க்காலை நீங்கள் வெட்ட முயற்சிப்பது போல ஆகும். எத்தனை தடவை கடினமாக உழைத்து நீங்கள் மண்ணை அள்ளி கொட்டினாலும், ஆற்றின் நீரோட்டம் மணலால் மீண்டும் அதை எளிதாக மூடிவிடும். அதை போல, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடல் அடியில் உள்ள மணலில் எத்தனை முறை கால்வாய் வெட்டினாலும் சக்தி வாய்ந்த கடல் அடிப்பகுதி நீரோட்டங்கள் எளிதாக அதை மூடிவிடும். ஏனெனில் கடலுக்கு அடியில் ஒரு இடம் பள்ளமாக இருக்க வேண்டுமா அல்லது மேடாக இருக்க வேண்டுமா என்பதை கடல் நீரோட்டங்கள்தான் நிர்ணயிக்கின்றன.
கட்டுரையை எழுதியவர்
டாக்டர். வே. பாலாஜி
கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்
பட்டுக்கோட்டை