Monday, April 23, 2012
படம் சொல்லும் செய்தி
கடந்த சில வருடங்களாக எங்கள் குழுவால் வளர்க்கபட்டு வரும் கடலோர காடுகளை படத்தை கீழ்கண்ட படத்தை சொடுக்குவதன் மூலம் காணலாம். அறிவியல் பின்பலத்துடன் கூடிய செயல்பாட்டு முறையை, இங்குள்ள மக்களின் பாரம்பரிய, இயற்கை சார்ந்த அறிவுடன் இணைந்து இந்த காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தபட்டது. கடலோரங்களில் மட்டும் வளரும் இந்த மேங்ரோவ் காடுகள், கடல் அரிப்பை தடுக்கவும், இயற்கை பேரிடர்களிலிருந்து காக்கவும் பயன்படுகிறது.
சாதாரண மரங்கள் வளர தகுதியில்லாத உப்பு தன்மை வாய்ந்த இடங்களில் இவ்வகை மரங்கள் செழித்து வளர்கின்றன. இவற்றை வளர்ப்பதற்கு நாம் எடுக்கும் மிக நீண்ட கால அளவை கொண்டு இருப்பதாலும், கடினமான ஒருங்கிணைக்கப்பட்ட தொடர் முயற்சி தேவைப்படுவதாலும், தற்போதுள்ள காடுகளை பாதுகாப்பதே, இது போன்று காடுகளை வளர்ப்பதை காட்டிலும் எளிமையான உத்தியாகும்.
இந்த படத்தில் உள்ள காடுகளை வளர்ப்பதற்கு முன் இருந்ததை விட தற்போது அதிக எண்ணிக்கையில் இங்கு நண்டுகள் கிடைப்பதாக இப்பகுதி மீனவர்கள் சொல்கிறார்கள். இதற்கு இந்த காட்டில் இருந்து மக்கி விழும் இலைகளின் உட்டச்சத்து நிறைந்த மண் ஒரு காரணமாக இருக்கலாம், அல்லது நண்டுகள் தங்கள் குடும்பத்துடன் ஒரு புதிய இடம் தேடுகையில் ஒரு தோதான, மறைவான, ஈரப்பதமுள்ள இந்த இடத்தில் வந்து குடியமர்ந்து இருக்கலாம். சர்வேதச மார்க்கெட்டில் நல்ல விலை போக கூடிய சம்பா நண்டுகள், இந்த கடலோர காடுகள் உள்ள இடங்களில் தான் பிடிக்கப்படுகின்றன என்பது குரிப்பிடதக்க விஷயமாகும். தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பிடிக்கப்படும் சம்பா நண்டுகள் சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள உயர்தர உணவு விடுதிகளில் பரிமாறப்படுகின்றன.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் சென்று இருந்தபோது ஒரு சீன உணவு விடுதியை கடந்து செல்ல நேரிட்டது, அங்கு ஒரு தொட்டியில் உயிருடன் பார்த்த Mr. சம்பா நண்டு, நம் ஊரை சேர்ந்தவராக இருப்பாரோ என்று தோன்றியது. மனிதர்களிடையே மட்டும்தான் எங்கயோ பார்த்த ஞாபகம் இருக்க வேண்டுமா என்ன?
Click this image to see the slide show of mangrove growth
Sunday, April 15, 2012
Trapnet Fishery in Palk Bay (பாக் நீரிணைப்பில் அடைப்பு வலை மீன்பிடிமுறை)
அடைப்பு வலையின் மர ஊன்று கால்களில் ஒன்றை, கடலுக்கு அடியில் நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்.
அடைப்பு வலைக்குள் மாட்டிகொண்ட மீன்களை பிடிக்கும் முறைகள்.
வலைக்குள் இறங்கி கையினால் பிடித்த கடல் கெழுத்தி மீன்
மேற்கண்ட படம், கடல் சூழல் மண்டலங்களை பாதுக்காக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த அடைப்பு வலை மீனவரின் வலைகளை உற்று நோக்கினால், கடல் தாழைகள் (seagrass) சிக்கி உள்ளதை காணலாம். இதன் மூலம் இப்பகுதியில் நிறைய கடல் தாழைகள் உள்ளன என்பதை அறிய முடிகிறது. இவை மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் மருத்துவமனைகளாக விளங்குகின்றன. எனவே, கடலில் மீன்பிடி தொழில் சிறப்பாக இருக்க இந்த கடல் தாழைகள் அவசியமாகும். மேலும், இந்த படத்தை இன்னும் சற்று உற்று நோக்கினால், தொலைதூரத்தில் மங்க்ரோவ் (mangroves) காடுகள் இருப்பதை காணலாம். இந்த கடலோர காடுகளில் இருந்து வரும் மக்கிய சத்து பொருட்கள், கடல் தாழைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், கடல் தாழைகளில் உற்பத்தியாகும் கடல் இறால்கள், மீன்கள் மற்றும் நண்டுகள் அந்த காடுகளின் வேர்ப்பகுதிகளுக்கு சென்று உணவு தேடுவதால், கடல் கரையோரம் மீன்பிடி தொழில் செய்யும் சிறு மற்றும் ஏழை மீனவர்களின் வாழ்வை ஆதாரமாக்கும் அர்த்தமுள்ள பணியை இந்த கரையோர காடுகளும், கடல் தாழைகளும் சத்தமின்றி செய்து வருகின்றன.
Subscribe to:
Posts (Atom)