Tuesday, July 31, 2012

IUCN CEC Chair’s Youth Award Winner


IUCN CEC Chair’s Youth Award Winner

23 July 2012 | News story
Vedharajan Balaji of India has been awarded the IUCN CEC Chair’s Youth Award for his outstanding work to restore coastal environments and raise awareness amongst local communities and children of the importance of coastal ecosystems.

Sunday, July 22, 2012

ஜிபிஸ் – மீனவர்களின் உயிர்காக்கும் நண்பன்!


கட்டுரை : முனைவர். வே. பாலாஜி     


கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், வேறு எந்த தொழிலும் தெரியாத நிலையில், குடும்பத்தை காப்பற்ற தினமும் தமிழக மீனவர்கள் கடலில் பயணித்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

நம் தமிழகத்தின் முக்கிய புரதசத்து ஆதாரமாக விளங்கும் கடல் மீன் பிடி தொழில், நம் நாட்டிற்கு பல கோடி ருபாய் அந்நிய செலவாணி ஈட்டி தருகிறது. கடந்த 2010-2011 ஆண்டில் மட்டும் பனிரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒரு கோடியே நாற்பத்து ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் மீன்கள் நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன (ஆதாரம் :Marine Product Exports Development Authority). 
   
ஆனால், விவசாயத்தை போன்றே இயற்கை சார்ந்த தொழிலாக இருப்பதால்மீன்பிடி தொழிலும் திடிரென ஏற்படும் பருவநிலை மாறுபாடுகளாலும, கடல் சீற்றங்களாலும் பாதிக்கப்படுகின்றது. இதனால் வலைகள் மற்றும் படகுகளுக்கு சேதங்கள் ஏற்படுவது ஒரு புறம் இருந்தாலும், சில சமயம் கடல் சீற்றங்களில் மீனவர்களின் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது. இவ்வளவு வருமானத்தை நம் நாட்டிற்கு அள்ளி தரும் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போதும், திடிரென ஏற்படும் கடல் சீற்றங்களால் பாதிக்கப்படும்போதும், எதிர்பாராத விதமாக படகு பழுதாகும்போதும் பாதுகாப்பாக கரை திரும்ப சில அடிப்படை தொழிநுட்ப வசதிகளை பயன்படுத்தவதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

அதில் முக்கியமான ஒன்று ஜிபிஸ் என்ற கருவியை வைத்து கொள்வதும் அதை முறையாக இயக்க கற்று கொள்வதுமாகும். இந்த கட்டுரையில் ஜிபிஸ் கருவியை பற்றிய சில அடிப்படை  தகவல்களையும், அதை மீனவர்கள் முறையாக பராமரித்து உபயோகிப்பது என்பதை பற்றியும் விளக்கி கூறுகின்றேன்.


ஜிபிஸ் கருவி ஒரு அறிமுகம்  

செல்போனுடன் ஜிபிஸ் கருவியை ஒப்பிட்டால், செல்போன் பேச பயன்படுவது போல் ஜிபிஸ் நாம் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள பயன்படிகிறது. தினசரி நாம் பயன்படுத்தும் செல்போனை விட சற்று பெரிய அளவில் இருக்கும் ஜிபிஸ் கருவியை உலகின் எந்த மூலையில் இருந்தும் நாம் இயக்கி பூமியில் நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை சில துல்லியமாக தெரிந்து கொள்ளவும், நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேரவும் முடியும். அதாவது, இதுவரை சென்னையையே பார்த்திராத ஒருவர், ஜிபிஸ் கருவியை இயக்க தெரிந்தால், திநகரில் உள்ள ஒரு சந்து கடையை யாரிடமும் விலாசம் விசாரிக்காமல் சென்று அடையமுடியும்.

ஜிபிஸ்  (GPS) என்ற சொல்லுக்கும் ஜிபிரஸ் (GPRS) என்ற சொல்லுக்கும் ஒரு  என்ற எழுத்து மட்டுமே வேறுபட்டு இருப்பதால் இதை கொண்டு அடிக்கடி குழப்பி கொள்கின்றோம்.

இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பணிகளை செய்யும் வெவ்வேறு தொழில் நுட்பங்களாகும். ஜிபிஸ் ஒரு கையடக்க புவியிடசுட்டு கருவியை குறிக்கின்றது. ஜிபிரஸ் என்பது செல்போன்களில் நாம் பயன்படுத்தும்  2G அலைவரிசையின் மூலமாக ஈமெயில், இன்டர்நெட் மற்றும் மல்டிமீடியா குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படும் ஒரு தொழில் நுட்பமாகும். தற்போது ஜிபிஸ் தொழிநுட்பம் புகுத்தப்பட்ட செல்போன்கள் வந்துவிட்டன. ஆனால், ஒரு தனிப்பட்ட ஜிபிஸ் கருவிபோல செயற்கைகோளுடன் நேரடி தொடர்பு கொள்ளமால், இந்த வகை போன்கள் சிம்கார்டை சார்ந்து இயங்குகின்றன.

ஐவான் அலெக்சாண்டர் கெட்டிங் என்ற அமெரிக்க வல்லுனரால் ஜிபிஸ் கருவிக்கான அடிப்படை கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது.1970 களில் துவங்கி, அமெரிக்க  ராணுவ பயன்பாட்டிற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஜிபிஸ், பிற்காலத்தில் அதன் பல்வேறு நன்மைகளை கருதி பொது மக்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டது.  

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜிபிஸ் கருவியை முதன்முதலில் பல்கலைகழக வகுப்பில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு செங்கல்லை போன்ற அளவும், எடையும் கொண்ட அந்த ஜிபிஸ் கருவி மிகவும் வியப்புக்குரிய விஷயமாக இருந்தது. ஆனால், தற்போது அதன் எடையும், அளவும், விலையும் பலமடங்கு சுருங்கி, ஒரு குறைந்த விலை டச் ஸ்க்ரீன் செல்போன் வாங்கும் விலைக்கே கிடைக்கின்றது.
    
ஜிபிஸ் என்பது Global Positioning System என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமாகும், இதன் அர்த்தம் “புவியிடகுறிப்பு கருவி அல்லது புவியிடசுட்டு கருவி” என சொல்லலாம்.  

நாம் செல்போன் பேச வேண்டுமானால் டவர் சிக்னல்  தேவைப்படுகிறது, நாம் பேசும் நேரத்திற்கு ஏற்ப பணம் கட்ட வேண்டியுள்ளது. ஆனால், ஜிபிஸ் கருவியை நீங்கள் பல நூறு கிலோமீட்டர் நடு கடலுக்கு சென்றாலும், ஏன் மனிதர்களே இல்லாத அண்டார்டிகா சென்றாலும் கூட இயக்க முடியும். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், இந்த சேவையை பயன்படுத்த நீங்கள் யாருக்கும் பணம் செலுத்த தேவையில்லை.

இந்த அற்புத கையடக்க கருவி எப்படி செயல்படுகிறது  என்பதை பார்ப்போம். (குறிப்பு: உங்கள் நவீன செல்போனில் ஜிபிஸ் வசதி இருந்தால் அது உங்களுக்கு செல்போன் டவர் சிக்னல் இருந்தால் மட்டுமே இயங்கும், இதை நம்பி மீனவர்கள் கடலுக்கு  எடுத்து செல்லவேண்டாம்!)




ஜிபிஸ் கருவியின் இயக்கம் செயற்கை கோள்களை சார்ந்து உள்ளது. இந்த செயற்கைகோள்கள் அனைத்தும் அமெரிக்க இராணுவத்தால் ஏவப்பட்டு, இன்றும் கட்டுபடுத்தப்படுகின்றன. இருபத்து எட்டு  செயற்கைகோள்களை இந்த பணிக்காக அமெரிக்கா விண்ணில் பறக்கவிட்டுள்ளது. ஒவ்வொரு செயற்கைகோளும் சுமார் பதினோராயிரம் மைல்கள் உயரத்தில் பல்வேறு கோணங்களில் பூமியை சுற்றி வருகின்றன, எனவே, ஒரு பந்து வடிவ நூல் கண்டில் பல்வேறு கோணங்களில் நூல் சுற்றப்படுவது போல் அவை பல்வேறு கோண வட்டப்பாதைகளில் பறப்பதால், பூமியின் எந்த ஒரு இடத்தையும் ஒரு நாளைக்கு இரண்டு முறை கடந்து செல்கின்றன.  

இந்த ஒவ்வொரு செயற்கைகொளிலும் மிக துல்லியமான ஒரு அணுக்கடிகாரம் (Atomic Clock)பொருத்தப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு ஜிபிஸ் செயற்கைகோளும் எந்த மணித்துளியில் பூமியின் எந்த இடத்திற்கு நேராக தான் பறந்து கொண்டு இருக்கின்றது என்ற தகவலை மின்காந்த அலைகளின் மூலம் இருபத்து நன்கு மணி நேரமும் பூமிக்கு அனுப்பி கொண்டே இருக்கின்றது. எனவே, கையடக்க ஜிபிஸ் கருவியை நீங்கள் உயிர்ப்பித்தவுடன், உங்கள் தலைக்கு மேலே எத்தனை ஜிபிஸ் செயற்கைகோள்கள் பறந்து கொண்டு இருக்கின்றனவோ அவற்றுடன் சில வினாடிகளில் தொடர்பு கொண்டு, அதை கருவியின் மின் திரையில் உங்களுக்கு காட்டும். மேலும், தொடர்பில் உள்ள செயற்கைகோள்கள் அனுப்பும் மின்கந்த அலை தகவல்களை கொண்டும், அந்த தகவல்கள் உங்கள் ஜிபிஸ் கருவியை வந்தடைய ஆகும் காலத்தையும் கணக்கிட்டு, பூமியில் எந்த இடத்தில் ஜிபிஸ் கருவியை பிடித்துகொண்டு நீங்கள் நின்று கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை துல்லியமாக உங்களுக்கு தெரிவிக்கின்றது. இதன் மூலம், உலகில் நீங்கள் எந்த இடத்தில் நின்று கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை ஏறக்குறைய வெறும் பத்து மீட்டர் துல்லியத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.    




இதில் கவனிக்கதக்க விஷயம் ஒன்று உள்ளது. மெரினா பீச்சில் உள்ள காந்தி சிலை அருகே நின்று கொண்டு ஜிபிஸ் கருவியை இயக்கினாலும், பசிபிக் கடலின் ஏதோ ஒரு தீவில் இருந்து ஜிபிஸ் கருவியை இயக்கினாலும் அந்த இடத்தின் பெயரை ஜிபிஸ் கருவி உங்களுக்கு சொல்வதில்லை. மாறாக ஒரு சங்கேத எண்களை மட்டுமே சொல்கிறது. அதற்குள் ஒளிந்திருக்கும் ரகசியத்தை தெரிந்து கொள்வோமா!

இதற்கான ரகசியத்தை புரிந்து கொள்ள, பள்ளியில் கற்றுகொண்ட புவியியல் பாடங்களை நினைவு கூர்வோம். பூமியானது புவி நடுக்கொட்டின் மூலமாக கிடைமட்டமாகவும், கிரீன்விச் தீர்க்கரேகை மூலமாக செங்குத்தாகவும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த கிடைமட்ட கோடுகளுக்கு அட்ச ரேகைகள் (Latitude) என்றும் செங்குத்து கோடுகளுக்கு தீர்க்க ரேகைகள் (Longitude) என்றும் பெயர்.  ஒரு கோளத்திற்கு முன்னூற்று அறுபது கோணங்கள் இருப்பதால்,  கோள வடிவ பூமியை சுற்றி ஒரு கோணத்திற்கு ஒன்றாக முன்னுற்று அறுபது கிடைமட்ட மற்றும் செங்குத்து கோடுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.  

எனவே, புவிமைய கோட்டிலிருந்து துவங்கி நீங்கள் வடக்கு நோக்கி பயணித்தால், முன்னுற்று அறுபது கிடைமட்ட அட்ச ரேகைகளை கடந்து பூமியை முழுவதுமாக சுற்றி (40,008 கி.மி) மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே தெற்கிலிருந்து வந்து சேர்வீர்கள். அதுபோல, இங்கிலாந்தில் உள்ள  கிரீன்விச் என்ற இடத்திலிருந்து துவங்கும்  மைய தீர்க்க ரேகையிலிருந்து நீங்கள் கிழக்கு நோக்கி பயணித்தால் முன்னுற்று அறுபது செங்குத்து தீர்க்க ரேகைகளை கடக்கும்போது பூமியை முழுவதுமாக சுற்றி (40,075 கிமி) மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே மேற்கிலிருந்து வந்து சேர்ந்து இருப்பீர்கள். (இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பூமியின் துருவபகுதிகள் சற்றே தட்டையாக இருப்பதால் கிழக்கு மேற்காக பூமியை சுற்றுவதை விட, வடக்கு தெற்காக பூமியை சுற்றி வந்தால் அறுபத்து ஏழு கிலோமீட்டர்கள் குறைவாக இருக்கும்).   

ஆனால், பூமியின் மொத்த சுற்றளவு சுமார் நாற்பது ஆயிரம் கிலோமீட்டர் இருக்கும்போது, வெறும் முன்னுற்று அறுபது கிடைமட்ட மற்றும் செங்குத்து கோடுகளால் பிரிப்பதால் ஒவ்வொரு கோட்டுக்கும் இடையே சுமார் நூற்று பதினோரு கிலோமீட்டர்கள் இடைவெளி உள்ளது.  இந்த இடைவெளியில் எங்கோ ஒரு புள்ளியில் நீங்கள் நிற்கும்போது அதையும் ஜிபிஸ் துல்லியமாக உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் இல்லையா? அது எப்படி என்று பார்ப்போம்.

அதற்காக, ஒவ்வொரு கிடைமட்ட அல்லது செங்குத்து கோடும் நூற்று பதினோரு (111 km) கிலோமீட்டர் தொலைவு கொண்ட ஒரு டிகிரியாக கணக்கிடப்படுகிறது.   ஒரு டிகிரிக்குள் உள்ள தொலைவு அறுபது நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் என்பது 1.85  கிமி தொலைவு ஆகும். ஒவ்வொரு நிமிடமும் அறுபது நொடிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, இதில் ஒரு நொடி என்பது 30 மீட்டர் தொலைவு ஆகும்.   
   
உதாரணமாக, புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகே நின்று கொண்டு ஜிபிஸ் கருவியை இயக்கினால் அது கீழ்கண்ட எண்களை இரண்டு வரிசையாக காட்டும். (நன்றி கூகிள் எர்த்).

11°55'56.95"N
79°50'9.58"E

மேற்கண்ட எண்களில் முதல் வரிசையானது கிடைமட்ட (அட்சரேகை) கோட்டையும், இரண்டாவது வரிசையானது செங்குத்து (தீர்க்க ரேகை) கோட்டையும் குறிக்கின்றன. முதல் வரிசையில் உள்ளபடி நீங்கள் புவி நடுக்கோட்டிலிருந்து 11 வது டிகிரியில், 55வது நிமிடத்தில், 56.95 வது நொடியில் நின்று கொண்டு இருக்கின்றீர்கள். கடைசியில் உள்ள N, புவி நடுக்கொட்டின் வடக்குப்புறமாக நீங்கள் இருப்பதை குறிக்கின்றது. இதற்கு முந்தைய பத்தியில் விளக்கியுள்ளபடி கணக்கிட்டால், புவி நடுக்கோட்டிலிருந்து 1324.5 கிமி வடக்கில்  நீங்கள் நின்று கொண்டு இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.   

அதே போல, இரண்டாவது வரிசியில் உள்ளபடி நீங்கள் கிரீன்விச் தீர்க்க ரேகையிலிருந்து 79 வது டிகிரியில், 50 வது நிமிடத்தில், 9.58 நொடிகளில் நின்று இருக்கின்றீர்கள். இதில் கடைசியில் உள்ள  என்ற எழுத்து, நீங்கள் செங்குத்து மைய கோடான  கிரீன்வீச்  தீர்க்க ரேகையின் கிழக்கு புறமாக நின்று கொண்டு இருப்பதை குறிக்கின்றது.

உலகில் உள்ள எல்லோருக்கும், எல்லா இடங்களின் பெயர்களும் தெரியாது என்பதாலும், நடுக்கடலில் விலாசம் விசாரிக்க டீக்கடைகள் இல்லாததாலும், இந்த கோடுகளை பயன்படுத்தி கடலில் ஒரு படகு எத்தனையாவது கிடைமட்ட  மற்றும் செங்குத்து கோடுகள் சந்திக்கும் புள்ளியில் பழுதடைந்து நின்று கொண்டு இருக்கிறது என்பதை ஜிபிஸ் கருவி கொண்டு அறிந்து மீட்பு பணிகளை துரிதமாக செயல்படுத்தலாம். மேலும், இன்றைய நவீன விமான சேவையில் ஜிபிஸ் தொழிநுட்பம் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

     தமிழக மீனவர்கள் ஜிபிஸ் கருவியை பயன்படுத்துவது எப்படி?

தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஜிபிஸ் கருவி பரவலாக பயன்படுத்துகின்றனர். இந்த கருவியை கொண்டு, கடலில் ஒரு இடத்தில் வலையை போட்டவுடன் அதன் பாயிண்டை (ஒரு பட்டனை அழுத்தியதும் அந்த இடத்தின் தீர்க்க ரேகை மற்றும் அட்ச ரேகை புள்ளிகளை தானாக அந்த கருவி பதிவு செய்யும்) குறித்து கொள்கின்றனர்.

மீண்டும் மறுநாள் அதே இடத்திற்கு சென்று வலை எடுக்க மற்றொரு பட்டனை அழுத்தியதும் ஜிபிஸ் கருவி வலை போட்ட இடத்தை நோக்கி வழிகாட்டும். தற்போதுள்ள ஜிபிஸ் கருவிகள், ஒரு பட்டனை அமுக்கியவுடன், மற்ற எல்லாவற்றையும் பார்த்து கொள்வதால் பயன்படுத்த எளிமையாக உள்ளது.   

பல ஆயிரம் ருபாய் மதிப்புள்ள வலையை ஆழ்கடலில் மீண்டும் கண்டுபிடிக்க உதவும் இந்த கருவியை மேலும் எவ்வாறு செம்மையாக பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.


கடலுக்கு செல்லும் மீனவர்கள் ஜிபிஸ் கருவியை பராமரிக்கும் முறைகள்:

மீனவர்கள் ஜிபிஸ் கருவியை மேலும் செம்மையாக பயன்படுத்துவதற்கான சில குறிப்புகளை இங்கு தருகிறேன். ஜிபிஸ் கருவி நேரடியாக செயற்கைகோளுடன் தொடர்பு கொண்டு செயல்படுவதால், செல்போன்களை விட மின்காந்த அலைகள் அதிகமாக இருக்கும். எனவே, பேட்டரிகள் வேகமாக தீர்ந்து விடும். எனவே, மீனவர்கள் தங்களுக்கு தேவையில்லாத பட்சத்தில் ஜிபிஸ் கருவியை “சுவிட்ச் ஆப்” செய்து வைக்கவும். இதன்மூலம் நீண்ட நேரம் பேட்டரி பயன்படுவதோடு, உங்கள் உடல் நலத்திற்கும் நல்லது. சிலர், ஜிபிஸ் கருவியில் பேட்டரி தீர்ந்தவுடன், படகு இஞ்சினில் வைத்து சூடு படுத்தி விட்டு மீண்டும் பயன்படுத்துவதாக கேள்விபட்டு இருக்கின்றேன். இவ்வாறு செய்வதால் பேட்டரியில் உள்ள அமிலம் ஜிபிஸ் கருவிக்குள் இறங்கி கருவி பழுதடையும் வாய்ப்பு உள்ளது. எனவே, சில ஆயிரம் ருபாய் செலவு செய்து ஜிபிஸ் கருவியை வாங்கும்போது, அத்துடன்  சில ரூபாய்கள் கொடுத்து இரண்டு எக்ஸ்ட்ரா பேட்டரிகளும்  வாங்கினால், கடலில் இருக்கும்போது உங்களுக்கும் உங்கள் ஜிபிஸ் கருவிக்கும் பாதுகாப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ஜிபிஸ் கருவியை ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியில், எப்போதும் இரண்டு எக்ஸ்ட்ரா பேட்டரிகளுடன் எடுத்து செல்லுங்கள். மீன்பிடிக்க கிளம்பும்போது, கருவி நன்றாக இயங்குகிறதா என்பதையும், கருவியில் உள்ள பேட்டரிகள் சார்ஜ் இருக்கின்றதா என்பதையும் பரிசோதித்து கொள்ளுங்கள்.

ஜிபிஸ் கருவியின் மேல்புறத்தில் உள்ள உட்பொதிந்த ஆண்டேன்னா நேரடியாக செயற்கைகோளுடன் தொடர்பு கொள்ள வேண்டும். எனவே, ஜிபிஸ் கருவியை செங்குத்தாக பிடித்து கொண்டு பயன்படுத்தவும். மேலும், இவ்வாறு செய்வதால் கருவியின் மின்னணு திரை நேரடியாக கடலில் அடிக்கும் கடுமையான வெயிலில் படமால் பாதுகாக்க முடியும்.

கடலுக்கு செல்லும் மீனவர்கள் ஜிபிஸ் கருவியை பயன்படுத்தும் முறைகள்

நீங்கள் புதிதாக ஒரு ஜிபிஸ் கருவி வாங்கியவுடன், ஏற்கனவே ஜிபிஸ் கருவி வைத்துள்ள உங்கள் நண்பரையும் அழைத்து சென்று வலை போட்ட இடத்தினை இரண்டு கருவிகள் மூலமாக பதிந்து கொள்ளுங்கள். மீண்டும் வலை போட்ட இடத்திற்கு செல்லும்போது, இரண்டு கருவிகளையும் பயன்படுத்தி அந்த இடத்திற்கு செல்லுங்கள். இதன்மூலம், உங்கள் கருவி சரியாக செயல்படுகிறதா என்பதையும், நீங்கள் சரியாக கருவியை இயக்க கொண்டீர்களா என்பதையும் தெரிந்து முடியும். அதுமட்டுமல்லாமல், முதல் முறையாக ஜிபிஸ் கருவியை பயன்படுத்தும்போது ஏற்படும் சிறு பிழைகளால் வலை போட்ட இடத்தின் பாயிண்ட் பதியாமல் போனால், நீங்கள் உழைத்து உருவாக்கிய பல ஆயிரம் மதிப்புள்ள வலைகள் காணாமல் போவதையும் தடுக்கலாம். 

உங்கள் ஊர் படகுத்துறையின் ஜிபிஸ் எண்ணை நிரந்தரமாக ஜிபிஸ் கருவியில் பதிந்து கொள்ளுங்கள், இதன் மூலம் உங்கள் ஊரிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்க எவ்வளவு தொலைவு சென்று இருக்கின்றீர்கள் என்பதை அவ்வபோது பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை படகு பழுதாகும்போதோ அல்லது கடல் சீற்றத்தினால் திசை மாறும்போதோ மீண்டும் துல்லியமாக கரைக்கு வர இதுவும் உதவியாக இருக்கும்.

உதாரணமாக, உங்கள் படகு நடுக்கடலில் பழுதாகி நிற்பதாக வைத்துகொள்வோம். அப்போது கடலோர காவல் படையையோ அல்லது உங்கள் நண்பர்களையோ செல்போனில் அழைத்து உங்களை மீட்டு செல்லுமாறு அவசர அழைப்பு விடுக்கின்றீர்கள். உங்களை நோக்கி அவர்கள் விரைவாக, துல்லியமாக வந்து சேர ஜிபிஸ் கருவியை நிச்சயமாக நீங்கள் பயன்படுத்தலாம்.

அது எவ்வாறு என்பதை இப்போது பார்ப்போம். மீனவர்கள் பொது வாக ஒரு வலைபோட்ட இடத்தின் பாயிண்டை ஜிபிஸ்ஸில் குறித்தவுடன் அதை அதன் மெமாரியில் சேமித்து மீண்டும் அதை எடுத்து பயன்படுத்துவார்கள்.  அதாவது, செல்போனில் உங்கள் நண்பரின் செல்போன் எண்ணை  சேமித்து மீண்டும் அவருக்கு அழைப்பு விடுப்பது போல ஆகும். ஆனால், அந்த குறிப்பிட்ட பாயிண்டை சேமிக்கும்போது அதன் அட்ச மற்றும் தீர்க்க ரேகையை குறிக்கும் எண்களை பொதுவாக கவனிப்பதில்லை. உதாரணமாக, உங்கள் செல்போனில் உங்கள் நண்பரின் பெயரை “ராஜ்குமார்” என்றோ அல்லது சுருக்கமாக “ராஜா” என்றோ, எப்படி குறிப்பிட்டு இருந்தாலும், அவரின் செல்போன் எண் ஒன்றுதான் இல்லையா? அதுபோலவே, ஒரு இடத்தின் ஜிபிஸ் பாயிண்டை பதியும்போது நீங்கள் அந்த பாயிண்டை, எந்த எண் அல்லது பெயர் அல்லது குறியீடு வைத்து சேமித்தாலும், அதன் அட்ச மற்றும் தீர்க்க ரேகை புள்ளிகள் எல்லா ஜிபிஸ் கருவிகளிலும் ஒரே இடத்தை நோக்கித்தான் காட்டும்.    

இதன் அடிப்படையில், கடலில் உங்கள் படகு பழுதாகி இருக்கும்போது அவசர அழைப்பை விடுக்கும்முன்னர், ஜிபிஸ் கருவியை இயக்கி அந்த இடத்தின் பாயிண்டை குறித்து கொள்ளுங்கள். மேலும், அந்த பாயிண்டை குறிக்கும்போது, அதே பக்கத்தில் கீழ்பகுதியில் தெரியும் அட்ச மற்றும் தீர்க்க ரேகை எண்களை குறித்து கொள்ளுங்கள். உதாரணமாக அட்ச மற்றும் தீர்க்க ரேகை புள்ளிகள் கீழ்கண்ட அமைப்பில் இருக்கும்.

உதாரணத்திற்கு (குறிப்பு: இது உதாரணம் மட்டுமே)

அட்ச ரேகை 10°16'56.76"N
தீர்க்க ரேகை 79°30'45.05"E

நீங்கள் கடலில் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள், என்பதை பொருத்து மேற்கண்ட உதாரணத்தில் இருப்பதை போன்ற அமைப்பில், எண்கள் மாறும்.  அந்த  எண்களை  sms மூலமாகவோ அல்லது போன் அழைப்பு மூலமாகவோ உங்களை காப்பற்ற வருபவருக்கு தெரிவிக்கலாம். மேலும், மீட்புக்குழுவை சேர்ந்தவர்கள், தங்களுடைய ஜிபிஸ் கருவியில் அந்த எண்களை பதிவு செய்து கொண்டவுடன், கடலில் எந்த திசையில், எவ்வளவு தூரத்தில் மீட்க பட வேண்டிய படகு தத்தளித்து கொண்டு இருக்கின்றது என்பதை அறிந்து, அதற்கேற்றவாறு எரிபொருளும், ஆட்களும் மீட்பு கருவிகளும் எடுத்துகொண்டு செல்ல முடியும். எனவே, ஜிபிஸ் கருவியை பற்றி கடலில் மாட்டி கொண்டவரும் அவரை காப்பாற்ற வருபவரும் நன்கு தெரிந்து வைத்திருக்கும்பட்சத்தில், மிக எளிமையாகவும், உடனடியாகவும் மீட்பு நடவடிக்கை அமையும். எனவே, பாதுகாப்பான கடல் பயணத்திற்கு ஜிபிஸ் ஒரு சிறந்த நண்பன் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.