தினத்தந்தியில் கடந்த 1.12.2013 அன்று வெளியான எனது கட்டுரை (before editing)
கள அறிவியல் ஆராய்ச்சி கட்டுரை
Dr.V.பாலாஜி, கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர், ஓம்கார் பௌண்டேஷன்
பட்டுக்கோட்டை
மீன்களின்
முக்கியத்துவமும், மீன்வள குறைவும்:
கடல் மீன்கள் நமது உடல்
வளர்ச்சிக்கு தேவையான புரதசத்துக்களை அளிக்கின்றன. சைவ உணவு வகைகளில் சிறிதளவே காணப்படும் அமினோ
அமிலங்கள் கடல் மீன்களில் அதிக அளவில் காணப்படுவதால், உடல் ஆரோக்கியத்திற்கு மீன்கள்
முக்கிய பங்காற்றுகின்றன. மீன் பிடி
தொழில் நம் நாட்டிற்கு பலகோடி ரூபாய், அந்நிய செலாவணியை அளிப்பதால், நாட்டின்
நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுகின்றன. எனினும், கடந்த இருபது ஆண்டுகளில் கடல் மீன் பிடி தொழில்
தமிழகத்தில் தொடர்ந்து சரிந்து வருகிறது. மாறி வரும் தட்ப வெப்ப நிலையாலும், வரம்பு
மீறிய மீன்பிடி முறைகளாலும் மற்றும் அதிகரிக்கும் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கையாலும் மீன் வளம் பெரிதும்
பாதிக்கபட்டுள்ளது.
செயற்கை பவளப்பாறைகளும் அதன் பயனும் :
நம் தமிழக கடலுக்கு அடியில்
உள்ள மீன் உற்பத்தி இடங்கள் மற்றும் வாழிடங்கள் போன்றவற்றை பாதுகாத்து, அவற்றின்
உற்பத்தியை அதிகரிக்கும் செயல்முறைகளை வகுப்பதன் மூலம் மீண்டும் பழைய நிலைக்கே
மீன்கள் அதிகம் கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது. அந்த வாய்ப்புகளில் ஒன்றாக செயற்கை
பவளப்பாறைகளை உருவாக்குதலை எடுத்துக்கொள்ளலாம்.
பவளப்பாறைகள் என்பவை கடலுக்கு அடியில் மீன்கள் உற்பத்தியாகி, வாழும்
இடமாகும். இத்தகைய இயற்கை பவளப்பாறைகள்
எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. இவ்வாறு, இயற்கையான பவளப்பாறைகள் இல்லாத
இடங்களில், செயற்கை பவளப்பாறைகளை உருவாக்குவதன் மூலம், மீன்பிடி தொழிலை மேம்படுத்த
முடியும். பல்வேறு நாடுகளில் செயற்கை பவளப்பாறைகள் மீன் உற்பத்தி தளமாகவும், சிறு
மீன்களுக்கு மறைவிடமாகவும் பயன்படுகின்றன. செயற்கை பவளப்பாறைகளில் வாழும் சிறு
மீன்களை வேட்டையாட கொடுவா, சீலா, திருக்கை போன்ற பெரிய மீன்கள் வருவதால் மீன்கள் எப்போதும்
கூட்டமாக அங்கு காணப்படும். எனவே, இதனை கருத்தில் கொண்டு மத்திய மீன்வள ஆராய்ச்சி
மையத்துடன் இணைந்து தமிழக மீன்வளத்துறை தமிழகத்தின் ஆறு கடலோர மாவட்டங்களில் கடலுக்கு
அடியில் செயற்கை பவளப்பாறைகளை இட்டுள்ளது.
இவற்றை தயாரிக்க சிமெண்ட் மற்றும் கம்பியை வார்ப்பு அச்சுகளில் இட்டு முக்கோணம்
மற்றும் வட்ட வடிவங்களில் தயாரிக்கப்பட்டு, உலர்த்தி பின்பு படகுகளின் மூலம் கடலுக்குள்
போடப்படுகின்றன. அதில் ஒருபகுதியாக, தஞ்சை
மாவட்டத்தில் சேது பாவா சத்திரம் மற்றும் மனோரா போன்ற இடங்களில் கரையிலிருந்து சுமார் ஏழு
கிலோமீட்டர் தொலைவில் செயற்கை பவளப்பாறைகள் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் போடப்பட்டன.
கடலுக்குள் ஆராய்ச்சி செய்த முறை:
மீனவர்களின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்த உண்மையில் இவை எந்த அளவுக்கு பயன்படுகிறது என்பதை உறுதி
படுத்த, ஓம்கார் பௌண்டேஷன் சார்பில் கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் பாலாஜியால்
மீன் வளத்துறையின் உதவியோடு கடந்த ஒரு வருடமாக, தஞ்சை மாவட்ட கடலுக்கு அடியில்
ஆய்வு மேற்கொள்ளபட்டது. இந்த ஆய்விற்காக
இரும்பினால் செய்யப்பட்ட சட்டத்தில், ஒரு சிறிய நீர்புகா டிஜிட்டல் வீடியோ கேமரா
பொருத்தப்பட்டது. கேமராவின் முன்பகுதியில்
சுமார் ஒன்றரை மீட்டர் தூரத்தில், மீன்களுக்கான இரை கட்டப்பட்டு, அதனருகில் ஒரு
ஸ்கேல் பொருத்தப்பட்டது. கடலுக்குள் சுவாச கருவிகளுடன் (scuba diving) இறங்கி செயற்கை
பவளப்பாறைகள் உள்ள இடங்களில் இக்கருவியை பொருத்தி ஆய்வு செய்யபட்டது. இந்த கருவியில் பொருத்தப்பட்ட இரையை சாப்பிட மீன்கள்
வரும் போது, அவை கேமராவில் பதிவு செய்யபட்டு அவற்றின் வகைகள், எண்ணிக்கை மற்றும் உடல்
நீளம் போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்யபட்டது.
இதே கருவியை, கடல் தாழைகள் மற்றும் கடல் பாசிகள் உள்ள இடங்களிலும் இறக்கி அங்குள்ள
மீன்களை செயற்கை பவளப்பாறை பகுதியில் உள்ள மீன்களோடு ஒப்பிடப்பட்டது.
கடல் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு
இந்த ஆராய்ச்சியில், கடல் தாழைகள் மற்றும் கடல் பாசிகள் இருக்கும்
இடங்களை விட செயற்கை பவளப்பாறைகள் இருக்கும் இடங்களில் அதிக மீன்கள் இருப்பதை
கண்டறிய முடிந்தது. செயற்கை
பவளப்பாறைகளில், இருபது வகையான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன்களான ஊடகம், ஊளி, கிளாத்தி, ஓரா, செப்பிலி, கொடுவா,
நெத்திலி, கீலி, செங்கனி, களவா, பன்னா, குதிப்பு, கிழங்கான், வாவல், குமுளா,
கூறல், பருத்தி வெளமீன், கிளிமீன் மற்றும்
விளமீன் போன்றவை அதிக எண்ணிக்கையில் இருந்தன. இவற்றில் கீலி மீன் பெரிய மீன்களை
பிடிப்பதற்கு தூண்டில் இரையாக பயன்படுகிறது, மற்ற அனைத்து மீன்களும் உள்நாட்டு
மற்றும் வெளிநாட்டு சந்தையில் நல்ல விலை போகக்கூடிய மீன்களாகும். கடலில் இயற்கையாக மீன்கள் உற்பத்தியாகும் இடமாக
விளங்கும் கடல் தாழைகளில் அதிக அளவில் மீன் குஞ்சுகள் இருந்தன. மேலும், அங்கு ஊடகம், ஊசி கனவா, ஓட்டு கனவா,
சீலா, ஓரா, செப்பிலி, கொடுவா, முரல், நெத்திலி, விளமீன், கீலிமீன், தாழஞ்சுறா,
செங்கனி போன்ற மீன்கள் கண்டறியப்பட்டன.
கடல் பாசிகள் உள்ள இடங்களில் ஓட்டு கனவா, ஓரா, கெடுத்தை மற்றும் கீலி போன்ற
நான்கு வகை மீன்கள் கேமராவில் பதிவாகி இருந்தன.
இந்திய இலங்கைக்கு இடைபட்ட பாக் ஜலசந்தி பகுதியில் செய்யப்பட்ட இந்த ஆய்வு
முடிவுகளின் படி, செயற்கை பவளப்பாறைகளினால் கடலில் உள்ள மீன்கள் கவரப்பட்டு
ஓரிடத்தில் கூட்டமாக இருப்பதையும், இயற்கையான கடல்தாழைகள் மற்றும் கடல் பாசிகளை
விட வகை வகையான, அதிக எண்ணிக்கையில் மீன்கள் இருப்பதையும் கண்டறிய முடிந்தது. மேலும், இப்பகுதியில் உள்ள சிறு, குறு
மீனவர்களுக்கு வருமானத்தை தரும் அடிப்படை ஆதாரமாக இது விளங்குகிறது. இங்குள்ள மீனவர்களை கேட்டதில், செயற்கை
பவளப்பாறைகள் உள்ள பகுதிகளில் மீன்கள் கூட்டமாக இருப்பதையும் அதை சுற்றியுள்ள
பகுதிகளில் மீன்பிடிக்கும்போது நல்ல வருமானம் கிடைப்பதாகவும் கூறினார்கள்.
முடிவுரை:
பொதுவாக, நம் தமிழக
மீன்வளங்கள் குறைந்துள்ளதால், மீனவர்கள் நீண்ட தூரம் சென்று இலங்கை கடற்படையால்
தாக்கபடுவதும், சிறைபிடிக்கபடுவதும் தொடர்கதையாகி வரும் சூழலில், அதற்கு மாற்று
வழி காணும் பல்வேறு திட்டங்களின் ஒரு பகுதியாக இதை போன்ற செயற்கை பவளப்பாறைகளை மேலும்
உருவாக்கி மீன்வளங்களை பெருக்கவும், மீன்பிடிதொழிலை காக்கவும் முடியும் என்பது இதன்
மூலம் உறுதியாகிறது. எனினும், செயற்கை பவளப்பாறைகள் போடப்படும் இடங்கள்
தேர்ந்தெடுக்கபடும்போது, கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களால் கடலுக்குள் இறங்கி
ஆராய்ச்சி செய்யப்பட்டு, அப்பகுதி மீனவர்களுடன் கலந்து ஆலோசிப்பது அவசியமாகும்.
இதன் மூலம், இயற்கையாக அங்குள்ள கடல் தாழைகள் மற்றும் பிற உயிரினங்கள்
பாதிக்கப்படாமல் மீன்வளத்தை பெருக்கலாம். மேலும்,
கடலுக்குள் போடப்பட்ட செயற்கை பவளப்பாறைகள் சேதப்படுத்தப்படாமல் பாதுகாத்தால், அவை
தொடர்ந்து மீனவர்களின் வாழ்வாதாராமாக எப்போதும் விளங்கும்.