இன்று காலை சேது பாவா சத்திரம் கடலோர காவல் நிலையத்திலிருந்து போன் வந்தது. தஞ்சை மாவட்ட கடலோர கிராமமான கணேச புரம் அருகே ஒரு திமிங்கலம் இறந்த நிலையில் ஒதுங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளதாக காவல் நிலைய உதவி ஆய்வாளார் திரு. பாலசுப்ரமணியன் கூறினார்கள். உடனே எனது குழுவினருடன் அந்த இடத்தை நோக்கி விரைந்தோம். என்னுடைய கடல் நீந்து கருவிகளையும் எடுத்து கொண்டு சென்றோம். இரண்டு நீர் புகா புகைப்பட கருவிகளையும் எடுத்து சென்றோம். கணேசபுர த்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த திமிங்கலம் கரையிலிருந்து பார்க்கும்போதே நன்றாக தெரிந்தது. அந்த கடல் பாலுட்டியின் வயிற்று புறம் வெள்ளையாக இருப்பதாலும், திமிங்கலம் தலை கீழாக புரண்டு கிடந்தாலும் வெகு தூரத்தில் இருந்தே அதை தெளிவாக பார்க்க முடிந்தது. வனத்துறை, கடலோர காவல்துறை, கால்நடை மருத்துவத்துறையை சேர்ந்தவர்களுடன் இணைந்து இரண்டு படகுகளில் அனைவரும் சென்றோம். போகும் வழியிலே எனது நீச்சல் உடைகளை அணிந்து கொண்டு தயாராக இருந்தேன்.
தஞ்சை மாவட்டத்தின் தெற்கு கடல் பகுதி மிகவும் ஆழம் குறைவாக இருந்ததால், சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்திலும், வெறும் 1.5 மீட்டர் மட்டுமே ஆழம் இருந்தது. பாசிகள் அடர்வாக வளர்ந்து இருந்ததால், படகில் இருந்து குதித்ததும் கால் பாசிகள் அழுத்தி, சேற்றில் புதைய ஆரம்பித்தது. எனது துடுப்புகளை அணிந்து கொண்டது சுமார் இரண்டு அடி மட்டுமே உள்ள நீர் பரப்பில் நீந்த துவங்கினேன்.
இறந்து அழுகிய நிலையில் இருந்த திமிங்கல உடலிலிருந்து துர்நாற்றம் வீசி கொண்டு இருந்தது. திமிங்கல உடலை சுற்றியும் அதன் கொழுப்பு மற்றும் உடல் பாகங்கள் மிதக்க துவங்கியிருந்தாதால் யாரும் அருகில் சென்று பார்ப்பது கடினமாக இருந்த்தது.
எனினும், அதன் அருகே சென்று பார்த்தபோது என் தலை, உடல் எங்கும் திமிங்கல கொழுப்பு எண்ணை படிய ஆரம்பித்தது. அப்போது, கால் நடை துறை மருத்துவர் ஆய்வுக்காக, ஒரு சிறிய உடல் துண்டு வெட்டி எடுக்கப்பட்டது.
கேமராவை எடுத்து கொண்டு சில புகைப்படங்களையும், வீடியோவையும் பதிவு செய்து கொண்டேன். சுமார் 35 அடி நீளமுள்ள இந்த வகை திங்கலங்கள்
Rorqual என்ற வகையை சேர்ந்தவை. உடல் மிகவும் அழுகி இருந்ததாலும், அந்த திமிங்கலத்தின் உடல் பகுதி சேற்றில் புதைந்து இருந்ததாலும், அதன் விலங்கின அறிவியல் பெயரை தெளிவாக தற்போது கூற முடியவில்லை.