Friday, November 19, 2010

புதிய வகை வெளிநாட்டு மீன் கண்டுபிடிப்பு

நவம்பர் 14 ஆம் தேதி (14th November 2010) அன்று தஞ்சாவூர் மாவட்டம், அம்மணிசத்திரம் கிராமத்தை சேர்ந்த அரும்பு என்ற மீனவர் அங்குள்ள வண்ணான் ஓடை குளத்தில் மீன்பிடிக்க சென்றபோது சுமார் ஒரு அடி நீளமுள்ள புதிய வகை கெழுத்தி மீன் வலையில் சிக்கியது. அவர் அந்த மீனை ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேலிடம் ஒப்படைத்தார். அவர் ஓம்கார் பௌண்டேஷன் நிறுவனத்திற்கு அளித்த தகவலின் பேரில், டாக்டர்.வே.பாலாஜி அந்த மீனை ஆய்வு செய்தார்.

டாக்டர். வே.பாலாஜி அளித்த தகவலின்படி இந்த மீனுடைய அறிவியல் பெயர் டீரோகோபிளிதைஸ் பர்டாலிஸ் என்பதாகும். இது லோரிகாரிடே என்ற உடல் முழுவதும் கவசம் போன்ற தோல் கொண்ட கெழுத்தி வகையை சேர்ந்த மீன் ஆகும். தென் மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் மட்டுமே வாழக்கூடிய இந்த மீன்கள் நம் பகுதியில் கண்டுபிடிக்கபட்டது ஆச்சரியமான விஷயமாகும். இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் அழகு மீன்களாக வளர்க்கப்படுவதற்காக தென் அமெரிக்காவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. அப்படி இந்தியாவிற்கு வந்த இந்த மீன்கள் இங்குள்ள ஆறு குளங்களில் உயிருடன் தெரிந்தோ தெரியாமலோ விடப்படும்போது, அவை இனப்பெருக்கம் செய்து மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகின்றன. இதற்கு முன்பு இந்த வகை மீன்கள் தமிழகத்தின் வேறு சில ஊர்களிலும், கேரளாவில் உள்ள திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் உள்ள நன்னீர் பகுதிகளிலும் கண்டரறியப்பட்டுள்ளன.

மேற்கண்ட அம்மணிச்சத்திரம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டு கெழுத்தி மீன், குளத்தின் அடிப்பகுதியில் உள்ள பாசி மற்றும் சேற்றில் உள்ள உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடியதாகும். இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் அதிகமாகும்போது, இங்குள்ள விரால் மீன் போன்ற மற்ற மீன்களுக்கு உணவு கிடைக்காமல் போய்விடும். இங்கு இயற்கையாகவே உள்ள மீன்களின் முட்டையை இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் சாப்பிடகூடிய வாய்ப்பு உள்ளதால் குளம், ஏரி போன்ற நன்னீர் பகுதிகளில் உள்ள மீன்வளமும் பாதிக்கப்படக்கூடும். மேலும், ஓடு போன்ற கடினமான இந்த மீனின் உடல் பகுதி மீனவர்களின் வலையை சேதப்படுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது .

உலகம் முழுவதும் இந்த மீன்களை போன்ற உயிருள்ள விலங்குகளையும் தாவரங்களையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், அங்கு இயற்கையாகவே உள்ள தாவர, விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பிலிப்பின்ஸ் நாட்டில் ஜானிடர் மீன்கள் என்று அழைக்கப்படும் இந்த மீன்கள், அங்கு இயற்கையாகவே உள்ள மற்ற மீன்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக செய்திகள் உள்ளன.

இந்த வெளிநாட்டு கெழுத்தி மீன்கள் தற்போது குறைந்த எண்ணிகையிலயே உள்ளதால், இவற்றின் மூலமாக தமிழகத்தில் உள்ள நன்னீர் குளங்களிலும், ஏரிகளிலும் உள்ள மற்ற மீன் இனங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படபோகும் பாதிப்பு பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3 comments:

Unknown said...

இன்று (14/04/2015) எங்கள் ஊர் ( நாகைபட்டினம் மாவட்டம் கருப்பூர் கிராமம் ) குளத்தில் மீன்கள் பிடித்து கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இதே வகை கெளுத்தி வகை மீன்களை பிடித்து எங்கள் கிராமத்து மக்கள் தூக்கி வீசி கொண்டிருந்தார்கல். மேலும் விசாரித்து பார்த்தபொழுது இந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த வகைமீன்கள் அதிகமாக பிடிபடுவதாகவும் சாதரணமாக அதிகமாக கிடைக்கும் கெண்டை வகை மீன்கள் வருடா வருடம் குறைந்து கொண்டே வருவதாகவும் தெரிவித்தார்கள்.

Keerthi Yadav.

Unknown said...

மேலும் இந்த வகை மீன்கள் பற்றிய ஆய்வு முடிவுகள்
யாருக்காவது தெரிந்தால் இங்கே பதிவிடவும்.

Keerthi Yadav

Unknown said...

நான் வீரான ஏரியில் மீன் பிடித்தபோது என் வலையில் 10 கிலோ மதிப்பில் 35 மீன் மாட்டியது. இவ்வகை கெளுத்தியை நான் நான்கு வருடமாகதான் பார்கிரே.Tanke cleaner. என்றும் இதர்கு நான் வைத்த பெயர். பேய் மீன் என்றும் அழைபோம். ஆனால் வீரான ஏரியில் மீன் இனபெருக்கம் முற்றிலும் குறைந்து வருகிறது.