Saturday, January 12, 2013

கடல் தாழைகளில் வசிக்கும் மீன் வகைகள் பற்றிய ஆய்வு

ஜனவரி 2013 முதல் ஒரு புதிய முயற்சியாக, தமிழகத்தின் தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் வசிக்கும் மீன் வகைகளை பற்றி ஆய்வில் ஈடுபட்டுள்ளேன்.  இந்த மீன் வகைகள் பிற பெரிய கடல் மீன்களுக்கு உணவாக இருப்பதால், இவற்றை தேடி அவை இந்த கடல் தாழைகள் நிறைந்த பகுதிக்கு வருகின்றன, எனவே மீன்பிடி தொழில் நன்றாக அமைய கடல் தாழைகளும் அவற்றில் வாழும் மீன்வகைகளும் அவசியமாகின்றது.

மேலும், செயற்கை பவளப்பாறைகளில் வசிக்கும் மீன்களையும் கடல் தாழைகளில் வசிக்கும் மீன்களையும் ஒப்பிட்டு, இவற்றில் எங்கு அதிக வகை மற்றும் எண்ணிக்கைகளில் மீன்கள் உள்ளன என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இந்த ஆய்விற்கு களப்பணி மற்றும் அதற்கான கடல் ஆய்வு தகுதிகள் வேண்டியுள்ளது.  இந்த ஆய்வை செய்வதற்காக, ஒரு நீரடி கேமராவை, இரும்பினால் தயாரிக்கப்பட்ட சட்டத்தில் பொருத்தி கடலுக்குள் இறக்கினோம்.  இந்த இரும்பு சட்டத்தில் ஒரு குழாயை பொருத்தி அதன் ஒரு முனையில் மீன், இறால் இறைச்சியை கட்டி வைக்கப்பட்டது.

இந்த மீன் இறைச்சியால் ஈர்க்கப்பட்ட மீன்கள், அதை உண்ணும்போது காமெராவில் பதிவு செய்து அதன் வகைகளை பற்றிய ஆய்வு செய்து வருகிறோம்.

நேற்று இந்த ஆய்விற்காக, சிலிண்டர் கட்டிக்கொண்டு கடலடிக்கு சென்று இந்த அமைப்பை இயங்க செய்து விட்டு மீண்டும் படகுக்கு வந்து விட்டேன்.

பின்பு ஒருமணி நேரம் கழித்து, மீண்டும் காமெராவை வெளியே எடுத்து அதில் பதிவாகியுள்ள வீடியோவை மடிக்கணினிக்கு சேமித்தேன்.

இந்த ஆய்வை மீண்டும் மீண்டும் பல்வேறு பருவ காலங்களில் செய்யபோகிறோம். இதன் மூலம், கடல் தாழைகளில் வசிக்கும்/உற்பத்தியாகும் மீன் இனங்கள் குறித்த தெளிவு கிடைக்கும்.  இந்த மீன் இனங்கள் மீன்பிடி தொழிலுக்கு எந்த வகைகள் முக்கியத்தும் வாய்ந்தவை என்பதையும் தெரிந்து கொள்ள இந்த ஆய்வு முடிவு பயன்படும்.

என்னவளம் இல்லை இந்த திருநாட்டில்! நம் பகுதியில் இருக்கும் கடல் வளங்களை பாதுகாத்து முறையாக பராமரிப்பதன் மூலம் மீனவர்கள் நீண்ட தொலைவு சென்று மீன்பிடிப்பதையும்/இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதையும்  தவிர்க்கலாமே!

இந்த ஆய்வு தொடர்பான சில புகைப்படங்கள் இங்கே உள்ளன

இந்த ஆய்வு நடத்தபட்ட இடத்தில் கடல் நீரின் மாதிரி சேகரிக்கப்படுகிறது.

கடல் தரையில் செழித்துள்ள தாழைகளை பாருங்கள்.  இவை மட்டும் கடலுக்கு வெளியில் இருந்தால் பல ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கு பரவியுள்ள ஆப்ரிக்காவின் சவானா புல்வெளி போன்று தோற்றமளிக்கும். கடலுக்குள் இருப்பதால் இவற்றின் முக்கியத்துவம் தெரிவதில்லை.



மீன் உணவுடன் இணைக்கப்பட்டுள்ள அளவுகோல்
இந்த சிறிய கேமரா வீடியோ/போட்டோ பதிவு செய்யும் தன்மை கொண்டது
கடல் தரையில் ஆய்வு கருவியை பொருத்தி காமெராவை பரிசோதித்தபோது...


ஒரு சிறிய வீடியோ தொகுப்பும் பார்க்க கீழ்கண்ட இணைப்பை சொடுக்கவும்.








இந்த வீடியோவில் பதிவாகி உள்ள "கடமுட" சப்தம், கடல் தாழைகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் கேட்கின்றது.  சில மீன் இனங்கள் கடலுக்குள் ஒலிகளை ஏற்படுத்துவதால் இடையிடையே அவற்றையும் நீங்கள் கேட்கமுடியும்.

No comments: