Wednesday, May 22, 2013

டால்பின்களுக்கு ஒரு நற்செய்தி




இந்திய அரசின் சுற்றுசூழல் துறை டால்பின்களை செயற்கை குளங்களில் வைத்து வித்தை காட்டுவதை தடை செய்துள்ளது.  இதன்படி மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அனைத்து மாநில அரசுகளும் டால்பினேரியம் என்று அழைக்கப்படும் டால்பின் வித்தை காட்டும் பொழுது போக்கு மையங்களை அமைக்க தனி நபருக்கோ, குழுவுக்கோ, தனியார் அல்லது அரசு நிறுவனங்களுக்கோ அனுமதிக்க கூடாது என்று மாநில அரசுகளை அறிவுறுத்தபட்டுள்ளது.'

மேலும், கடலில் உள்ள டால்பின்களை  பிடிப்பதையோ, இறக்குமதி செய்வதையோ அல்லது அவற்றை கொண்டு நடத்தப்படும் பொழுபோக்கு நிகழ்வுகளையோ தடை செய்துள்ளது.

இந்திய வன உயிரின காட்சியகத்தின் அறிக்கையின்படி கடல் பாலுட்டிகள் செயற்கையான நீர்நிலைகளில் பிடித்து வைக்கும்போது அவை நிலைத்து வாழ்வதில்லை என்றும், அவ்வாறு பிடித்துவைக்கப்படும் டால்பின்களின் உடல் நலன் மற்றும் மன நலன் போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டு மன அழுத்தம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கான கங்கை டால்பின்கள் மற்றும் ஸ்னப்பின் டால்பின்கள் போன்றவை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் ஷேட்யுல் 1 இன் படி பாதுகாக்கப்பட்ட விலங்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன, எனவே இவற்றை பிடிப்பது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த அறிக்கையின் படி, கடல் பாலுட்டிகள் மிகவும் புத்திசாலியான, மேம்பட்ட விலங்குகளாக இருப்பதால் அவற்றை மனித உருவில் இல்லாத  மனிதர்களாக கருதி அவைகளுக்கான உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது.  எனவே, அவற்றை பிடித்து வைத்து வித்தை காட்டுவதை தடை செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

FIAPO என்ற சுற்றுசூழல் நிறுவனம் இந்த செய்தியை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ளது.  இந்த நிறுவனமே, மத்திய அரசின் இந்த முடிவிற்கான முன் முயற்சிகளை சுற்றுசூழல் துறையினருடனும், மற்ற சுற்றுசூழல் நிறுவனங்களுடனும் இணைந்து முன்னெடுத்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: