Thursday, October 2, 2014

முறல் மீன்கள் மனிதர்களை தாக்குமா?


வெப்பமண்டல நாடுகளில் பரவி உள்ள முறல் மீன்கள், தமிழகத்தில் தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் கடலுக்கு அடியில் வளர்ந்துள்ள கடல் தாழைகள் இவ்வகை மீன்களுக்குபாதுகாப்பான வாழிடத்தையும், உணவையும் அளிப்பதால், முறல் மீன்கள் தங்கள் முட்டைகளை கடல் தாழைகளில் இட்டு இனபெருக்கம் செய்ய பாக் ஜலசந்தி பகுதி மிகவும் வசதியாக உள்ளது. 








உயிரின வகைபாட்டின்படி கோலா மீன்களுக்கு நெருங்கிய உறவான இவ்வகை மீன்கள் மிக நீண்ட உடலையும், கூர்மூக்கும் கொண்டுள்ளன.  முறல் மீன்கள் ஆங்கிலத்தில் NEEDLE FISH  என்று அழைக்கபடுகின்றன.   முறல் மீன்களில் பிள்ளை முரல், நெடுமுறல், கட்டை முரல், அல முரல், வால முரல் மற்றும் வாடைய முரல் போன்ற வகைகள் தஞ்சை மாவட்ட பகுதிகளில் காணப்படுகின்றன . இதில் பிள்ளை முரல் மற்றும் கட்டை முறல் போன்றவை கீழ்தாடைகள் நீண்டு கூர்மையாகவும், மேல்தாடைகள் சிறியதாகவும் இருக்கும்.  நெடுமுறல், வாலமுறல், வாடைய முரல் போன்றவைகளின் மேல் மற்றும் கீழ் தாடைகள் இரண்டும் கூர்மையாக இருக்கும்.   அல முறல் வகைகள் தற்போது மிகவும் அரிதாக காணப்படுகின்றன. பிள்ளை முறல் (ஆள் பாய்ஞ்சான் முறல்) பச்சை நிறத்துடன், உருண்டையான உடலமைப்புடன் இருக்கும். 

(Photo: http://www.mexfish.com/mexico/flat-needlefish/) கடல் நீரின் மேல் பகுதியை ஒட்டியே நீந்தும் முறல் மீன்கள் சிறு கடல் உயிரினங்களையும், சிறிய மீன்களையும் உணவாக உட்கொள்ளும். கூரிய உடலமைப்புடன், நீரின் மேல்பகுதியில் எப்போதும் இவை இருப்பதால், வேகமாக செல்லும் படகுகள் அல்லது வெளிச்சத்தால் அச்சமடைந்து நீரை விட்டு காற்றில் எளிதாக எழும்பி வேகமாக பாய்ந்து செல்லும் தன்மை கொண்டவை.  சுமார் 30 – 35  கிமி வேகத்தில் பாய்ந்து செல்லும் இவை, எதிரே வேகமாக வரும் படகில் நின்று கொண்டு இருக்கும் மனிதரின் உடலில் பாயும்போது மிக பலத்த அல்லது பலத்த காயத்தை ஏற்படுத்தும். சுமார் ஒரு மீட்டர் வரை கூட வளரும் முறல்மீன்கள் இவ்வாறு பாய்ந்தால், மூக்குபகுதி கத்திபோல் உடலை துளைத்து பின் முறிந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தலாம். இவ்வகை நிகழ்வுகள் மிகவும் அரிதாக ஏற்பட்டாலும், இதனால் உலக அளவில்  மனிதர்கள் உயிரிழந்த சில சம்பவங்களும் நடந்துள்ளன.  வியட்நாமில் இதயத்தில் துளைத்த முறல் மீனால் சிறுவன் உயிரிழந்ததும், ஹவாய் தீவுகளில் கண்ணில் வழியாக மூளைக்குள் பாய்ந்த முறல் மீன் உயிரிழப்பை எற்படுத்தியதியும் செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது. இதே  போன்ற ஒரு நிகழ்வு அமெரிக்காவில் ஒரு பெண் கடலில் நீந்தும்போது ஏற்பட்டுள்ளதாக செய்தி உள்ளது.  அப்பெண்ணின் கழுத்து பகுதியில்  பாய்ந்த முறல் மீன் பெரிய அளவில் காயத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது, எனினும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருந்து அவர் காப்பற்றப்பட்டுள்ளார்.  நீருக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்ய்ம்போதும், கடல் பரப்பில் நீந்தும்போதும் இவ்வகை மீன்கள் மனிதர்களின் உடலில் பாய்ந்து காயம் ஏற்படுத்திய சம்பவங்களும் பல நடந்துள்ளன. சமிபத்தில் தஞ்சை மாவட்ட அதிரம்பட்டினத்தில், ஒரு மீனவர் முறல் மீனால் தாக்கபட்ட சம்பவம் நடந்துள்ளது.

(Photo: http://www.mexfish.com/mexico/flat-needlefish/)
முறல் மீன்கள் மனிதர்களை வேண்டுமென்றே தாக்குவதில்லை.  ஆபத்துகளிலிருந்து தங்கள் உயிரை காத்துக்கொள்ள இயற்கையாகவே காற்றில் எழும்பி பாய்ந்து செல்லும் திறனை அவை பெற்றுள்ளன.  மனிதர்களுடன் அப்போது ஏற்படும் எதிர்பாராத விபத்து காரணமாகவே, முறல் மீன்கள் மனிதரகளை துளைத்து காயம் ஏற்படுத்திய சம்பவங்கள் நிகழ்கின்றன. பெரும்பாலான முறல் மீன்கள் இந்த விபத்தில் மனிதர்கள் அல்லது படகுகள் மீது மோதியவுடனேயே இறந்து விடுகின்றன.



எனவே, முதலுதவி பொருட்களை கடலுக்கு செல்லும்போது கொண்டு செல்வது மிகவும் அவசியமாகும்.  முறல் மீன்கள் உடலில் பாய்ந்து விட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவேண்டும். சிறிய அளவிலான காயம் ஏற்பட்டாலும் கூட, கூர்மையான பற்களும் மூக்குபகுதியும் சிறு சிறு துண்டுகளாக உடைந்து விடும் தன்மை இருப்பதால் அவற்றை முற்றிலும் மருத்துவரை கொண்டு அகற்றுவது அவசியமாகும்.   

கட்டுரை 
முனைவர். வே. பாலாஜி, கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர், பட்டுக்கோட்டை 

No comments: