Sunday, January 4, 2026

மருந்தீஸ்வரர் ஆலயம் - மருங்கப்பள்ளம்

lமருங்கப்பள்ளம் மருந்தீஸ்வரர் கோவில், தஞ்சை மாவட்டம்


மாருதியின் மூலிகைமலைத் துண்டம் விழுந்த இடமே! 

மருதநிலம் விழுந்த இடம் மருந்துப் பள்ளமானதே! 


மருந்துப் பள்ளமருவி காலப்போக்கில் மருங்கப் பள்ளமானதே! 

மூலிகைவளர் மருந்துகுளம் தீர்க்கும்பிணி தீர்த்தமானதே!


ஐந்திங்கள் நின்சன்னதியை அன்பர்கள் சுற்றி வர! 

ஐமுழுக்கும்  பசும்பால் படைக்கும் அடியாரின் நோய் தீர!


மன்னன் நோய்தீர அருள்புரிந்த  பாதிரி மருந்தீஸ்வரா! 

மருங்கப் பள்ள மலர்ந்த சர்வேஸ்வரா!


Balaji Vedharajan

Sunday, December 28, 2025

சுனாமி நினைவுகள்

இன்று 26 டிசம்பர் சுனாமி நினைவு தினம்.  21 வருடங்களுக்கு முன், 2004 இல் PhD படிப்புக்காக தயார் செய்து கொண்டு இருந்த காலம்.  
கிறிஸ்துமஸ் பொதுவாக வேளாங்கண்ணியில் ஒரு சிறப்பான காலம். விழாக்கோலம் பூண்டு, பல்வேறு மாநில மக்கள் உற்சாகத்துடன் வருவார்கள்.  அங்கு கடை வைத்து இருக்கும் வியாபாரிகள் இரவு பகலாக வேலை செய்வார்கள்.  

அன்று காலைச் செய்தியில், கடல் அலைகள் தாக்கியதாக தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் வந்து கொண்டு இருந்தது.  சுனாமி என்று பெயர் அப்போது மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை 
தங்கையின் வீடு வேளாங்கண்ணியில் இருந்ததால், பலமுறை ஃபோன் செய்தும் எடுக்கவில்லை. 

பதட்டத்தில் அம்மா உடனே சென்று பார்க்க சொன்னார். அவசரத்தில் ஒரு அம்பாஸடர் காரை வாடகைக்கு எடுத்து கொண்டு நண்பர் அன்புவுடன் கிளம்பினேன். அம்பாஸடர் அரை நூற்றாண்டு காலமாக, நம் ஒவ்வொரு தேவைக்கும் வந்து நிற்கும்.  
சகோதரியுடன் பிறந்த ஆண்களுக்கு எப்போதும் குடும்பத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களை திருமணம் செய்து கொடுத்த பிறகு, என்ன செய்கிறமொ இல்லையோ, அவர்களுக்கு உதவி என்று அழைக்கும்முன் அம்பாசிடர் கார் போல உடனே சென்று நிற்க வேண்டும். 

சகோதரிக்கு பெண் குழந்தை பிறந்து ஆறுமாதங்களே ஆகி இருந்தது. தாய்மாமனாக பொறுப்புக்  கூடி இருந்தது.  கவலையுடன் எதையும் யோசிக்காமல் காரை எடுத்துக்  கொண்டு வேளாங்கண்ணி நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தோம்.  அந்த காலத்தில் அலைப்பேசி ஒரு சிலரிடம் மட்டும் அரிதாக இருக்கும், STD நிலையங்களை தவிர்த்து வேறு தொலைபேசி வசதியில்லை.    நிழல் தரும் புளிய மரங்களை அகற்றிய நிலையில்,  கிழக்கு கடற்கரை சாலை முழுமையடையாத நிலையில் இருந்ததாக நினைவு. 

காரில் நண்பரிடம், MSc வகுப்பில் படித்த  சுனாமி என்ற அலைகளை பற்றி சொல்லிக் கொண்டு இருந்தேன். ஜப்பானில் தான் அது வருமாம், நம்ம ஊருக்கு என்னாச்சு என பேசி கொண்டே வந்தோம்.

கல்விச்சாலை புத்தகங்கள் நம் ஊர் கடல் தொடர்பான வரலாறு, நீரோட்டங்கள், கடல் சார் வாணிகம், கடந்த கால பேரிடர்கள், மீட்டுருவாக்கம், தற்காப்பு மற்றும் பேரிடர் தன்னார்வப்பணி  நடை முறைகள் குறித்து மாணவர்களுக்கு இன்னும் தெளிய சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.   

சுனாமி இதற்கு முன்பும் தமிழகத்தை தாக்கி உள்ளதாக பின்புதான் தெரியவந்தது.  ஆழிப்பேரலை தாக்கிய காவேரி பூம்பட்டிணமும், குமரிக் கண்டமும்   இன்று கடலுக்குள்.  இதை போன்ற இயற்கை பேரிடர்கள் வந்தால் எப்படி எதிர்கொள்வது என்று அறியாத தலைமுறைக்கு 2004 சுனாமி ஒரு பேரிடி. கடல் மட்ட உயர்வும், ஆழிப்பேரலையும் பண்டைய தமிழரின் நாகரிகமும், வாழ்வியலும் பிரிக்க முடியாதது. அடுத்தடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியது.   

ஒரு வழியாக வேளாங்கண்ணி சென்றடைந்தவுடன், நுழைவாயிலை தாண்டியதும் ஒரு பேரமைதி.  மக்கள் யாருமின்றி வெறிச்சோடி போய் இருந்தது.  ஒரு சில வாகனங்கள் மிக  வேகமாக சென்று கொண்டு இருந்தன. நுழைவாயில் அருகே இருந்த தங்கையின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர்கள் அப்போதுதான் தஞ்சை சென்று இருந்தார்கள் என பின்னர் தான் தெரிய வந்தது.  சிலர் அழுதபடி சென்று கொண்டு இருந்தனர். எங்களுக்கு நிலைமையின் தீவிரம் குறித்து புரியவில்லை.

மழைக்கான  அறிகுறிகள் எதுவும் இல்லை. பொதுவாக தமிழ் நாட்டில் மழைக்கால பேரிடர்கள் சில அறிகுறிகளுடன் வரும்.  புயல் கூண்டுகள் ஏற்றப்படும். வானிலை அறிக்கையில் மழை வெள்ளம் குறித்த முன்னேச்செரிக்கை சொல்வார்கள். ஆற்றங்கரையில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தபடுவார்கள்.  வானம் கருக்கும், காற்றுடன் கூடிய மழை இருக்கும். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வார்கள்.  

ஆனால் அன்று, ஒன்றுமே நடக்காதது போல, டிசம்பர் மாத இயல்பில் வானம் இருந்தது.  ஒரே ஒரு வித்தியாசம், வேளாங்கண்ணியின் சாலைகள் மிக அமைதியாக, பரபரப்பு இல்லாமல் இருந்தது.  பேருந்து நிலையம் அருகில் கடை வைத்திருந்த அத்தானின் கடை என்னாச்சு என தெரியவில்லை என பார்க்கச் சென்றோம். வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தை நெருங்க நெருங்க, நிலைமையின் தீவிரத்தை உணர முடிந்தது. பலர் அழுது கொண்டே உறவினரை காணாமல் தவித்து கொண்டு இருந்தனர். அந்த சூழ்நிலையிலும் சில காவலர்கள் மக்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தனர்.  கடற்கரைக்கு செல்லும் மணல் பாதை நெடுக கண்ட காட்சி... இன்றும் கண் கலங்க வைக்கிறது.  இப்படி ஒரு துயர நிலை நம் மக்களுக்கு வந்திருக்ககூடாது.  நின்று கொண்டு இருந்தவர்கள் மீண்டும் ஒரு அலை வருமா என பயந்து கொண்டு இருந்தனர்.  பேரலையின் பேரழிவு நேரடியாக பார்த்தவுடன், அலை மீண்டும் வரலாம் என அச்சம் ஏற்பட்டது.  இதற்கு மேல் அங்கு இருக்கத் தோன்றாமல், காரை நோக்கி விரைந்து வந்தோம். சில மணி நேரங்களில், சுனாமியால் ஏற்பட்ட பெரும் பாதிப்பு குறித்து மேலும் செய்திகள் வரத்துவங்கின. 

அடுத்த நாள், கடலூர் பிளஸ் தொண்டு நிறுவனத்தில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால தன்னார்வலராக பணியாற்ற அழைத்தார்கள்.  ஏற்கனவே அந்த மாவட்ட கடலோர கிராமங்களில் கல்லூரி விடுப்பில் தன்னார்வலராக பணி செய்த அனுபவம் இருந்ததால், உடனே வீட்டில் சொல்லி விட்டு புறப்பட்டேன். பிளஸ் நிறுவனர் அந்தோணி சாமி அவர்கள் , பிற்காலத்தில் ஓம்கார் என்ற NGO நிறுவனம் துவங்க உத்வேகம் அளித்தவர்.  கடந்த 15 வருடங்களாக,  ஓம்கார் மையத்திற்கு சுற்றுசூழல் கல்வி பெற வரும் குழந்தைகளுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு பணிவுடன் இலவச மதிய உணவு அளிக்க, பிளஸ் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களே காரணம்.  பணிவுடன் பிறர்க்கு உணவு பரிமாறல் ஒரு வரம்.  சிவன் அருள்.

வீட்டு விஷேசங்களில், வாழை இலையில் மனமுவந்து ஒரு கரண்டி உணவு பரிமாறியவுடன், பகையிளகி பிரிந்த உறவுகள் சேரும். உணவுப் பரிமாறல் தமிழரின் வாழ்வியலில் பிறர் மீதான அக்கறையை, அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வு. 

சுனாமிக்கு பிறகு தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தொண்டு நிறுவன ங்களுடன் இணைந்து இரவு பகலாக மக்களுக்கு பெரும் உதவி செய்து கொண்டு இருந்தது. உள்துறை அமைச்சகம் சர்வதேச உதவிகளை பேரிடர் பகுதிகளுக்கு அளிக்க விதிமுறைகளை தளர்த்தியது.  

கடலூர் மாவட்டத்தில் மரியாதைக்குரிய ககன்தீப்சிங் பேடி அவர்களுடன் பிளஸ் அந்தோணிசாமி அவர்களும் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் இரவு பகல் பாராது பணியாற்றினர்.  இரவு முழுவதும் வரும் நிவாரண பொருட்களை வாகனத்திலிருந்து இறக்கி, பகலில் கிராமங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். உண்ணாமல் ,உறங்காமல் பல இளைஞர்கள் தன்னார்வ பணியாற்றினர்.

மற்ற மாவட்ட மக்கள்,  சுனாமி பாதிப்பு பற்றி தெரிந்து, அதை தங்கள் வீட்டின் துயராக எண்ணி,  மலைபோல் நிவாரண பொருட்களை அனுப்பி கொண்டு இருந்தனார். மளிகைச் சாமான்கள், காய்கறிகள், மருத்துவ உதவிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்களின்  நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மூலம் சென்று சேர்ந்தன.  

சில ஊர்களில், உடைமைகளையும் உறவினர்களையும் இழந்தோர் மிகுந்த சோகத்திலும், அதிர்ச்சியிலும், கோபத்திலும் இருந்தனர்.  பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்களுடன் சேர்ந்து அடுத்த சில மாதங்களுக்கு இந்த பணி தொடர்ந்தது. அலையாத்தி காடுகள் இருந்த இடங்களில் மக்கள் பாதிப்படையவில்லை. 

சுனாமி என்ற பேரிடரால் பெருந்துயரம் வந்தபோது, நம் மக்கள் அனைவரும் அரசுடன் ஒன்றிணைந்து, மனிதம் துளிர்த்து,  ஒருவருக்கொருவர் உதவி செய்த, மனம் நெகிழும் நிகழ்வுகள் மறக்க முடியாதது. சாதி, மத பேதமற்ற சேவையில் பல்வேறு தரப்பினரும் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர், மற்றவர்களின் உறவினர்கள் இழந்து வாடும் துன்பத்தை, தன் வீட்டு துக்கமாக கருதி கண்ணீர் சிந்தி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு தாய் பிள்ளைகளாக உதவினர்.

பேரிடர்கள் மானுடத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும்  🇮🇳

சுனாமியால் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் 🙏🙏

Jaihind
Balaji Vedharajan

Saturday, December 20, 2025

தேசம் காக்கும் சாமிகள்


தேசம் காக்கும் சாமிகள்!


இறுகப்பற்றிய நம்பிக்கை,
இறுமாப்புடன் தர்க்கம்,
நாளெல்லாம் கதைப்பேசி,
நீங்கள் நன்றாக
உறங்கும் வேளையில்...
நதிகள் எல்லாம்
ஒரே கடலாகுமென
தெரிந்தும் தர்க்கமேன்?
எனக் கடவுள்
கவலையில் ஆழ்ந்திருப்பார்.


அவருக்கு அருகில்,
சிகர உச்சியில்,
சில்லிடும் குளிர்காற்றில்,
சீரியப் பணியில்,
இரவெல்லாம் விழித்திருக்கும்
தேசத்தின் புதல்வர்கள்,
தினம் சுதந்திரம்
காக்கும் பகத்சிங்குகள்.
எல்லைக்காவல் சாமிகள்.

வெள்ளையனிடம் அடிவாங்கி
உயிர் கொடுத்து
இரவில் பெற்றதை,
அவர்களிடம் ஒப்படைத்து,
நிம்மதியாய் துயிலுங்கள்,
நேசித்தாலும் வெறுத்தாலும்,
நேசமுடன் உங்களையும்,
கவசமாய் காக்கும்
சீருடைச் சாமிகள்.

அங்கே எல்லையில்
அடரிருளில் அளவளாவ,
உற்றார் யாருமில்லை.
இமயத்தின் பேரமைதியில்,
இங்குள்ள நிகழ்வுகளை,
எங்கோ தூரத்தில்,
எல்லையில் நின்று,
வலையொளியில் கண்டால்,
சொந்தப் பிள்ளைகளுக்குள்,
சொத்துப்பிணக்கை கண்டு,
தேம்பியழும் தாயைப்போல்,
பெரும் துயரில்,
கால்கடுக்க வருந்தி
நிற்கும் எல்லைச்சாமிகள்.

இந்த கார்த்திகையில்,
இதுவரை இல்லாத,
வருத்தங்களும் வேறுபாடும்,
அது ஒருபுறமிருக்க...

அதே கார்த்திகையில்,
களம் கண்ட
எல்லைச்சாமி ஒன்று
இன்று இல்லை.
தெரியுமா உங்களுக்கு?
அவர் தீரர்
அறுபடை வீட்டின்
ஐந்தாம் வீடாம்
திருத்தணியின் வீரமகன்
அவர் சக்திவேல்,
உறவினரின் தேவைக்கு
அடுத்த விடுப்பில்,
ஊர் திரும்பும்
திட்டம் இருந்திருக்கும்,
தாயும், பிள்ளையுங்காண,
தீரனின் மனந்துடித்திருக்கும்...
வேலை ஓய்விற்குள்
முடிக்க வேண்டிய
வீட்டுத் தேவைகள்
நிறைய இருந்திருக்கும்.
மலைப்பனியில் மரத்துப்போன,
விரல்களை பார்த்தபடி,
மனக்கவலை இருந்திருக்கும்.
ஆனால் இம்முறை,
வீடு திரும்பாமல்,
துயரத்தில் ஆழ்த்தி,
தேசியக்கொடி போர்த்தி,
தேசம் காத்திட
உயிர் நீத்த
எல்லைச்சாமி அவர்.


ஆனால் நமக்கென்ன?
ஒருநாள் கடக்கும் செய்தி....
பத்திரமாய் வீட்டிற்குள்
கதவடைத்து அமருங்கள்...
மார்கழிப்பனி இருக்கும்.
அடுப்பில் டீ போட்டு
அரசியல் பேசுங்கள்.
எல்லைக்காவல் சாமிகள்
எப்போதும் நாடு காக்கும்.

எல்லையில் மட்டுல்ல,
உள்ளுக்குள்ளும் நிறைய,
மத்தியோ மாநிலமோ,
காக்கும் காவல்சாமி,
நல்லதோ கெட்டதோ
நேரில் செல்லாமல்,
ஊரார் நலன்கருதி,
உழைக்கும் காக்கி.

உங்களுக்கே தெரியாமல்
நீங்கள்
நடக்கும் சாலையிலும் ,
நகரும் பேருந்திலும்,
நள்ளிரவின் நிழலிலும்,
தன்னலம் கருதாது
தன்கருத்தை உள்அடக்கி,
நமைகாத்து நிற்கும்
நல்காவல் சாமிகள்.


நல்குடிமக்கள் நீங்கள்,
நல்லிணக்கமாய் இருந்தால்,
அதுவே போதும்.
அகம்மகிழ்ந்து அவர்கள்
சற்றே கண்ணயர்ந்து
இளைப்பாறி ஓய்வெடுப்பார்.
Balaji Vedharajan 🙏🙏🙏

Friday, November 28, 2025

சிவ வழி

 

எங்கும் ஒளியாய்,

ஓங்கார ஒலியாய்

ஒலிக்கும் அருளானே!

எல்லை இலாத  சிவமே

மானிடற்கெல்லாம்

மறைநின் அருமையுணர,

எவ்வடிவும் எடுக்கும் 

ஆதாரத் தத்துவமே🙏!

 

லிங்கமே நின் முதல் வடிவு!

தில்லை நடராசனே  ஐந்தொழில் குறிக்கும் சக்தி வடிவு!

தட்சிணா மூர்த்தியே ஞானறிவு குறிக்கும் குரு வடிவு!  

உமா-மகேஸ்வரனே நின்கருணையும் அன்பும் குறிக்கும்  கிருபை வடிவு🙏!

 

கேட்போர் கேட்கட்டும்,

நினக்கேன் திருவுருவென்று?

சிவம் உணர்ந்தோர்  அறிவார்

அவர்தம் மனம் ஒருங்க,

அருவத் தத்துவம் உள்ளுணர,

அன்பாய் நின்கழல் கண்டுணர,

அடியார்க்கும், பக்தர்க்கும்

ஆனந்தக் கண்ணீராய் கண்கொள்ளா காட்சியாம் நின் திருவடிவு.

அதைத் தினம் கண்டு பெரும்பேறு பெற – இந்த

அற்பனுக்கு அருள்வாயோ!

ஆலகாலனே! – நின் மேல்

எங்கள் அன்பை எங்ஙனம் சொல்ல?

‘ஆ’ வின் பாலும், சந்தனமும்  பூசி குளிர்வித்து ,

ஆளியும், தும்பையும், வில்வமும் அலங்கரித்து,

ஓதுவார்க்கு  ஓய்வின்றி ஊழியம் செய்து,

உன்இல் மிளிர உழவாரப்  பணி செய்து,

உனைச் சுற்றிய செந்தழலை கண்களில் ஒற்றி,

உலகியல் துன்பம் திருநீறால் நீக்கி,

நெற்றியில் இட்டோம் அதை, 

நெஞ்சினில்  இட்டோம் உனை - உன் 

கடைக்கண் வேண்டி 

கரம் கூப்பி,

சிதையில் சிதையும் 

ஐம்புலன் ஒடுக்கி, 

திருசிற்றம்பலம் காண! 🙏

.

அறுபத்து மூன்று அடியார் பாடிய

அறுபத்து நான்கு வடிவானே !

நின்னைச்சரணடைந்து காலமெல்லாம்,

விளக்கேற்றி வழிபடும் வழி எங்கள் வழியே, 

அது எங்கள் சிவ வழியே.

சிவமே போற்றி🙏!

Monday, November 24, 2025

முதுமை 4

முதுமை  - 4

இறைவா !
முதுமையில் முடியும் 
ஒருவழிப்பாதையில்...
வெள்ளத்தில் செல்லும் 
எறும்பாய்
மானிடர் நாங்கள், 

மீண்டும் ஒருமுறை 
காலம் சென்றோரை காண 
வரம் தா இறைவா! 

முதுமை இட்டு செல்லும் 
மூப்பின் மறுபக்கம் 
எப்படி இருக்கும் என 
அவர்களிடம் கொஞ்சம் கேட்க வேண்டும். 

காலத்தின் கோலத்தில் 

இழந்த அன்பான உறவுகளை...

நெருங்கிய நண்பர்களை....

சொல்ல மறந்த விளக்கங்களை...

தயங்கிய காதல்களை... 

கொடுக்க மறந்த கடிதங்களை...

வாங்க மறந்த கடன்களை...

செல்ல எண்ணிய கோவில்களை.. 

கேட்காத மன்னிப்புகளை.. 

அன்போடு பேச மறந்த உடன்பிறப்பை 

அஞ்சறைப்  பெட்டிக்குள் சேமித்த கனவுகளை.. 

அப்பாவின் புரியாத டைரி கணக்குகளை 

ஒரு முறையேனும் கண்டு கேட்க, 

கோபமாய் திரும்பி கொள்ள, 

ஒரு நொடி  வரம் தா இறைவா! 

இளமையில் இருந்த அவர்களிடம் 

செல்லமாய் கோபிக்ககூட ஆளில்லா.. 

இம்முதுமையின் களைப்பையும், 

தனிமைத் துயரையும் பகிர  

வரம் தா இறைவா! 

- Balaji Vedharajan
image: Gemini

முதுமை 3

முதுமை - 3

படியேறும் பேருந்தும்,
நெடுந்தூர இரயில் 
நடைமேடையும்,
என்றுதான் 
மதிப்பளிக்குமோ 
முதுமைக்கு?

கடந்து செல்லும்போது 
கைகொடுப்போம் 
உதவிக்கு.. 
-Balaji Vedharajan
image: Gemini

முதுமை 2

முதுமை - 2 

முதுமையில் நிற்கையிலே.. 
பெருங்குரலெடுத்து 
பெற்றெடுத்த அன்னையுமில்லை,

சுற்றி நின்ற  உறவுகளுமில்லை,

கதை சொல்லி - நெய் 
கலந்து ரசஞ்சோறு ஊட்டிய 
கரங்களும் இல்லை. 

தூக்கி வளர்த்த தந்தையுமில்லை

ஓடி விளையாடிய நட்புமில்லை.

வந்தபோது புன்முறுவலாய் பேசி
சொல்லாமல் இறங்கும்
தொடர்வண்டி பயணி  போல்,
செல்லும்போது சொல்வதுமில்லை...

இப்படி 
அத்துனை பேரும்,
சொல்லாமல் சென்றார்களே...
இந்த முது(தனி)மையை பற்றி?

இருக்கும்போது 
உடும்பாய் பற்றிய அத்தனை 
உலக விஷயங்களும் இங்கே இருக்க 
எங்கே அவர்கள்? 

பத்திரமாய் பாதுகாத்த 
சொத்து பத்திரங்களும்,

உறவு கசந்து
அடைத்த வேலிகளும், 

அலமாரியில் அடுக்கிய 
விருப்ப உடுப்புகளும்,

பரணியில் 
பாங்காய் அடுக்கிய 
பல வருட 
பொங்கல் பானைகளும்,

பல கல்யாணங் கண்ட
முற்றத்து வாசல்களும்,

புளியிட்டு விளக்கிய
பித்தளை பாத்திரங்களும்,

அத்தனையும் பத்திரமாய் 
இன்னும் இருக்க, 
எங்கே அவர்கள்? 

- Balaji Vedharajan
image: Gemini

முதுமை 1

முதுமை - 1 

தொலைபேசி 
வண்ணத்திரையில் 
பேசி சிரிக்கும் 
தூர தேச உறவுகளில், 
பொத்தானை அழுத்திப்  பேரன் 
முடிக்கும் வினாடிகளில்,
உதிர்ந்தே போகிறது…. 
வண்ணங்கள். 

இரக்கமின்றி 
மீண்டும் சூழும் 
முதுமையின் 
கருப்பு வெள்ளை  
எண்ணங்கள்! 

- Balaji Vedharajan

image: Gemini

அறம் கண்ட இருக்கை

சென்னை நகர ரயில் பயணத்தில்... 
ஜன்னலோரக்  காற்றை நேசித்து ஒரு பெரியவர். எழுபது வயது இருக்கும். காலம் வரைந்த கோட்டோவியமாய் முகச்சுருக்கங்கள். எளிமையான கதர் வேட்டி சட்டைக்குள் ஒடுங்கி இருக்கையின் ஓரம் அமர்ந்திருந்தார்.  இரயிலின் பரபரப்பிற்குள் சலனம் இல்லா சிலையாய் அவர். 

தினமும் வேலைக்கு சென்று திரும்பும் அயர்ச்சியோ, மனப்பளுவோ, எதிர்கால திட்டங்களோ அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. அவரை பொறுத்தவரை, அந்த பயண கணத்தில் மட்டுமே இருந்திருப்பார்.  ஆன்மா உயிர்ப்புடன் இருக்கும்போது, மனவுடல் சலனமற்று இருக்குமோ?

அதே  இருக்கையில் ஒரு இடம் விட்டு பக்கத்தில், இருப்பைக் காட்டும் இயல்பில், போதையில் நடுத்தர வயதில் உடல் மெலிந்த மற்றொருவர்.  காற்றில் கோபமாய் குறை சொல்லி ஆற்றாமையில்... குடித்த வீரன்.. ஆர்பாரிக்கும் மன எழுச்சியில் கதைத்துக் கொண்டு இருந்தார்.  அவ்வபோது தலையைக் கோதி, முழுக்கைச் சட்டையின் பொத்தான்களையும் சரி செய்து கொண்டார்.   1980 களின் காது மறைக்கும் கிராப் தலையுடன் , பெல் பாட்டம் அணிந்து  உற்சாகமாய் வாழ்க்கையை துவங்கி இருப்பார் போலும், துவைத்து எடுத்த வாழ்வின் அழைக்கழிப்பில் சீரான கிராப் மட்டும் மாறவில்லை!  

இருக்கையின் ஒருபக்கம் பெரியவர் வாழ்வின் அனைத்தையும் கடந்த சமநிலையில், மறுபக்கம் அதைக்  கடக்கும் துன்பப் பிதற்றலில் மற்றொருவர்.  வெவ்வேறு படிநிலையில் மனிதர்கள் அருகருகே பயணிக்க இரயில் இருக்கை ஒன்றும் சொல்வதில்லை. இருக்கைகள் பலரை பார்த்து இருக்கும், அவர்கள் நிரந்தரமில்லை என அது நன்கு அறிந்திருக்கும்.  பயணம் முடிந்தவுடன் அவர்கள் இறங்கித்தானே ஆக வேண்டும். பின்பு நிலவும் பேரமைதியில் இருக்கைகள் ஓய்வெடுக்கும். 

இரயில் அடுத்த நிலையத்தில் மெல்லச் சரணடைந்தது. 

சென்னையின் நகர தரைவழி இரயில்கள், எளிய மக்களின் அன்பர்.  இவை யாரையும் அளவுகோல் வைத்து நிர்ணயிப்பது இல்லை. அதிகப்  பயணக் கட்டணம் கேட்பதும்  இல்லை. குறைந்த பட்சம் ஐந்து ரூபாய்க்குள் செல்ல முடியும். நாளெல்லாம் உழைக்கும் நடுத்தர மக்களிடம் , சன்னலோரம் சற்றே வீசும் காற்றுக்கு நகர இரயில் காசு கேட்பதில்லை.  
‘எல்லோரும் வாங்க’ என்று  சென்னை நகர ரயில் பெட்டிகளின் திறந்த வாயில்கள் எப்போதும் வரவேற்கும், அனைவரையும் அரவணைத்து தன்னுள் ஈர்த்து, மக்களை பூக்களாய் பத்திரமாய் நிலையங்களில் உதிர்த்து செல்லும். 

அதன் குறைவான கட்டணத்தில், எதிர்கால கனவை கட்டமைத்து, விண்ணைத் தொட்ட நம் கடந்த கால இளம் தலைமுறைகள் பல இருக்கும்!.  

அந்த இரயில் நிலையத்தில், உற்சாகம் துள்ள ஏறிய இரு பள்ளிக்  குழந்தைகள், ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு நடு இருக்கையில் அமர்ந்தனர்.  நிச்சயம் இன்று கடினமான  பாடங்கள் இருந்திருக்காது.  ஒருவேளை மதியத்திற்கு பின், பள்ளியில் விளையாட அனுமதித்து  இருக்கலாம், அல்லது படம் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்ந்திருக்கலாம்.  அந்த மகிழ்வுடன் அவர்கள் வந்தததும், அந்த இருக்கை உயிர் பெற்றது.

அவர்களின் சிரிப்பொலியில், இரயிலில் இறை வெளிச்சம். 

அதில் ஒரு குழந்தை காகிதத்தை மடக்கி, சில நொடிப்பொழுதில் பொம்மை உருவாக்கியது. அதை பார்த்த பெரியவர், சற்று இன்னும் ஒடுங்கி அவர்களுக்கு இடம் கொடுத்து முதன் முறையாக புன்னகைத்தார்.  இளம் தலைமுறை புதிய நம்பிக்கையை உருவாக்கும் என்பது விதி.  காற்றில் பேசியவரும் சற்றே நகர்ந்து குழந்தைகளுக்கு இடம் கொடுத்துக் குரலை நிறுத்தினார். 

அறம் கண்ட இருக்கை மகிழ்ந்து இருக்கும். 

Balaji Vedharajan

அருவ அரணே!

அருவ அரணே!
அன்பின் உருவே,
அனைத்திற்கும் ஆதாரமே, 
எம் சிவனே!
அடியாரை  ஆளும்,
நின்சக்தியின் வெளிப்பாடே 
அனைத்துயிரினமே! 

படைத்தல்,
காத்தல்,
அழித்தல், 
மறைத்தல், 
அருளல் என 
அனைத்தும் நின்செயல் எனும், 
சைவ சித்தாந்தம் போற்றும் – அறியாதார் 
சிந்தனைக்குள்  சிக்காத
சிவபரம்பொருளே! 

இமயத்தின் ருத்ரனே! 
தென்னகத்தின் சிவனே !
சோழரின் பெருமையே!
ஆன்மிகத் தமிழ் வளர்த்த,  
அடியாரின் அண்ணலே!
நின் தத்துவம் பல்லாண்டு வளர்ந்தோங்கும் 
இப் பாரதத்தின் பரம்பொருளே! 

அருவமாய் முனிவர்க்கு, 
அருளும் சித்தானந்த,
ஆன்மிக பரம்பொருளே!
ஒளிப்பிழம்பே!
  
திருவுருவமாய் பக்தர்க்கு, 
திருமேனியில்,
தில்லையிலுறையும் நடராசனே !

அருவுருவமாய் விளங்கும் என 
அடியார் நல்வாக்கின்படி, 
அடியேனின் சிற்றறிவுக்கு 
விளங்கா ஒளி விளக்கே, 
உனை என்று காண்பேனோ ?🙏🙏

Balaji Vedharajan.

Tuesday, September 30, 2025

தேசம் எங்கள் தேசம்.

அருவ அரணே!

அன்பின் உருவே,

அனைத்திற்கும் ஆதாரமே, 

எம் சிவனே!

அடியாரை  ஆளும்,

நின்சக்தியின் வெளிப்பாடே 

அனைத்துயிரினமே! 


படைத்தல்,

காத்தல்,

அழித்தல், 

மறைத்தல், 

அருளல் என 

அனைத்தும் நின்செயல் எனும், 

சைவ சித்தாந்தம் போற்றும் – அறியாதார் 

சிந்தனைக்குள்  சிக்காத

சிவபரம்பொருளே! 


இமயத்தின் ருத்ரனே! 

தென்னகத்தின் சிவனே !

சோழரின் பெருமையே!

ஆன்மிகத் தமிழ் வளர்த்த,  

அடியாரின் அண்ணலே!

நின் தத்துவம் பல்லாண்டு வளர்ந்தோங்கும் 

இப் பாரதத்தின் பரம்பொருளே! 


அருவமாய் முனிவர்க்கு, 

அருளும் சித்தானந்த,

ஆன்மிக பரம்பொருளே!

ஒளிப்பிழம்பே!

  

திருவுருவமாய் பக்தர்க்கு, 

திருமேனியில்,

தில்லையிலுறையும் நடராசனே !


அருவுருவமாய் விளங்கும் என 

அடியார் நல்வாக்கின்படி, 

அடியேனின் சிற்றறிவுக்கு 

விளங்கா ஒளி விளக்கே, 

உனை என்று காண்பேனோ ?🙏🙏


Balaji Vedharajan

Sunday, September 21, 2025

"ஈர நிலங்கள் காப்போம்"

"ஈர நிலங்கள் காப்போம்"
---------------------------------
பொறியியல் பிழை இல்லா கூட்டில்,
ஓய்வில் நீர்காகப்  பறவை ஒன்று 
மெல்ல மணிக்கண்ணுறங்க..  
வாஸ்துவும் வாசலும் இல்லா,  
மேல் திறந்த அதன் கூடு, 
மழையும், 
வெயிலும்,
வெளிச்சமும், 
எப்போதும் வரலாம் என 
இயற்கையின் இயல்பாய் இருக்க...

காற்றில், 
கிளைகளோடு ஆடும், 
கடனும் எடையுமில்லா 
அதன் கூடு - அது குறித்து,
கிஞ்சித்தும் பயமில்லை அப்பறவைக்கு. 

விரிக்கச் சிறகும்,
வானமும்  இருக்க பயமேன்? 

அப்பறவை  
எங்கும் இடம்பெயர்வதில்லை... 
அதற்கான 
உணவும், 
உறைவிடமும் 
ஒருங்கே இங்கிருக்க,
தூர வலசைக்கு அவசியமுமில்லை...

மூர்ச்சையாகும் இருள்சூழ் மண்ணில்,  
வேர்களை நேர் செலுத்தி 
உவப்பாய் உவர்ப்பில் நிற்கும் தில்லை – அது தன்னில் 
பறவை கூடு கட்ட 
கிளை வாடகையோ,
காற்றில் இலை அசைய
தனிக்காசோ  கேட்பதில்லை. 

வரும் ஐப்பசியும்,  
வாடைக்காற்றும் வந்தால், 
இறையும், இரையும் நிரம்பி இருக்கும் 
எம் ஈரத் தமிழ் நிலங்கள், 
எல்லா பறவைகளுக்கும் 
இனம் பெருக இடம் கொடுத்து 
உணவளித்து உயிர் கொடுக்கும்...
"யாவரும் கேளிர்" எனும்
தமிழரின் ஈர நெஞ்சம் போல்.

“ஈர நிலங்கள் காப்போம்”.  

Balaji Vedharajan

Friday, September 12, 2025

கற்றதோ சிறு கடலறிவு.

கற்றதோ சிறு கடலறிவு. 
பெற்றதோ நுனித் துரும்பளவு,

நிற்பதோ நின் தாள் நோக்கி -
சிந்தையில்,

கொண்டதோ சிவத்தொண்டு.
ஓம்காரமாய் பற்றியதோ 
உம்  கழல்,

ஈட்டியதோ உம் அருள்  தவிர்த்து ஒன்றுமில்லை!
நெற்றியில்,

இட்டதோ உம் திருநீறும், 
ஆக்கினையும்,

யாக்கையதில் - தீ 
சுட்டதும் ஒருபிடி நீறே யாவர்க்கும்.

உயிர் 
விண்டதும் - சுடலைத் தணலில்,

தெளித்த பால் 
பட்டதும் பந்தம் நீங்க,

கரையினின்று 
விட்டதும் கடல் நீர் கலந்து - ஊறி 
பட்டென உடைபடும் நீறுநிறை கலமும்
என்பும் உறவும்.

பிறவி
கட்டவிழ்த்து,
நின் நினைவில் 
ஆழ்ந்து - எண்ணத்தில்

எட்டா  இறை கலந்து உள்ளுருகும் 
அடியெனின் சடையானே! 

கலப்பேன் யான் உன்னுடனே,
ஒரு பிடி எரி நீறாய்... 
தில்லையனே!

நீலக்  கடலானே!

நீ அறிவாயோ, 

அடியேன் எம் தவத்தை? 🙏

Balaji Vedharajan

Tuesday, July 1, 2025

அலையாத்திக்காட்டு மாடுகளும் - நீலக்கார்பனும்...


2002 இல் அலையாத்திக் காடுகளையும் பாதுகாக்க வேண்டி நான் மேற்கொண்ட 1100 km பைக் பயணத்தில், பொதுவாக அலையாத்தி குறித்த விழிப்புணர்வு குறைவாகவே காணப்பட்டது. அப்பயணத்தில், கடலோர கிராமத்தில் தங்கி இருந்த போது, நண்பர் ஒருவர் கொடுத்த இரவு உணவை சமைக்க, நன்கு பட்டுப்போன சுள்ளிக்குச்சிகள் பயன்படுத்தினார். அலையாத்தி விறகுகள் நன்றாக அடுப்பில் எரியும் திறன் கொண்டவை என்று கூறுவார்கள்.
ஆனால் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, மக்களிடம் அலையாத்திக் காடுகள் குறித்த பார்வையை முற்றிலும் மாற்றியது. பரவலாக இந்தியா முழுக்க இக்காடு வளர்க்கும் திட்டங்கள் துவங்கப்பட்டன . குறிப்பாக இந்தியாவின் கிழக்கு கடலோர மாநிலங்களில் அலையாத்தி வளர்ப்பு – சுனாமி தடுப்பாகவே முன்னிலைப்படுத்தப்பட்டன.
தற்போது, புளூ கார்பன் என அழைக்கப்படும் பருவ நிலை மற்ற தீர்வாக அலையாத்தி கருதப்படுவதால், சர்வதேச அளவில் இவற்றின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
நீலக்கார்பன் என்றால் என்ன? என்று பார்ப்போம்
மனிதர்கள், தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு, புவியில் இயற்கையாக சேமிக்கப்பட்ட பெட்ரோலிய எண்ணையை (ஹைட்ரோ கார்பன்) பெருமளவில் உறிஞ்சி எடுத்து கார்களில், ஆலைகளில் பயன்படுத்தியதால், வளி மண்டலத்தில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைடு) வெளியாகி அதிகரித்தது.
இதனால் சூரிய ஒளி, பூமியின் மேற்பரப்பில் பட்டு எதிரொலிக்க முடியாமல், ஒரு கண்ணாடி பெட்டி சூடாவதை போல பூமியின் வளிமண்டல வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி, பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் மெல்ல உயர்ந்து, அடிக்கடி புயல்கள் வலுத்து, எதிர்பாரா மழை வெள்ளம் ஏற்பட்டு, கார்கள் மிதந்து, வீடுகள் மூழ்கி மக்களுக்கு பெரும் இன்னல் ஏற்படுகிறது.
இப்படி நாம் வளிமண்டலத்தில் வெளியிட்ட கரியமில வாயு, உலக அளவில் ஏற்படுத்திய பாதிப்புக்கு, அந்த பாதிப்பினால் ஏற்பட்டுள்ள சுற்றுசூழல் மாசுபட்டிற்கு, பரிகாரம் செய்ய தற்போது உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
சரி, வளிமண்டலதிதில் உள்ள அதிகப்படியான கரியமில வாயுவை மீண்டும் கரிமமாக (கரி அல்லது கார்பன்) நிலத்திற்குள் சேமிப்பது எப்படி என உங்களுக்கு கேள்வி எழலாம்?
அதற்கான ஒரே வழி, மலை முகடு முதல் கடற்கரை வரை காடுகளின் பரப்பை அதிகரித்தால், அதன்மூலம் வளிமண்டல கரியமில வாயு உறிஞ்சபட்டு, வெப்பநிலை குறைந்து அனைத்து பாதிப்புகளும் மீண்டும் சரியாகும்! என்பதை இதன் சாராம்சம்.
இதற்காக, பெருமளவில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அலையாத்தி மரங்கள் வளி மண்டலத்தில் இருந்து ஒளிச்சேர்க்கைக்காக கரியமில வாயுவை உறிஞ்சி, அதை கடலோர சேற்றில் கார்பனை சேமிக்கும் கலனாக இருப்பதால் இவை புளூ கார்பன் (கடலின் வண்ணம் நீலம் என்பதால் புளூ கார்பன்!) என்று அழைக்கப்படுகின்றன.
அலையாத்தி வனங்களில், மாடுக்கடி உயரத்தை தாண்டிய மரங்களை, மாடுகள் தொந்தரவு செய்வதில்லை. அலையாத்திக் காட்டு மாடுகள், அக்காடுகளின் ஒரு அங்கம்.
அலையாத்திக்காடுகளின் கடலோர விளிம்பில், உப்பு நீர் சேற்றில், அவை மேய்வதில்லை, அக்காடுகளின் நில நோக்கிய விளிம்பில் தனக்கான உணவை காலம் காலமாக தேடுகின்றன. அனுபவம் வாய்ந்த தோட்டக்காரரரை போல, மாடுகள் அலையாத்திக்காடுகளின் நில விளிம்புகளை மென்று, மேய்ந்து வடிவமைக்கின்றன.
அலையாத்திகாடுகளின் இலைகளை உண்ணும் மாடுகள் நன்றாக பால் கொடுப்பதாக கிராமத்தில் கூறுவார்கள்,
ஆம், இக்காடுகளின் ஊட்டம், மாடுகள் மூலம் ஊட்டசத்து மிக்க பசும்பாலாக அவற்றின் கன்றுகளுக்கும், மக்களுக்கும் செல்கின்றன.
குழந்தைகளுக்கு பசும்பாலாக கறந்து ஊட்டப்படும்போது, இக்காடுகளும், மாடுகளும் இம்மக்களின் வாழ்வோடும் இரண்டற உயிராய் கலந்து விடுகின்றன.
கட்டற்ற , சுதந்திரமாக திரியும் அலையாத்தி காட்டு மாடுகளின் சாணம், பரவலாக நெய்தல் நிலங்களில் மழைக்கால மூலிகைகள் மற்றும் இன்ன பிற உயிரினங்களுக்கும் இயற்கை உரமாகின்றன.
கடலோர கிராமங்களில், குறிப்பாக தென் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் மாடுகள் பாரம்பரியமாக இயல்பாக சுற்றி திரிகின்றன. காலம் காலமாக இம் “மா” நிலத்தில் வாழும், கீழடித்தொன்மை தமிழ் இனத்திற்கும், கால்நடைகளுக்கும் இடையேயான பாசமும், பிணைப்பும், சல்லிக்கட்டும் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது.
தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு பகுதியான கால்நடை வளர்ப்பு, இன்றும் உயிர்ப்புடன் – இங்கு கட்டப்படாத மாடுகளுடன் இங்கு சற்றே வித்தியாசப்பட்டது.
பொதுவாக இங்குள்ள மாடுகள் மாலையில் வீடுகளில் கட்டப்படுவதில்லை. மாறாக அவை கூட்டம் கூட்டமாக, ECR சாலைகளில் ஓய்வெடுத்து கொள்ளும், விபத்தில் சிக்கி சாலையில் பயணிப்பவர்க்கு சிக்கலை ஏற்படுத்தும்.
காலம் காலமாக அவை ஓய்வெடுத்த, இராமேஸ்வரம் செல்லும் அன்னதான சத்திரங்கள் நிறைந்த புளியமரச் சாலைகள், இருபது ஆண்டுகளாக இசிஆர் சாலைகளாக மாறிய விஷயம் இன்னும் இம்மாடுகளுக்கு புரியவில்லை. அதி வேகச்சாலைகளில், விலங்குகளை கண்டு ஒதுங்கி செல்லும் பொறுமை யாருக்கும் இல்லை.
ஆனால், நம் கிராமச்சாலைகள் இன்றும், எல்லார்க்கும் எல்லாம் என்ற நிலையில் பயிர்களை உலர்த்தவும், ஆடு, மாடுகள் ஓய்வெடுக்கவும் , அதனூடே வேகம் குறைத்து, ஒலி எழுப்பாமல், வளைந்து செல்லும் காரோட்டிகளையும் காணலாம்.
இப்பசுக்கள் விடிந்தவுடன், மேய்க்க ஆட்கள் யாரும் இல்லாமலயே, வரிசையாக தானாக கடற் கரைக்கு மேய்ச்சலுக்கு சென்று விட்டு, மாலையில் மீண்டும் ஊருக்குள் வரும். நெற்பயிர்கள் வளரும் காலங்களில், இவற்றை வயலுக்குள் விடமாட்டார்கள் என்பதால், பெரும்பசியுடன் அவை கடலோரத்திற்கு செல்லும். அவற்றுக்கு வேறு வழியில்லை.
அங்கே, வடகிழக்கு மழை பெய்து செழித்து வளர்ந்த, அலையாத்தி மரங்களின் இளம் துளிர் இலைகளை கடித்து, மென்று, உப்புடன் கூடிய தனிச்சுவையை உண்டு மகிழும். “நறுக்” “முறுக்” என இந்த அலையாத்தி காட்டு மாடுகள் விதைகளையும், இலைகளையும் சுவைத்து கடலோரங்களில் இயல்பு மாறாமல் இளைப்பாறும்.
அலையாத்தி மர விதைகள் இதய வடிவில் இருக்கும்.
அவை கடல் நீரும், நன்னீறும் புணரும் கார் காலங்களில்
விழுந்து மிதக்கும்.
மிதந்து செல்லும் விதை,
இருநீரின் சுவையில் மயங்கி, மெல்ல விரிந்து,
கடலோர புதைச்சேற்றில் புதையாமல்,
கருப்பையில் பதியும் இளம்உயிர் போல்
மென்களியில் மேற்பதிந்து நிற்க,
அதில் சில நாட்களில் சிறு துளிர் வளர்ந்து,
பின் மரமாய் புயலை தடுக்கும்.
லட்சக்கணக்கில் இவ்வாறு உதிரும் விதைகளில் கடுக்கா நண்டுகளும், மாடுகளும் தின்றது போக, மீதம் உள்ளவை செடியாகும். இயற்கை அன்னை ஒருவரும் பசித்திருக்க விடுவதில்லை, சில நல்ல மனிதர்களை போல...
பெருங்காடு உள்ள இடங்களில், அலையாத்தி மர இலைகளும், விதைகளும் மாடுகளுக்கு நல்ல ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருப்பதால், அவை இயற்கையாகவே நல்ல கன்றுகளை ஈன்று, அடர்ந்த அலையாத்தி காடுகளில் சுதந்திரமாக வளர்ந்து மீண்டும் ஊருக்குள் வரும்.
அவற்றில் ஒரு பகுதி, நிரந்தரமாக காடுகளுக்குள்ளேயே பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றன. இவை காட்டு மாடுகள் என்றே இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகின்றன.
காட்டு மாடுகள், அலையாத்தி காடுகளுக்குள் மனிதர்களை கண்டால் கடைசி வரை துரத்தி செல்லும்.
அவை துரத்தினால், நமக்கு சேற்றில் ஓடுவது சிரமம்,
அவையோ, கடைசி பரீட்சை எழுதி முடித்து, உற்சாகத்துடன் துள்ளி குதிக்கும் குழந்தைகளை போல குதித்து துரத்தும்.
கொஞ்சம் மறைந்து நின்றால், அலையாத்திக் காட்டு கொசு, படல் படலாய் அமர்ந்து அப்படியே வெயிலுக்கு அருந்தும் பதநீரை போல உங்கள் குருதியை இழுக்கும்.
இவை இரண்டிற்கும் நண்பனான,
அலையாத்தி காட்டு நரிகளுக்கும்,
அவைதேடும் சம்பா நண்டுகளுக்கும்,
அக்காடுதான் குலதெய்வம்.
இருந்தாலும் - இவற்றுக்கு,
மனிதர்களால் புவியில் உயரும் கரியமில வாயுவும்,
அதை தடுக்க,
கரும்பச்சை அலையாத்தியை “நீலக் கார்பன்” என்று
சொல்லும் புது டிரெண்டும்,
தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே!
- சரி, என் காருக்கு பெட்ரோல் இட்டு நீல கார்பன் பற்றிய வகுப்புக்கு செல்ல வேண்டும் – மீண்டும் சந்திப்போம்..
- பாலாஜி வேதராஜன்

Tuesday, March 26, 2024

ஆழிக் கதைகள் - 1 (பாலாஜி வேதராஜன்)

ஆழிக்கதைகள் - 1 


ஒட மர நிழல் தேடி தாகத்தில் அலையும் குருகும் - முற்பகல்


கடல் ஈராட்டித் தணலில் உமுறியும் கருகும்.


சான்றோரே அறிவீர் - பின் 


விடாச்சோனை வெளுத்துப் பெய்யும் - பிற்பகல் 


படல்  அற்ற உவர்நீரும் புனல் போல் ஓடும். 


தடமற்ற பெரும் மணற்றிட்டு பேரிடரினின்று காக்கும் அதுபோல் - எப்பகல்


வேளையிலும்  தாய் திருநாட்டின் கடல் வளம் காப்பிரே.


- பாலாஜி வேதராஜன்


---------------------------------


விளக்கம்: 

ஓட மரங்கள் எனப்படும் கடலோரங்களில் வளரும் மரங்களின் நிழலை தேடி குருகு (பறவை) அலையும் வேளையில், ஈராட்டி (கடல் காற்று எந்த திசையிலும் நகராமல் இருக்கும்போது) ஏற்படும் வெப்பத்தில் உமுறி எனப்படும் கடலோர செடிகளும் கருகும்.  


பொதுவாக உமுறிகள் நீர்ச்சத்து மிக்க தாவரங்கள், அவை நன்கு வறட்சியை தாங்கும்.  அவையும் கூட கருகும் என்று சொல்வதன் மூலம் – முற்பகல் கடலோர நில வெயிலின் தாக்கத்தை விளக்க முற்பட்டுள்ளேன்.   உமுறிகள் நம் கடல் பகுதியில் மூன்று வகை உண்டு. பெரும்பஞ்ச காலத்தில் இவை நம் மக்களால் உணவாக எடுத்து கொள்ளப்பட்டதாகவும், சில நாடுகளில் இவை சாலட் உணவாக உட்கொள்ளும் பழக்கம் இருப்பதாக தெரிய வருகிறது. வளி மண்டல கார்பன் டை ஆக்சைடை குறைக்கும் blue carbon தாவரங்களில் உமுரிகள் முக்கிய அம்சம். 


ஈராட்டி - கடல் காற்றும் நிலக் காற்றும் சம நிலையில் ஒன்றை ஒன்று தள்ள முடியாமல் இருக்கும். சில நொடிகள் முதல் சில நாட்கள் வரைக்கூட இந்நிலை தொடரலாம்.  பின்னர் வலுப்பெறும் காற்று அன்றைய நாளின் தட்ப வெப்ப நிலையை முடிவு செய்யும்.  


இந்த ஈராட்டி ஏற்படும்போது பிற்பகலில் கடலில் – கடலோரங்களில்  கன மழை (சோனை) பெய்யும்  என பாரம்பரிய மீனவர்கள் கூறுவார்கள். அதனால் கடலில் மழைத்துளி விழும்போது ஏற்படும் நிற மாற்றம் நீரோட்டமாக ஆறு போல செல்லும்.  நீரோட்டங்கள் வெள்ள, வடு (high tide and low tide) காரணமாக தினசரி ஏற்படும்.  மழை வெள்ள காலங்களில் அவற்றின் வேகம், நிறம் போன்றவை மாறுபாடு அடையும்.  


மனித காலடி படா (undisturbed) கடலோர மணல் குன்றுகள் உயர்ந்து நிற்கும், பேரிடர் காலங்களில் காக்கும்...


முதல் முயற்சி...இலக்கணப்பிழை இருப்பின் பொறுத்தருள்வீர்...

Monday, March 14, 2022

தமிழக அரசின் கடல் பசு பாதுகாப்பகம் - அதன் முக்கியத்துவமும் மீனவர் நலனும்

 தமிழக அரசு கடந்த 03.09.2021 அன்று வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டது.  இந்தியாவிலயே முதன் முறையாக தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய கடலோர பகுதிகளை கடல் பசு பாதுகாப்பகம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.  மேலும், கடந்த ஜனவரி, 2022 இந்த திட்டதிற்காக அரசாணை வெளியிடப்பட்டு, ஐந்து கோடி நிதி ஒதுக்கபட்டு, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பபட்டுள்ளது.  தமிழ் நாடு வனத்துறை மற்றும் இந்திய வனவிலங்கு மையத்தின் நீண்ட முயற்சிகளின் மூலம் இந்த பாதுகாப்பகம் இறுதி வடிவம் பெற்று உள்ளது. 

 

பல ஆயிரம் ஏக்கர் பரவியுள்ள கடல் தாழைகளின் (seagrass) அல்லது கடற் புற்களின் தோற்றம்.

இந்தியாவில் சுமார் 7500 கிலோமீட்டர் நீள கடற்கரைகள் அமைந்துள்ள நிலையில்,  வெறும் 68 கிமீ நீளமுள்ள தஞ்சை மற்றும் புதுக்கோட்டை  கடல் பகுதிகள் மட்டும் ஏன் கடல் பசுக்கள் பாதுகாப்பகமாக தேர்வு செய்யபட்டுள்ளன? இந்த பகுதியின் நெய்தல் நில சிறப்பு என்ன என்பதையும், அதன் மூலம் மீனவர் அல்லாத மக்களும் எப்படி பயன் பெறுகின்றனர் என்பதை பார்ப்போம்.

 

இந்த கடல் பசு பாதுகாப்பகம், தஞ்சை மாவட்ட கடலோர பகுதிகள் முழுவதையும் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கி (அதிராம்பட்டினம் முதல் அம்மாபட்டினம் வரை) சுமார் 500 சதுர கிலோமீட்டர் கடற்பரப்பை கொண்டுள்ளது. கடல் கரையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் வரை உள்ள கடல் பகுதிகள் கடல் பசு பாதுகாப்பகமாக அறிவிக்கபட்டுள்ளன.   இதற்கு காரணம், கடல் பசுக்களின் உணவான கடல் புற்கள் (கடல் தாழைகள்) இந்த கடல் பரப்பில், மாபெரும் வயல்வெளி (கோட்டகம்) போன்று கடல் கரையிலிருந்து சுமார் 8 – 9 கிலோமீட்டர் வரை பரவி உள்ளதே ஆகும். 



                                                               (image from https://en.wikipedia.org/wiki/Palk_Bay)

 

கடல் பசு என்பது sea cow என்ற ஆங்கில பெயரின் translation சொல். இந்த அரிய கடல் விலங்கு ஐந்து கோடி வருடங்களுக்கு முன்பே தோன்றி, இரண்டாயிரம் வருட நெய்தல் நில தமிழர்களின் வாழ்வோடு இருந்து வருபவை, எனவே இந்த விலங்குகளை காக்கும்போது,  இவற்றின் பழந்தமிழ் பெயரையும் காக்கும்பொருட்டு இவற்றை ஆவுரியா (தஞ்சை மாவட்ட வழக்கு) அல்லது ஆவுலியா (இராமநாதபுரம் மாவட்ட சொல் வழக்கு) என அழைப்பதே சிறப்பு இந்த கட்டுரையில் ஆவுரியா என குறிப்பிடுகிறேன்.  

 



பல ஆயிரம் ஏக்கர் பரவியுள்ள கடல் தாழைகளின் (seagrass) அல்லது கடற் புற்களின் - கரும்பு தாழை வகைகளின் தோற்றம்.


அதே போன்று, ஆவுரியாக்கள் உண்ணும் கடல் புற்கள் என்ற வார்த்தை “seagrass” என்ற ஆங்கில வார்தையின் translation. இந்த கடல் தாவரங்களின் நெய்தல் நில தமிழ் பெயர் “கடல் தாழைகள்”, இவை கடலுக்குள் நான்கு தழைத்து, கடல் பரப்பில் வேர்களை கிளை விட்டு பரப்பி மண்ணை இறுக பிடித்து கொண்டு இருக்கின்றன. 

 

காவிரியின் டெல்டா மாவட்டமாக விளங்கும் தஞ்சை மாவட்டம், வண்டல் மண்ணால் வளமாக இருப்பதை போல, டெல்டா மாவட்ட ஆறுகள் கடலில் கலக்கும்போது வளமான வண்டலை கடலோரத்திலும், கடலுக்கு அடியிலும் படிய செய்கின்றன.  எனவே, கடலோரத்தில் பல ஆயிரம் ஏக்கர் அலையாத்தி காடுகளும், கடலுக்கு அடியில் பல ஆயிரம் ஏக்கர் கடல் புற்களும் (seagrass) இயற்கையாக வளர்கின்றன. 


 

கஜா புயலில் இந்த அலையாத்தி காடுகளும், கண்ணால் பார்க்க முடியாத, கடலுக்கு அடியில்  கடல் தாழைகளும் மக்களை அரணாக காத்து உயிர்தியாகம் செய்துள்ளன.  அவற்றை மீண்டும் வளர செய்வதன் மூலம் இந்த மாவட்டங்களின் கடலோரத்தையும், மக்களையும் இயற்கை பேரிடரால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பிலிருந்து காக்கலாம். 

 

நெல் வயல் கோட்டகங்களை போன்ற இந்த கடல் தாழை கோட்டகங்கள், கடலுக்கு அடியில் தஞ்சை மாவட்டதில் சுமார் 12,500 ஹெக்டேர் அளவுக்கும், புதுக்கோட்டை மாவட்டதில் சுமார் 22,000 ஹெக்டேர் அளவுக்கும் உள்ளன என்பதை ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.  இவை கடலுக்குள் 8 – 10 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளன.  அந்த தொலைவு வரை உள்ள கடலின் தரைபகுதி, காவிரி ஆற்று வண்டல் மண் மற்றும் கடல் சேறு கலந்து வளமாக இருப்பதாலும், சூரிய ஒளி கடல் தரையை தொடும் அளவுக்கு ஆழம் குறைவாக (அதிக பட்சம் சுமார் 25 அடி க்குள்) இருப்பதாலும், கடல் தாழைகள் வளர உகந்த சூழல் நிலவுகிறது. 

 

கடல் தாழைகளில் பதினான்கு வகையான தாழைகள் உள்ளன.  சில சென்டிமீட்டர் வரை மட்டுமே வளரும் இலை தாழை முதல் சுமார் நான்கு அடி வரை வளரும் வாட்டாளை, மற்றும் இரண்டு அடி வரை வளரும் கரும்பு தாழை என இவற்றில் பல வகைகள் உள்ளன.   கடல் தாழைகளின் ஒரு செடியை பிடுங்கினால், ஒரு நீளமான தரை அடி தண்டின் ஒரு முனையை பிடுங்குவதாக நினைத்து கொள்ளுங்கள்.  இந்த தரையடி தண்டுகள் ஒரு சிக்கலான வலைபின்னலை உருவாக்கி ஒரு போர்வை போல கடல் பரப்பில் ஒன்றுடன் ஒன்று பின்னி வளர்ந்து தழைக்கின்றன, இதனால் கடல் நீரோட்டங்களின் மூலம் ஏற்படும் அரிப்பையும், புயல் காலங்களில் அலைகளின் சீற்றதையும் மட்டுப்படுத்துகின்றன.    கடற்கரைகள் பாதுகாப்பிற்கு கடலோரத்தில் அலையாத்தி காடுகளும், கடலுக்குள் கடல் தாழைகளும் வேண்டும்.   

 

கடல் பாசியை இதில் குழப்பி கொள்ள வேண்டும்.  கடல் பாசி என்பது வேறு, கடல் தாழை என்பது வேறு.  இலை, தண்டு, வேர் என வேறுபாடு கொண்டு இருப்பவை கடல் தாழைகள் (seagrasses).  ஆனால், இலை, தண்டு வேர் என வேறுபாடு அற்றவை கடல் பாசிகள் (seaweeds).

 

சென்னை முதல் கோடியக்கரை வரை தமிழகத்தின் கடற்கரை வங்காள விரிகுடா கடலை நோக்கி இருப்பதால், பெரிய அலைகள் உருவாகி மணல் பாங்கான கடற்கரையை கொண்டுள்ளது.   அதனால் இங்கு கடலில் தாழைகள் இல்லை.       

 

ஆனால், நாகை மாவட்டத்தின் கோடியக்கரை முதல் திருவாருர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுர மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளுக்கு மறு கரையில் இலங்கை இருப்பதால், இந்த இரண்டு கரைகளுக்கு உட்பட்ட 13000 சதுர கிலோ மீட்டர் கொண்ட பாக் வளைகுடாவில் பெரிய கடல் அலைகள் உருவாக வாய்ப்பு இல்லை.  இதனால் தான் இந்த பகுதிகளில் 2004 சுனாமி அலை பாதிப்பு தடுக்கபட்டது. 

 

அதாவது, வங்காள விரிகுடா மற்றும் இந்தியா பெருங்கடல்களில் இருந்து தனித்த கடல் பகுதியாக பாக் வளைகுடா உள்ளது.  வாடை காற்று வீசும் போது இராமநாதபுரத்தின்  (தெற்கு பாக் வளைகுடா)  வடக்கு கடல் பகுதியில் அலைகள் ஏற்படும், அதேபோல தென்மேற்கு பருவ காற்று வீசும்போது திருவாரூர் மாவட்டத்தில் சேறு கலந்த கடல் அலைகள் ஏற்படும் (வடக்கு பாக் வளைகுடா) கடல் அலைகள் ஏற்படும்.  இந்த இரண்டு பருவகாலங்களிலும் மனோரா குடா (உள்நோக்கி வளைந்த கடல் பகுதி), கட்டுமாவடி குடா மற்றும் அம்மாபட்டிணம் குடா உள்ளிட்ட கடல் பகுதிகள் அமைதியாக, பாதுகாப்பாக இருக்கும்.  இந்த கடல் பகுதிகளில் கடல் தாழைகள் செழித்து வளர்ந்து காணப்படுகின்றன.    

 

மீனவர்களின் கூற்றுப்படி மணல் மேல்குடியின் கோடி முனைக்கு தெற்கே கடல் சற்று அலை அதிகமாகவும் (தரை கடல்), அதன் வடக்கே அலை குறைவாகவும் (குடா கடல்) இருக்கும் என்று தெரிகிறது.  இந்த தரைக்கடல், குடா கடல் போன்றவை பாக் வளைகுடாவின் வடக்கு மற்றும் மத்திய கடலோர மீனவர்களின் வழக்கு மொழி.  புதுக்கோட்டை மாவட்ட மணல் மேல் குடியின் கோடி முனைக்கும், நாகை மாவட்ட கோடியகரைக்கும் ஒரு வளைந்த, கடலுக்குள் மூழ்கிய கடல் திட்டு மூலம் தொடர்பு இருப்பதாக மீனவர்கள் கூறுகிறார்கள்.  இந்த இடத்தில் ஆழம் குறைவான திட்டின் சாய்மானத்தில் நீரோட்டங்கள் ஏற்படுவதால் மீனவர்கள் இங்கு மீன்பிடிக்க செல்வது வழக்கமாம்.   ஒரு காலத்தில் வட இலங்கை மற்றும் தமிழக கடல் பகுதிகள் தொப்புள் கோடி போல் இணைந்து இருந்ததற்கு இந்த கடலடி திட்டு ஒரு சான்றாக இருக்க கூடும். 


அப்படி இருந்தால் அவை மனித நாகரிகத்திற்கு முற்பட்ட கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இருக்கலாம்.  தற்போது இந்த பகுதி, மீன்கள் அதிகம் கிடைக்கும் பகுதியாக மீனவர்களால் கருதப்படுகிறது.   இதை அறிவியியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.   

 

கடற்கரையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் வரை கடல் தாழை ஆராய்ச்சி பணிக்கு சென்றபோது, கொண்டல் காற்று வீசும் காலங்களில் பல வண்ணத்து பூச்சிகள்  கிழக்கு திசையிலிருந்து பறந்து செல்வதையும், சில எங்கள் படகில் அமர்ந்து செல்வதையும் கண்டு இருக்கிறோம், இந்த வண்ணத்து பூச்சிகளை போல ஆவுரியாக்களும் (கடல் பசு) இலங்கைக்கும், இந்தியாவிற்கும் பருவகாலங்களுக்கு தகுந்தாற்போல இடம்பெயர நிறைய வாய்ப்புள்ளது.  

 

காவிரி கிளை நதிகளின் நீர் கடலில் கலக்கும்போது, டெல்டா மாவட்டங்களின் கடல் பகுதியில் நீரின் உப்பு தன்மை குறைந்து, கடல் நீரில் கலக்கல் ஏற்படுகிறது.  டீ கஷாயம் வடிகட்டும்போது பாலில் கலப்பது போல, அலையாத்தி காடுகளின் மக்கிய இலைகள் மற்றும் வண்டல் மண் நிறைந்த நீர் கடலில் கலக்கிறது.  இதனால், ஆற்றின் ஊட்டசத்து மிகுந்த நீர் அதிகரித்து, கடலுக்குள் சூரிய ஒளி குறைந்து, உப்பு குறைந்து தஞ்சை மாவட்ட கடல் செந்நிறமாக இருக்கும்.  மேலும், இந்த சமயத்தில் ஏற்படும் கடல் நீர் உப்பு குறைவால்,  பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் வளர்ந்துள்ள கடல் தாழைகளின் இலைகள் அழுகி கடலில் மேலும் ஊட்டசத்து அதிகரிக்கும்.   (கடல் தாழைகளின் தரையடி தண்டுகள் கடலுக்கு அடியில் உயிரோடு இருப்பதால் அவை மீண்டும் வெயில் காலத்தில் வளர்ந்து விடும்.) 

 

மேட்டூர் அணையில் நாம் போராடி பெரும் அதனை டி‌எம்‌சி தண்ணீரும், டெல்டா பகுதி விவசாயம் போக மீதம் இந்த கடலில் தான் கலக்கிறது.  இந்த ஊட்டசத்து மிகுந்த கடல் நீர், கடல் நீரோட்டத்தால் கோடியக்கரை முதல் ராமேஸ்வரம் வரை உள்ள கடல் பகுதிகளுக்கும், இலங்கை கடல் பகுதிகளுக்கும் அடித்து செல்லப்பட்டு, இந்த சத்து மிகுந்த நீரில், கோடிக்கணக்கான தாவர மற்றும் விலங்கு நுண்ணுயிரினங்கள் உற்பத்தியாகி, அதை உண்டு இறால்கள், நண்டுகள் மற்றும் மீன்கள் உற்பத்தியாகின்றன.  இதனால் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட பகுதி மீனவர்களுக்கு நல்ல மீன்கள் கிடைக்கின்றன.  பட்டுக்கோட்டை போன்ற நகரங்களில் இருப்போருக்கு கடல் உணவு புரோட்டின் வருடம் முழுவதும் கிடைக்கிறது, குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரதம் குறைவான விலையில் கிராமங்களுக்கு சைக்கிள் மீன் வியாபாரிகள் மூலம் செல்கிறது.  பல நூறு கோடி ரூபாய்க்கு கடல் உணவு ஏற்றுமதி மூலம் அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது. 


கடல் தாழையில் கணவாய் மீன் முட்டையிட்டுள்ள காட்சி (இடம் தஞ்சை மாவட்ட கடற் பகுதி - போட்டோ by ஓம்கார் ஃபவுண்டேஷன் )

 



கடல் தாழைகளில் பதுங்கியுள்ள தாழஞ்சுறா - இடம் புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதி  


இலங்கையின் வட மேற்கு பகுதியில் பெரிய ஆறுகள் கலப்பதில்லை என்பதால் அங்கு கடல் ஊட்ட சத்து நீர் குறைந்த பாறு கடல் எனப்படும், எனவே கடல் நுண்ணுயிரினங்கள் - மீன்கள் உற்பத்தியாக தேவையான ஊட்டசத்து தமிழக கடல் பகுதிகளில் இருந்து நீரோட்டம் மூலம் பரவி அங்கும் மீன்கள் அதிகரிப்பதற்கு உதவி செய்ய அதிக வாய்ப்புள்ளது. இதை பற்றிய ஆராய்ச்சி எதிர் காலத்தில் செய்ய வேண்டும்.  நீரோட்டங்களுக்கு எல்லையில்லை.

 

ஆவுரியாக்கள் (கடல் பசுக்கள்), வெயில் காலங்களில் கடல் தாழைகள் வளரும்போது, உணவை தேடி நம் கடலோரத்திற்கு வருகின்றன.  ஒரு நாளைக்கு 40 கிலோ வரை கடல் தாழைகளை மேய்ந்து கொண்டே தொடர்ந்து நகர்கின்றன.  காடுகளில் யானைகள் விதை பரவலுக்கு உதவி காடுகளை உற்பத்தி செய்ய உதவுவது போல, ஆவுரியாக்களும் (கடல் பசுக்கள்), கடல் தாழைகளின் (seagrass) விதை பரவலுக்கு உதவுகின்றன, அதனால் நம் கடலில் மீன் வளம் அதிகரித்து மீனவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.  

 

எனவே, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தமிழக அரசின் வனத்துறை மூலம் அமையவுள்ள “கடல் பசு பாதுகாப்பகம்”, மீனவர்களின் நலனுக்கானது என்பதில் எந்த விட ஐயமும்மில்லை! ஆவுரியாக்கள் பாதுகாத்து கடல் வளம் செழித்தால், மீனவர் நலன் மேம்படும். 

 

ஆவுரியாக்கள் கடலில் வாழும் மனிதர்கள். அவர்களின் வாழ்வியலை பற்றி – அவர்களை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதை பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்...