இன்று 26 டிசம்பர் சுனாமி நினைவு தினம். 21 வருடங்களுக்கு முன், 2004 இல் PhD படிப்புக்காக தயார் செய்து கொண்டு இருந்த காலம்.
கிறிஸ்துமஸ் பொதுவாக வேளாங்கண்ணியில் ஒரு சிறப்பான காலம். விழாக்கோலம் பூண்டு, பல்வேறு மாநில மக்கள் உற்சாகத்துடன் வருவார்கள். அங்கு கடை வைத்து இருக்கும் வியாபாரிகள் இரவு பகலாக வேலை செய்வார்கள்.
அன்று காலைச் செய்தியில், கடல் அலைகள் தாக்கியதாக தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் வந்து கொண்டு இருந்தது. சுனாமி என்று பெயர் அப்போது மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
தங்கையின் வீடு வேளாங்கண்ணியில் இருந்ததால், பலமுறை ஃபோன் செய்தும் எடுக்கவில்லை.
பதட்டத்தில் அம்மா உடனே சென்று பார்க்க சொன்னார். அவசரத்தில் ஒரு அம்பாஸடர் காரை வாடகைக்கு எடுத்து கொண்டு நண்பர் அன்புவுடன் கிளம்பினேன். அம்பாஸடர் அரை நூற்றாண்டு காலமாக, நம் ஒவ்வொரு தேவைக்கும் வந்து நிற்கும்.
சகோதரியுடன் பிறந்த ஆண்களுக்கு எப்போதும் குடும்பத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களை திருமணம் செய்து கொடுத்த பிறகு, என்ன செய்கிறமொ இல்லையோ, அவர்களுக்கு உதவி என்று அழைக்கும்முன் அம்பாசிடர் கார் போல உடனே சென்று நிற்க வேண்டும்.
சகோதரிக்கு பெண் குழந்தை பிறந்து ஆறுமாதங்களே ஆகி இருந்தது. தாய்மாமனாக பொறுப்புக் கூடி இருந்தது. கவலையுடன் எதையும் யோசிக்காமல் காரை எடுத்துக் கொண்டு வேளாங்கண்ணி நோக்கி பயணம் செய்து கொண்டு இருந்தோம். அந்த காலத்தில் அலைப்பேசி ஒரு சிலரிடம் மட்டும் அரிதாக இருக்கும், STD நிலையங்களை தவிர்த்து வேறு தொலைபேசி வசதியில்லை. நிழல் தரும் புளிய மரங்களை அகற்றிய நிலையில், கிழக்கு கடற்கரை சாலை முழுமையடையாத நிலையில் இருந்ததாக நினைவு.
காரில் நண்பரிடம், MSc வகுப்பில் படித்த சுனாமி என்ற அலைகளை பற்றி சொல்லிக் கொண்டு இருந்தேன். ஜப்பானில் தான் அது வருமாம், நம்ம ஊருக்கு என்னாச்சு என பேசி கொண்டே வந்தோம்.
கல்விச்சாலை புத்தகங்கள் நம் ஊர் கடல் தொடர்பான வரலாறு, நீரோட்டங்கள், கடல் சார் வாணிகம், கடந்த கால பேரிடர்கள், மீட்டுருவாக்கம், தற்காப்பு மற்றும் பேரிடர் தன்னார்வப்பணி நடை முறைகள் குறித்து மாணவர்களுக்கு இன்னும் தெளிய சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
சுனாமி இதற்கு முன்பும் தமிழகத்தை தாக்கி உள்ளதாக பின்புதான் தெரியவந்தது. ஆழிப்பேரலை தாக்கிய காவேரி பூம்பட்டிணமும், குமரிக் கண்டமும் இன்று கடலுக்குள். இதை போன்ற இயற்கை பேரிடர்கள் வந்தால் எப்படி எதிர்கொள்வது என்று அறியாத தலைமுறைக்கு 2004 சுனாமி ஒரு பேரிடி. கடல் மட்ட உயர்வும், ஆழிப்பேரலையும் பண்டைய தமிழரின் நாகரிகமும், வாழ்வியலும் பிரிக்க முடியாதது. அடுத்தடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியது.
ஒரு வழியாக வேளாங்கண்ணி சென்றடைந்தவுடன், நுழைவாயிலை தாண்டியதும் ஒரு பேரமைதி. மக்கள் யாருமின்றி வெறிச்சோடி போய் இருந்தது. ஒரு சில வாகனங்கள் மிக வேகமாக சென்று கொண்டு இருந்தன. நுழைவாயில் அருகே இருந்த தங்கையின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அவர்கள் அப்போதுதான் தஞ்சை சென்று இருந்தார்கள் என பின்னர் தான் தெரிய வந்தது. சிலர் அழுதபடி சென்று கொண்டு இருந்தனர். எங்களுக்கு நிலைமையின் தீவிரம் குறித்து புரியவில்லை.
மழைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. பொதுவாக தமிழ் நாட்டில் மழைக்கால பேரிடர்கள் சில அறிகுறிகளுடன் வரும். புயல் கூண்டுகள் ஏற்றப்படும். வானிலை அறிக்கையில் மழை வெள்ளம் குறித்த முன்னேச்செரிக்கை சொல்வார்கள். ஆற்றங்கரையில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தபடுவார்கள். வானம் கருக்கும், காற்றுடன் கூடிய மழை இருக்கும். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வார்கள்.
ஆனால் அன்று, ஒன்றுமே நடக்காதது போல, டிசம்பர் மாத இயல்பில் வானம் இருந்தது. ஒரே ஒரு வித்தியாசம், வேளாங்கண்ணியின் சாலைகள் மிக அமைதியாக, பரபரப்பு இல்லாமல் இருந்தது. பேருந்து நிலையம் அருகில் கடை வைத்திருந்த அத்தானின் கடை என்னாச்சு என தெரியவில்லை என பார்க்கச் சென்றோம். வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தை நெருங்க நெருங்க, நிலைமையின் தீவிரத்தை உணர முடிந்தது. பலர் அழுது கொண்டே உறவினரை காணாமல் தவித்து கொண்டு இருந்தனர். அந்த சூழ்நிலையிலும் சில காவலர்கள் மக்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தனர். கடற்கரைக்கு செல்லும் மணல் பாதை நெடுக கண்ட காட்சி... இன்றும் கண் கலங்க வைக்கிறது. இப்படி ஒரு துயர நிலை நம் மக்களுக்கு வந்திருக்ககூடாது. நின்று கொண்டு இருந்தவர்கள் மீண்டும் ஒரு அலை வருமா என பயந்து கொண்டு இருந்தனர். பேரலையின் பேரழிவு நேரடியாக பார்த்தவுடன், அலை மீண்டும் வரலாம் என அச்சம் ஏற்பட்டது. இதற்கு மேல் அங்கு இருக்கத் தோன்றாமல், காரை நோக்கி விரைந்து வந்தோம். சில மணி நேரங்களில், சுனாமியால் ஏற்பட்ட பெரும் பாதிப்பு குறித்து மேலும் செய்திகள் வரத்துவங்கின.
அடுத்த நாள், கடலூர் பிளஸ் தொண்டு நிறுவனத்தில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால தன்னார்வலராக பணியாற்ற அழைத்தார்கள். ஏற்கனவே அந்த மாவட்ட கடலோர கிராமங்களில் கல்லூரி விடுப்பில் தன்னார்வலராக பணி செய்த அனுபவம் இருந்ததால், உடனே வீட்டில் சொல்லி விட்டு புறப்பட்டேன். பிளஸ் நிறுவனர் அந்தோணி சாமி அவர்கள் , பிற்காலத்தில் ஓம்கார் என்ற NGO நிறுவனம் துவங்க உத்வேகம் அளித்தவர். கடந்த 15 வருடங்களாக, ஓம்கார் மையத்திற்கு சுற்றுசூழல் கல்வி பெற வரும் குழந்தைகளுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு பணிவுடன் இலவச மதிய உணவு அளிக்க, பிளஸ் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களே காரணம். பணிவுடன் பிறர்க்கு உணவு பரிமாறல் ஒரு வரம். சிவன் அருள்.
வீட்டு விஷேசங்களில், வாழை இலையில் மனமுவந்து ஒரு கரண்டி உணவு பரிமாறியவுடன், பகையிளகி பிரிந்த உறவுகள் சேரும். உணவுப் பரிமாறல் தமிழரின் வாழ்வியலில் பிறர் மீதான அக்கறையை, அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வு.
சுனாமிக்கு பிறகு தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தொண்டு நிறுவன ங்களுடன் இணைந்து இரவு பகலாக மக்களுக்கு பெரும் உதவி செய்து கொண்டு இருந்தது. உள்துறை அமைச்சகம் சர்வதேச உதவிகளை பேரிடர் பகுதிகளுக்கு அளிக்க விதிமுறைகளை தளர்த்தியது.
கடலூர் மாவட்டத்தில் மரியாதைக்குரிய ககன்தீப்சிங் பேடி அவர்களுடன் பிளஸ் அந்தோணிசாமி அவர்களும் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் இரவு பகல் பாராது பணியாற்றினர். இரவு முழுவதும் வரும் நிவாரண பொருட்களை வாகனத்திலிருந்து இறக்கி, பகலில் கிராமங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். உண்ணாமல் ,உறங்காமல் பல இளைஞர்கள் தன்னார்வ பணியாற்றினர்.
மற்ற மாவட்ட மக்கள், சுனாமி பாதிப்பு பற்றி தெரிந்து, அதை தங்கள் வீட்டின் துயராக எண்ணி, மலைபோல் நிவாரண பொருட்களை அனுப்பி கொண்டு இருந்தனார். மளிகைச் சாமான்கள், காய்கறிகள், மருத்துவ உதவிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மூலம் சென்று சேர்ந்தன.
சில ஊர்களில், உடைமைகளையும் உறவினர்களையும் இழந்தோர் மிகுந்த சோகத்திலும், அதிர்ச்சியிலும், கோபத்திலும் இருந்தனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்களுடன் சேர்ந்து அடுத்த சில மாதங்களுக்கு இந்த பணி தொடர்ந்தது. அலையாத்தி காடுகள் இருந்த இடங்களில் மக்கள் பாதிப்படையவில்லை.
சுனாமி என்ற பேரிடரால் பெருந்துயரம் வந்தபோது, நம் மக்கள் அனைவரும் அரசுடன் ஒன்றிணைந்து, மனிதம் துளிர்த்து, ஒருவருக்கொருவர் உதவி செய்த, மனம் நெகிழும் நிகழ்வுகள் மறக்க முடியாதது. சாதி, மத பேதமற்ற சேவையில் பல்வேறு தரப்பினரும் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர், மற்றவர்களின் உறவினர்கள் இழந்து வாடும் துன்பத்தை, தன் வீட்டு துக்கமாக கருதி கண்ணீர் சிந்தி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு தாய் பிள்ளைகளாக உதவினர்.
பேரிடர்கள் மானுடத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் 🇮🇳
சுனாமியால் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் 🙏🙏
Jaihind
Balaji Vedharajan
No comments:
Post a Comment