Tuesday, July 1, 2025

அலையாத்திக்காட்டு மாடுகளும் - நீலக்கார்பனும்...


2002 இல் அலையாத்திக் காடுகளையும் பாதுகாக்க வேண்டி நான் மேற்கொண்ட 1100 km பைக் பயணத்தில், பொதுவாக அலையாத்தி குறித்த விழிப்புணர்வு குறைவாகவே காணப்பட்டது. அப்பயணத்தில், கடலோர கிராமத்தில் தங்கி இருந்த போது, நண்பர் ஒருவர் கொடுத்த இரவு உணவை சமைக்க, நன்கு பட்டுப்போன சுள்ளிக்குச்சிகள் பயன்படுத்தினார். அலையாத்தி விறகுகள் நன்றாக அடுப்பில் எரியும் திறன் கொண்டவை என்று கூறுவார்கள்.
ஆனால் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, மக்களிடம் அலையாத்திக் காடுகள் குறித்த பார்வையை முற்றிலும் மாற்றியது. பரவலாக இந்தியா முழுக்க இக்காடு வளர்க்கும் திட்டங்கள் துவங்கப்பட்டன . குறிப்பாக இந்தியாவின் கிழக்கு கடலோர மாநிலங்களில் அலையாத்தி வளர்ப்பு – சுனாமி தடுப்பாகவே முன்னிலைப்படுத்தப்பட்டன.
தற்போது, புளூ கார்பன் என அழைக்கப்படும் பருவ நிலை மற்ற தீர்வாக அலையாத்தி கருதப்படுவதால், சர்வதேச அளவில் இவற்றின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
நீலக்கார்பன் என்றால் என்ன? என்று பார்ப்போம்
மனிதர்கள், தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு, புவியில் இயற்கையாக சேமிக்கப்பட்ட பெட்ரோலிய எண்ணையை (ஹைட்ரோ கார்பன்) பெருமளவில் உறிஞ்சி எடுத்து கார்களில், ஆலைகளில் பயன்படுத்தியதால், வளி மண்டலத்தில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்ஸைடு) வெளியாகி அதிகரித்தது.
இதனால் சூரிய ஒளி, பூமியின் மேற்பரப்பில் பட்டு எதிரொலிக்க முடியாமல், ஒரு கண்ணாடி பெட்டி சூடாவதை போல பூமியின் வளிமண்டல வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி, பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் மெல்ல உயர்ந்து, அடிக்கடி புயல்கள் வலுத்து, எதிர்பாரா மழை வெள்ளம் ஏற்பட்டு, கார்கள் மிதந்து, வீடுகள் மூழ்கி மக்களுக்கு பெரும் இன்னல் ஏற்படுகிறது.
இப்படி நாம் வளிமண்டலத்தில் வெளியிட்ட கரியமில வாயு, உலக அளவில் ஏற்படுத்திய பாதிப்புக்கு, அந்த பாதிப்பினால் ஏற்பட்டுள்ள சுற்றுசூழல் மாசுபட்டிற்கு, பரிகாரம் செய்ய தற்போது உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
சரி, வளிமண்டலதிதில் உள்ள அதிகப்படியான கரியமில வாயுவை மீண்டும் கரிமமாக (கரி அல்லது கார்பன்) நிலத்திற்குள் சேமிப்பது எப்படி என உங்களுக்கு கேள்வி எழலாம்?
அதற்கான ஒரே வழி, மலை முகடு முதல் கடற்கரை வரை காடுகளின் பரப்பை அதிகரித்தால், அதன்மூலம் வளிமண்டல கரியமில வாயு உறிஞ்சபட்டு, வெப்பநிலை குறைந்து அனைத்து பாதிப்புகளும் மீண்டும் சரியாகும்! என்பதை இதன் சாராம்சம்.
இதற்காக, பெருமளவில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அலையாத்தி மரங்கள் வளி மண்டலத்தில் இருந்து ஒளிச்சேர்க்கைக்காக கரியமில வாயுவை உறிஞ்சி, அதை கடலோர சேற்றில் கார்பனை சேமிக்கும் கலனாக இருப்பதால் இவை புளூ கார்பன் (கடலின் வண்ணம் நீலம் என்பதால் புளூ கார்பன்!) என்று அழைக்கப்படுகின்றன.
அலையாத்தி வனங்களில், மாடுக்கடி உயரத்தை தாண்டிய மரங்களை, மாடுகள் தொந்தரவு செய்வதில்லை. அலையாத்திக் காட்டு மாடுகள், அக்காடுகளின் ஒரு அங்கம்.
அலையாத்திக்காடுகளின் கடலோர விளிம்பில், உப்பு நீர் சேற்றில், அவை மேய்வதில்லை, அக்காடுகளின் நில நோக்கிய விளிம்பில் தனக்கான உணவை காலம் காலமாக தேடுகின்றன. அனுபவம் வாய்ந்த தோட்டக்காரரரை போல, மாடுகள் அலையாத்திக்காடுகளின் நில விளிம்புகளை மென்று, மேய்ந்து வடிவமைக்கின்றன.
அலையாத்திகாடுகளின் இலைகளை உண்ணும் மாடுகள் நன்றாக பால் கொடுப்பதாக கிராமத்தில் கூறுவார்கள்,
ஆம், இக்காடுகளின் ஊட்டம், மாடுகள் மூலம் ஊட்டசத்து மிக்க பசும்பாலாக அவற்றின் கன்றுகளுக்கும், மக்களுக்கும் செல்கின்றன.
குழந்தைகளுக்கு பசும்பாலாக கறந்து ஊட்டப்படும்போது, இக்காடுகளும், மாடுகளும் இம்மக்களின் வாழ்வோடும் இரண்டற உயிராய் கலந்து விடுகின்றன.
கட்டற்ற , சுதந்திரமாக திரியும் அலையாத்தி காட்டு மாடுகளின் சாணம், பரவலாக நெய்தல் நிலங்களில் மழைக்கால மூலிகைகள் மற்றும் இன்ன பிற உயிரினங்களுக்கும் இயற்கை உரமாகின்றன.
கடலோர கிராமங்களில், குறிப்பாக தென் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் மாடுகள் பாரம்பரியமாக இயல்பாக சுற்றி திரிகின்றன. காலம் காலமாக இம் “மா” நிலத்தில் வாழும், கீழடித்தொன்மை தமிழ் இனத்திற்கும், கால்நடைகளுக்கும் இடையேயான பாசமும், பிணைப்பும், சல்லிக்கட்டும் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது.
தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு பகுதியான கால்நடை வளர்ப்பு, இன்றும் உயிர்ப்புடன் – இங்கு கட்டப்படாத மாடுகளுடன் இங்கு சற்றே வித்தியாசப்பட்டது.
பொதுவாக இங்குள்ள மாடுகள் மாலையில் வீடுகளில் கட்டப்படுவதில்லை. மாறாக அவை கூட்டம் கூட்டமாக, ECR சாலைகளில் ஓய்வெடுத்து கொள்ளும், விபத்தில் சிக்கி சாலையில் பயணிப்பவர்க்கு சிக்கலை ஏற்படுத்தும்.
காலம் காலமாக அவை ஓய்வெடுத்த, இராமேஸ்வரம் செல்லும் அன்னதான சத்திரங்கள் நிறைந்த புளியமரச் சாலைகள், இருபது ஆண்டுகளாக இசிஆர் சாலைகளாக மாறிய விஷயம் இன்னும் இம்மாடுகளுக்கு புரியவில்லை. அதி வேகச்சாலைகளில், விலங்குகளை கண்டு ஒதுங்கி செல்லும் பொறுமை யாருக்கும் இல்லை.
ஆனால், நம் கிராமச்சாலைகள் இன்றும், எல்லார்க்கும் எல்லாம் என்ற நிலையில் பயிர்களை உலர்த்தவும், ஆடு, மாடுகள் ஓய்வெடுக்கவும் , அதனூடே வேகம் குறைத்து, ஒலி எழுப்பாமல், வளைந்து செல்லும் காரோட்டிகளையும் காணலாம்.
இப்பசுக்கள் விடிந்தவுடன், மேய்க்க ஆட்கள் யாரும் இல்லாமலயே, வரிசையாக தானாக கடற் கரைக்கு மேய்ச்சலுக்கு சென்று விட்டு, மாலையில் மீண்டும் ஊருக்குள் வரும். நெற்பயிர்கள் வளரும் காலங்களில், இவற்றை வயலுக்குள் விடமாட்டார்கள் என்பதால், பெரும்பசியுடன் அவை கடலோரத்திற்கு செல்லும். அவற்றுக்கு வேறு வழியில்லை.
அங்கே, வடகிழக்கு மழை பெய்து செழித்து வளர்ந்த, அலையாத்தி மரங்களின் இளம் துளிர் இலைகளை கடித்து, மென்று, உப்புடன் கூடிய தனிச்சுவையை உண்டு மகிழும். “நறுக்” “முறுக்” என இந்த அலையாத்தி காட்டு மாடுகள் விதைகளையும், இலைகளையும் சுவைத்து கடலோரங்களில் இயல்பு மாறாமல் இளைப்பாறும்.
அலையாத்தி மர விதைகள் இதய வடிவில் இருக்கும்.
அவை கடல் நீரும், நன்னீறும் புணரும் கார் காலங்களில்
விழுந்து மிதக்கும்.
மிதந்து செல்லும் விதை,
இருநீரின் சுவையில் மயங்கி, மெல்ல விரிந்து,
கடலோர புதைச்சேற்றில் புதையாமல்,
கருப்பையில் பதியும் இளம்உயிர் போல்
மென்களியில் மேற்பதிந்து நிற்க,
அதில் சில நாட்களில் சிறு துளிர் வளர்ந்து,
பின் மரமாய் புயலை தடுக்கும்.
லட்சக்கணக்கில் இவ்வாறு உதிரும் விதைகளில் கடுக்கா நண்டுகளும், மாடுகளும் தின்றது போக, மீதம் உள்ளவை செடியாகும். இயற்கை அன்னை ஒருவரும் பசித்திருக்க விடுவதில்லை, சில நல்ல மனிதர்களை போல...
பெருங்காடு உள்ள இடங்களில், அலையாத்தி மர இலைகளும், விதைகளும் மாடுகளுக்கு நல்ல ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருப்பதால், அவை இயற்கையாகவே நல்ல கன்றுகளை ஈன்று, அடர்ந்த அலையாத்தி காடுகளில் சுதந்திரமாக வளர்ந்து மீண்டும் ஊருக்குள் வரும்.
அவற்றில் ஒரு பகுதி, நிரந்தரமாக காடுகளுக்குள்ளேயே பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றன. இவை காட்டு மாடுகள் என்றே இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகின்றன.
காட்டு மாடுகள், அலையாத்தி காடுகளுக்குள் மனிதர்களை கண்டால் கடைசி வரை துரத்தி செல்லும்.
அவை துரத்தினால், நமக்கு சேற்றில் ஓடுவது சிரமம்,
அவையோ, கடைசி பரீட்சை எழுதி முடித்து, உற்சாகத்துடன் துள்ளி குதிக்கும் குழந்தைகளை போல குதித்து துரத்தும்.
கொஞ்சம் மறைந்து நின்றால், அலையாத்திக் காட்டு கொசு, படல் படலாய் அமர்ந்து அப்படியே வெயிலுக்கு அருந்தும் பதநீரை போல உங்கள் குருதியை இழுக்கும்.
இவை இரண்டிற்கும் நண்பனான,
அலையாத்தி காட்டு நரிகளுக்கும்,
அவைதேடும் சம்பா நண்டுகளுக்கும்,
அக்காடுதான் குலதெய்வம்.
இருந்தாலும் - இவற்றுக்கு,
மனிதர்களால் புவியில் உயரும் கரியமில வாயுவும்,
அதை தடுக்க,
கரும்பச்சை அலையாத்தியை “நீலக் கார்பன்” என்று
சொல்லும் புது டிரெண்டும்,
தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே!
- சரி, என் காருக்கு பெட்ரோல் இட்டு நீல கார்பன் பற்றிய வகுப்புக்கு செல்ல வேண்டும் – மீண்டும் சந்திப்போம்..
- பாலாஜி வேதராஜன்

No comments: