Tuesday, September 30, 2025

சர்வ தேசமும் சிரம் திரும்பிப் பார்க்கும் தேசம் எங்கள் தேசம்.

சர்வ தேசமும் சிரம் திரும்பிப் பார்க்கும்

தேசம் எங்கள் தேசம்.

குருதிப் பெருக சாய்ந்த போதும்,

காத்த கொடி வீழா,

குமரனின் தேசம் எங்கள் தேசம்.

கப்போலோட்டிய தமிழன் முதல்

காமராசர் வரை,

கண்ட தேசம் எங்கள் தேசம்..

காளி வாழ் வங்கம் முதல்,

காந்தாரம் வரை பரந்த

தேசம் எங்கள் தேசம்.

பாரதியின் வரி,

கலாமின் கனவு,

நெஞ்சில் நான்முக அரிமா என

பகலிரவு பாராது சீராய் சான்றோர் பலர்

பாரதப் பணி செய்யும்

தேசம் எங்கள் தேசம்.

சித்தாந்த சாத்திரங்கள் நாளும்

சரியை, கிரியை, யோகம், ஞானம் - என

சைவ நாற்பதங்கள் நாளும்

திருமுறைகள் பனிரெண்டும் - அருளும்

தென்னாடுடையானின்

தேசம் எங்கள் தேசம்.

கொடுவரியின் சுந்தர வங்கம்,

கொடுப்புலியின் கோதாவரி தெலுங்கம்,

அரிபடா ஆமையின் கலிங்கம்,

ஆவூரியா காக்கும் தமிழரின் அகம் - கடல்

அடிமட்ட நீர் எழும்பி வளம் கொடுக்கும் கேரளம்,

இயற்கை இயல்மாறா நெதராணியின் கருநாடகம்,

குறிஞ்சி நெய்தல் கூடும் கொங்கணி மராட்டியம்,

பாலை நெய்தல் புணர் நில உப்பில்

பாங்காய் நீந்தும் சிந்து ஒட்டகம்,

பாரீர் எம்

கடல்சார் நில வளத்தை!

காப்போம் எம் தேச கடல் வளத்தை!

Balaji Vedharajan

--
பொருள்
காந்தாரம் - தற்போதைய ஆப்கானிஸ்தான்
கொடு வரி - புலி
கொடுப்புலி - fishing cat
அரிபடா - ஆமைகள் கூடும் இடம்
கலிங்கம் - ஒரிசா
ஆவூரியா - கடல் பசு
அடிமட்ட கடல் எழும்புதல் - upwelling
நெதரணி - netrani island
உப்பில் நீந்தும் ஒட்டகம் - kharai camel

No comments: