சென்னை நகர ரயில் பயணத்தில்...
ஜன்னலோரக் காற்றை நேசித்து ஒரு பெரியவர். எழுபது வயது இருக்கும். காலம் வரைந்த கோட்டோவியமாய் முகச்சுருக்கங்கள். எளிமையான கதர் வேட்டி சட்டைக்குள் ஒடுங்கி இருக்கையின் ஓரம் அமர்ந்திருந்தார். இரயிலின் பரபரப்பிற்குள் சலனம் இல்லா சிலையாய் அவர்.
தினமும் வேலைக்கு சென்று திரும்பும் அயர்ச்சியோ, மனப்பளுவோ, எதிர்கால திட்டங்களோ அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. அவரை பொறுத்தவரை, அந்த பயண கணத்தில் மட்டுமே இருந்திருப்பார். ஆன்மா உயிர்ப்புடன் இருக்கும்போது, மனவுடல் சலனமற்று இருக்குமோ?
அதே இருக்கையில் ஒரு இடம் விட்டு பக்கத்தில், இருப்பைக் காட்டும் இயல்பில், போதையில் நடுத்தர வயதில் உடல் மெலிந்த மற்றொருவர். காற்றில் கோபமாய் குறை சொல்லி ஆற்றாமையில்... குடித்த வீரன்.. ஆர்பாரிக்கும் மன எழுச்சியில் கதைத்துக் கொண்டு இருந்தார். அவ்வபோது தலையைக் கோதி, முழுக்கைச் சட்டையின் பொத்தான்களையும் சரி செய்து கொண்டார். 1980 களின் காது மறைக்கும் கிராப் தலையுடன் , பெல் பாட்டம் அணிந்து உற்சாகமாய் வாழ்க்கையை துவங்கி இருப்பார் போலும், துவைத்து எடுத்த வாழ்வின் அழைக்கழிப்பில் சீரான கிராப் மட்டும் மாறவில்லை!
இருக்கையின் ஒருபக்கம் பெரியவர் வாழ்வின் அனைத்தையும் கடந்த சமநிலையில், மறுபக்கம் அதைக் கடக்கும் துன்பப் பிதற்றலில் மற்றொருவர். வெவ்வேறு படிநிலையில் மனிதர்கள் அருகருகே பயணிக்க இரயில் இருக்கை ஒன்றும் சொல்வதில்லை. இருக்கைகள் பலரை பார்த்து இருக்கும், அவர்கள் நிரந்தரமில்லை என அது நன்கு அறிந்திருக்கும். பயணம் முடிந்தவுடன் அவர்கள் இறங்கித்தானே ஆக வேண்டும். பின்பு நிலவும் பேரமைதியில் இருக்கைகள் ஓய்வெடுக்கும்.
இரயில் அடுத்த நிலையத்தில் மெல்லச் சரணடைந்தது.
சென்னையின் நகர தரைவழி இரயில்கள், எளிய மக்களின் அன்பர். இவை யாரையும் அளவுகோல் வைத்து நிர்ணயிப்பது இல்லை. அதிகப் பயணக் கட்டணம் கேட்பதும் இல்லை. குறைந்த பட்சம் ஐந்து ரூபாய்க்குள் செல்ல முடியும். நாளெல்லாம் உழைக்கும் நடுத்தர மக்களிடம் , சன்னலோரம் சற்றே வீசும் காற்றுக்கு நகர இரயில் காசு கேட்பதில்லை.
‘எல்லோரும் வாங்க’ என்று சென்னை நகர ரயில் பெட்டிகளின் திறந்த வாயில்கள் எப்போதும் வரவேற்கும், அனைவரையும் அரவணைத்து தன்னுள் ஈர்த்து, மக்களை பூக்களாய் பத்திரமாய் நிலையங்களில் உதிர்த்து செல்லும்.
அதன் குறைவான கட்டணத்தில், எதிர்கால கனவை கட்டமைத்து, விண்ணைத் தொட்ட நம் கடந்த கால இளம் தலைமுறைகள் பல இருக்கும்!.
அந்த இரயில் நிலையத்தில், உற்சாகம் துள்ள ஏறிய இரு பள்ளிக் குழந்தைகள், ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு நடு இருக்கையில் அமர்ந்தனர். நிச்சயம் இன்று கடினமான பாடங்கள் இருந்திருக்காது. ஒருவேளை மதியத்திற்கு பின், பள்ளியில் விளையாட அனுமதித்து இருக்கலாம், அல்லது படம் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்ந்திருக்கலாம். அந்த மகிழ்வுடன் அவர்கள் வந்தததும், அந்த இருக்கை உயிர் பெற்றது.
அவர்களின் சிரிப்பொலியில், இரயிலில் இறை வெளிச்சம்.
அதில் ஒரு குழந்தை காகிதத்தை மடக்கி, சில நொடிப்பொழுதில் பொம்மை உருவாக்கியது. அதை பார்த்த பெரியவர், சற்று இன்னும் ஒடுங்கி அவர்களுக்கு இடம் கொடுத்து முதன் முறையாக புன்னகைத்தார். இளம் தலைமுறை புதிய நம்பிக்கையை உருவாக்கும் என்பது விதி. காற்றில் பேசியவரும் சற்றே நகர்ந்து குழந்தைகளுக்கு இடம் கொடுத்துக் குரலை நிறுத்தினார்.
அறம் கண்ட இருக்கை மகிழ்ந்து இருக்கும்.
Balaji Vedharajan