Tuesday, April 21, 2026

கொம்பன் சுறா காவலுக்கு

மாசாத்துவான் மகள்

மகிழ்ந்து நடந்த,

புகாரின் வீதி - கடலுக்குள் இன்று,

கொம்பன் சுறா காவலுக்கு.

கொற்கைக் கோமான்

கொலுவில் அமர்ந்த,

முத்துப் பீடம்கடலுக்குள் இன்று,

முந்நீர் வாழ் சிப்பிகள் காவலுக்கு.

மாமல்லனின் குடைவரை

எஞ்சியது ஒன்று

மீதம் ஆறும் - கடலுக்குள் இன்று,

காவலுக்கு கடல் ஓங்கிகள் .

தொப்புள்கொடியாம் ஈழம்-

குமரிக்கண்டத்

தொன் தமிழர் அதை

நடந்தே கடந்திருப்பாரோ?

கடல்கோள் தமிழ்நிலம்

கேட்டால் பல கதைகள் கதைக்கும்,

நகரும் மணல்மேடுகளும் – நம்

தீவுகள் இருபத்தொன்றும்

கோடி யென முடியும்

மூன்று நிலமுனைகளும்,

கிழக்கே நீண்டு தொப்புள்கொடியாய்

இணைந்திருந்திருக்கும் – அதை

அன்றே ஆழி தின்று தீர்த்திருக்குமோ!

தமிழ்நிலச் சான்றோரே,

அறிவியல் சொல் கேளீர்,

எம் கேளிரெ!

ஆழிக்கு அழிவில்லை - ஆயினும்

மணல் வற்றிய ஆற்றின் வழி

கடல் நிரம்பி காவிரிச் சமவெளியில்

கண்மாய்கள் நிறைக்கும்

கரும்புகை கக்கும் கணவாய்கள்

காவல் காக்கும்.

தமிழ் நிலம் காப்பீர்.

Balaji Vedharajan

 


No comments: