Tuesday, April 21, 2026

சித்திரையில் பூக்கும் வாட்டாளை

இந்த சித்திரை துவங்கிய நன்னாளில், நம் கடலில் இன்று எடுக்கப்பட்ட புகைப்படம். வாட்டாலை  (கடல் தாழை) என அழைக்கப்படும் Enhalus accoroides பூக்க துவங்கி உள்ளது.  சித்திரை மாதத்தில் இவ்வாறு மலர்வது, இந்த வருட பருவநிலை மாற்றங்களின் இயற்கையான சீரான ஓட்டத்தைக் குறிக்கும் விதமாக இருக்கலாம்.

இந்த கடல்புல் இனத்தில் ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியாக இருக்கும். ஆண் பூக்கள் சிறியதாகவும், முதலில் கடலடியில் உருவாகி பின்னர் நீர்மேற்பரப்பிற்கு விடப்படுவதும் சிறப்பு. 
எனவே, "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு" எனும் திருக்குறளுக்கு, இவற்றையும் உவமையாக கொள்ளலாமோ! 

ஆண் மலர்கள்  நீரில் மிதந்து மேலே வந்து உடைந்து, உள்ளிருக்கும் மகரந்தத் துகள்களை வெளியிடுகின்றன. பெண் பூக்கள் நீண்ட தண்டு மூலம் நேரடியாக நீர்மேற்பரப்பை அடைந்து திறக்கின்றன. இரு கைகளை விரித்தது 
போல, பெண் பூக்கள் நீரின் மேற்பரப்பில் மிதந்து காத்திருக்கும். அப்போது, நீர்மேல் மிதக்கும் ஆண் பூக்களில் இருந்து வெளியான மகரந்தம்,  அலைகளின் உதவியுடன் பெண் பூவிற்கு சேர்கிறது. இது “மேற்பரப்பு மகரந்தச் சேர்க்கை” (surface pollination) எனப்படும், கடல் தாவரங்களில் மிக அரிதாக காணப்படும் ஒரு அற்புதமான இயற்கை செயல்முறை.

இந்த தாவரத்தின் காய்களை நாம் உண்ணலாம்.  இந்த வகை கடல் தாழைகள்  பொதுவாக ஆழமில்லாத (shallow) கடல்பகுதிகளில் மட்டுமே வளரும். இதற்கு முக்கிய காரணம், அதன் இனப்பெருக்க செயல்முறை நீர்மேற்பரப்புடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பது. 

நீர் ஆழம் அதிகமாக இருந்தால், பெண் பூ நீர்மேற்பரப்பை எட்ட முடியாது; அதனால் மகரந்தச் சேர்க்கை நடைபெறாது. மேலும், இந்த தாவரத்திற்கு சூரியஒளி மிகவும் அவசியம், ஏனெனில் அது ஒளிச்சேர்க்கை மூலம் உணவுத் தயாரிப்பைச் செய்கிறது. ஆழமான, மங்கலான நீரில் ஒளி குறைவதால் வளர்ச்சி பாதிக்கப்படும். 

இதனால், தெளிவான, ஒளி ஊடுருவும், அமைதியான, ஆழமில்லா கடற்பகுதிகளே  இவற்றின் வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும், இனப்பெருக்கத்திற்கும் மிக உகந்த சூழலாக அமைகின்றன.

இந்த கடல் தாழைகள் பல கடல் உயிரினங்களுக்கு முக்கிய வாழ்விடமாக செயல்படுகிறது. குறிப்பாக கடல் பசு (dugong), கடல் ஆமைகள் போன்றவை இவற்றை உணவாக பயன்படுத்துகின்றன. 

மேலும், இளம் மீன்கள், நத்தைகள், சிறிய முதுகெலும்பில்லா உயிரினங்கள் போன்றவை இந்தப் புல்வெளிகளில் பாதுகாப்பாக வளர்கின்றன. இதனால், கடல்புல் படுகைகள் மீன்பிடி வளத்தை அதிகரிக்கும் “நர்சரி பகுதிகள்” ஆக செயல்படுகின்றன. 

கூடுதலாக, கடல் புற்கள் அலைகளின் வேகத்தை குறைத்து, மணல் நகர்வை கட்டுப்படுத்தி, கடற்கரை மண் அரிப்பை  (coastal erosion) தடுக்கும் இயற்கை பாதுகாப்பு அமைப்பாகவும் செயல்படுகின்றன.

வாட்டாலைகளின் பரப்பு, கடந்த இருபது ஆண்டுகளில்  வெகுவாக குறைந்தது வருகிறது. 

கடல் வளம் காப்போம்! 

Balaji Vedharajan

கரும்புத்தாழை அறிக

நீங்கள் நம் கடல் கரைக்கு செல்லும்போது, நிறைய கடல் புற்கள் ஒதுங்கி இருப்பதை காணலாம். 

அதில் கடல் கரும்பு அல்லது கரும்பு தாழை(Cymodocea serrulata ) என்ற வகையை எப்படி கண்டறியலாம் என தெரிந்து உங்கள் இளைய தலைமுறைக்கு விளக்கலாம். 

14 வகை கடல் புற்களில்  கட, இந்த குறிப்பிட்ட இனத்தைக் கண்டறிய இந்த நான்கு முக்கிய அடையாளங்களை கவனியுங்கள்:

1. இலையின் நுனிப்பகுதி
இலையின் நுனியை உற்றுப் பார்த்தால், சிறிய ரம்பம் போன்ற பற்கள் (Serrations) இருக்கும். மொபைல் போனில் இலை நுனியை ஒரு போட்டோ எடுத்து பாருங்கள். நுனியில் ரம்பம் போன்ற பற்கள் இருந்தால் அவை Cymodocea serrulata.  இலை நுனியை விரலால் தடவிப் பார்த்தால் சொரசொரப்பாக இருக்கும். இதுவே இந்த இனத்தின் மிக முக்கியமான அடையாளம்.

2. தண்டுப் பகுதியில் உள்ள தழும்புகள் (Leaf Scars)
இலையின் தண்டுப் பகுதியை (Stem) கவனித்தால், பழைய இலைகள் உதிர்ந்த இடத்தில் தழும்புகள் இருக்கும். முக்கிய குறிப்பு: இந்தத் தழும்புகள் தண்டினை முழுமையாகச் சுற்றியிருக்காது. ஒரு "பாதி வட்டம்" அல்லது "திறந்த அடைப்புக்குறி" போல இருக்கும். இது அதன் நெருங்கிய இனமான Cymodocea rotundata (இதில் தழும்புகள் முழு வட்டமாக இருக்கும்) இலிருந்து இதை வேறுபடுத்த உதவும்.

3. இலையின் அகலம் மற்றும் நரம்புகள்
இதன் இலைகள் தட்டையாக, நாடா வடிவில் சுமார் 4 முதல் 9 மி.மீ அகலம் கொண்டதாக இருக்கும். இலையைச் சூரிய வெளிச்சத்திற்கு எதிராகப் பிடித்துப் பார்த்தால், அதில் 13 முதல் 17 நரம்புகள் இணையாகச் செல்வதைக் காணலாம்.

4. இலை உறை (Leaf Sheath)
இலைகள் தண்டோடு இணையும் அடிப்பகுதி (Sheath) (கரும்பு தோகை போன்று) சற்று அகலமாக இருக்கும். மணலில் ஒதுங்கிய புதிய புற்களில், இந்தப் பகுதி பெரும்பாலும் லேசான சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் காணப்படும்.

கடற்கரையில் ஒதுங்கும் இந்த கடல் புல் சருகுகள் (Beach Wrack) கடற்கரை அரிப்பைத் தடுப்பதுடன், சிறிய கடல் உயிரினங்களுக்கு உணவாகவும், உரமாகவும் மாறுகின்றன.  

தென்னை மரங்களுக்கு உரமாக எடுத்து செல்கிறார்கள். 

குழந்தைகள் கடல் கரைக்கு செல்லும்போது, இதை போன்ற கடல் புற்களை பற்றி தெரிந்து கொண்டால்  அவர்களுக்கு கடல் சார் அறிவியலில் ஆர்வம் ஏற்படும்.

கடல் வளம் காப்போம்

Balaji Vedharajan

கொம்பன் சுறா காவலுக்கு

மாசாத்துவான் மகள் 
மகிழ்ந்து நடந்த, 
புகாரின் வீதி  - கடலுக்குள் இன்று,
கொம்பன் சுறா காவலுக்கு. 

கொற்கைக் கோமான் 
கொலுவில் அமர்ந்த, 
முத்துப் பீடம்  – கடலுக்குள் இன்று,
முந்நீர் வாழ் சிப்பிகள் காவலுக்கு. 

மாமல்லனின் குடைவரை 
எஞ்சியது ஒன்று  
மீதம் ஆறும்  - கடலுக்குள் இன்று,
கடல் ஓங்கிகள் காவலுக்கு. 

தொப்புள்கொடியாம்  ஈழம் – நிலத்
தொடர்பில் இருந்திருக்கும்
சோழக்  காலத்தினின்றும் மூத்தத் 
குமரிக்கண்டத் தொன் தமிழர் அதை 
நடந்தே கடந்திருப்பாரோ?

கடல்கோள் தமிழ்நிலம் 
கேட்டால் பல கதைகள் கதைக்கும், 
நகரும் மணல்மேடுகளும் – நம் 
தீவுகள் இருபத்தொன்றும்   
கோடிகள் என முடியும் 
மூன்று நிலமுனைகளும்,
கிழக்கே நீண்டு தொப்புள்கொடியாய் 
இணைந்திருந்திருக்கும் – அதை 
அன்றே ஆழி தின்று தீர்த்திருக்குமோ!

தமிழ்நிலச் சான்றோரே,
அறிவியல் சொல் கேளீர்,
ஆழிக்கு அழிவில்லை - ஆனால் 
மணல் வற்றிய ஆற்றின் வழி 
கடல் நிரம்பி காவிரிச் சமவெளியில் 
கண்மாய்கள்  நிறைக்கும்
கரும்புகை கக்கும் கணவாய்கள் 
காவல் காக்கும். 

தமிழ் நிலம் காப்பீர். 

Balaji Vedharajan