Wednesday, May 13, 2026

காவிரியும் கடலும்...



ஐப்பசி, கார்த்திகை மழைக்காலத்தில் காவிரி ஆற்றின் வெள்ளநீர் நம் கடலில் கலக்கும் போது, அடர்த்தி குறைந்த நன்னீர், அடர்த்தி மிக்க கடல் நீருடன் உடனே கலந்துவிடாது. ஊடலால் பிரிந்திருக்கும் தலைவனும் தலைவியும் போல, அவை சில காலம் பிரிந்தே இருக்கும். கலங்கிய நன்னீர் கடலின் மேற்பரப்பிலும், தெளிந்த கடல் நீர் அடிப்பகுதியிலும் தனித்தனியாக நிற்கும்.

தை பிறக்கும் அறுவடை காலத்தில், ஜல்லிக்கட்டில் காளைகளும் காளையரும் சீறி வீரத்தை வெளிப்படுத்தும் நேரத்தில், வாடை காற்றின் வேகம் மெல்ல குறையும். அப்போது கடல் நீரும் நன்னீரும், பொருள் ஈட்டிச் சென்ற தலைவன் மீண்டும் தலைவியுடன் சேர்ந்து உள்ளம் இரண்டற கலப்பது போல, ஒன்றோடு ஒன்று கலக்கத் தொடங்கும்.

“உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்”

என்ற திருக்குறளுக்கு ஏற்ப, பிரிவு அளவுக்கு மீறினால் வாழ்வு இனிமையடையாது என்பதை உணர்ந்த தலைவனும் தலைவியும் மீண்டும் கூடுவது போல, நன்னீரும் கடல் நீரும் சேரும். அவற்றின் கூடலுக்கு உதவுவது போல, வானில் மிதக்கும் நிலவு கடல் நீரை ஈர்த்து, வெள்ளமும் வடுவும் ஏற்படுத்தி துணை நிற்கும்.

அதே சமயம், திரைக்கடல் ஓடி பொருள் கொண்டு வரும் தலைவன் தலைவிக்கு பரிசளிப்பது போல, காவிரி கொண்டு வந்த வண்டலும் நுண்ணூட்ட வளமும் கடலுக்கு பரிசாக சேரும். அந்த பரிசை பெற்ற நம் கடல், மாசி மாதத்தில் புதிய உயிர்ப்புடன் மகிழ்ந்து நிற்கும்.

மாசி மாதத்தில் நம் கடல் பகுதி நீர், இயல்பான கடல் நீரை விட உப்பு குறைந்ததாகவும், நன்னீரை விட உப்பு அதிகமானதாகவும் இருக்கும். சிவராத்திரி முடிந்து பனி விலகி வெயில் கூடும் நாட்களில், கடல் நீரின் வெப்பமும் மெல்ல அதிகரிக்கும்.

குறிப்பாக மாசி மகத்தில், வாடை காற்றும் வடக்கிலிருந்து வரும் கடல் நீரோட்ட வேகமும் குறைந்து, தெற்கிலிருந்து வரும் நீரின் தாக்கம் அதிகரிக்கும். 

அதனால் கடல் மட்டம் சற்றே உயர்ந்திருக்கும்.அன்று கடல் தெளிவாக இருக்கும் என மீனவ பெரியவர்கள் கூறுவார்கள்.   ஆண்டில் ஒருமுறை மட்டுமே தெளிவாக உணரப்படும் இந்த நிகழ்வை எதிர்பார்த்து, கோடியக்கரை உப்பள தொழிலாளர்கள் உப்பு உற்பத்திக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். ஆயிரக்கணக்கான உப்பளங்கள் இந்த நேரத்தில் பெருகும் கடல் நீரை உள்வாங்கி, புதிய உப்பு உற்பத்தி பருவத்தை உற்சாகமாகத் தொடங்கும்.
இது நம் நெய்தல் நிலத்தில் நிகழும் இயற்கையின் அற்புதம். 

சித்திரையில்   மீன்பிடித் தடைக்காலம் தொடங்கும் போது, கடல் தாயின் மடி ஓரளவு நிம்மதி அடையும். ஆற்றில் இருந்து வந்த சத்து பொருளை கொண்டு மீன்கள், நண்டுகள், இறால்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் அது. இவ்வாறு, ஒவ்வொரு ஆண்டும் நம் கடலில் நிகழும் இயற்கை மாற்றங்களால், கடல் உணவும்,  கடல் உப்பும் தொடர்ந்து கிடைக்கின்றன.

காவிரியின் நீர் கடலுக்கானது.

கடல் வளம் காப்போம்.
மீன் வளம் காப்போம்.

Balaji Vedharajan

No comments: