Tuesday, October 20, 2026

ஐப்பசி ஒன்று🙏

 ஐப்பசி ஒன்று🙏


புரட்டாசி துவங்கியும்

நிலம் காய்ந்து

வான் நோக்க,

திரைகடல் ஓடியும்

தேட இயலாத

திரவியம் போல்,

பெய்யாத மழைக்குத்

தவித்தது சோழநாட்டு

நெல் வயலொன்று…


புரட்டாசி துவங்கியும்

தாகமாய் இரை தேடி,

அல்லாடிய கழுகு

தள்ளாடி அமர,

மனம் நெகிழ

மழை வேண்டி 

ஒற்றைக்காலில் நின்றது

மருத நிலப் பனைமரமொன்று…


தாய்மைக்கு ஏங்கும்,

மௌனத் துயர்போல,

பறக்கக் காத்திருந்தன

பருவமடைந்த ஈசல்கள்,

கரைந்தாலும் பொருட்டல்ல  

மாமழையே தேவலை 

என வேண்டி நின்றது

கரையான் புற்றொன்று…


ஊருக்கு வெளியே,

கோயில் குறுங்காட்டில்,

மிச்சமிருந்த மூலிகை 

புதர் மத்தியில்,

இலைவாடி 

மழை வேண்டி 

மன்றாடியது மணம் வீசும் 

மகிழ மரமொன்றும் கூட …


அன்பும் கருணையும்

கொண்ட 

இயற்கை அன்னை,

இந்த ஐப்பசியில் மனமிறங்கி அவர்களுக்கு

மழை  அருள் செய்தால்…


புல்லுக்கும் ஆங்கே 

பொசியுமாம் என 

புல்லாய் நாமும் 

பயனடைவோமே !

Balaji Vedharajan

No comments: