Posts

Showing posts from November, 2026

உயிர்க்கயிறு — அத்தியாயம் 1. சங்குக் கடலும் ஆண்டனியும்

Image
அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலம். படகின் அனியத்தில் நின்றிருந்த பழுத்த பாறு மண்டாடி, காற்றை ஆழமாக உள்ளிழுத்தார். அதிகாலையின் இருள் இன்னும் முழுவதும் விலகவில்லை. கரையிலிருந்து வீசிய குளிர்ந்த நிலக்காற்று அவரது வலது கன்னத்தை உரச, தென்கிழக்கு வானில் ஒளிர்ந்த விடிவெள்ளியை நிமிர்ந்து பார்த்தார். “ஏலே... விடிவெள்ளி மேலேறிடுச்சு. நிலக்காத்தும் நல்லா பிடிச்சிருக்கு. பாயை ஏத்துங்க. வெயில் ஏறுவதற்குள்ள பீரலை அடையணும்,” என்றார். குளியாளர்கள் பாயை ஏற்றி, கயிறுகளையும் இறங்கும் கற்களையும் படகுக்குள் அடுக்கினர். கம்பத்தில் விரிந்த பாய் நிலக்காற்றை நிறைத்துக்கொண்டதும், படகு மணலை உரசியபடி நகர்ந்து, சிற்றலைகளை வெட்டிக்கொண்டு கடலுக்குள் சென்றது. படகின் பின்பக்கத்தில் கயிற்றைச் சுருட்டிக்கொண்டிருந்த இளம் குளியாள் ஒருவன் கடலைப் பார்த்தான். “காத்து நல்லாத்தானே இருக்கு, மண்டாடி?” “மேல காத்து நல்லாத்தான் இருக்கு. கீழ நீரோட்டம் கொஞ்சம் கிழக்கே இழுக்குது. கடலோட முகத்தைப் பாரு. சிற்றலை ஒரே பக்கமா ஓடுது.” இளம் குளியாள் கடலை உற்றுப் பார்த்தான். அவனுக்கு எல்லா அலைகளும் ஒன்றுபோலவே தெரிந்தன. “எனக்...