உயிர்க்கயிறு — அத்தியாயம் 1. சங்குக் கடலும் ஆண்டனியும்

அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலம். படகின் அனியத்தில் நின்றிருந்த பழுத்த பாறு மண்டாடி, காற்றை ஆழமாக உள்ளிழுத்தார். அதிகாலையின் இருள் இன்னும் முழுவதும் விலகவில்லை. கரையிலிருந்து வீசிய குளிர்ந்த நிலக்காற்று அவரது வலது கன்னத்தை உரச, தென்கிழக்கு வானில் ஒளிர்ந்த விடிவெள்ளியை நிமிர்ந்து பார்த்தார்.

“ஏலே... விடிவெள்ளி மேலேறிடுச்சு. நிலக்காத்தும் நல்லா பிடிச்சிருக்கு. பாயை ஏத்துங்க. வெயில் ஏறுவதற்குள்ள பீரலை அடையணும்,” என்றார்.

குளியாளர்கள் பாயை ஏற்றி, கயிறுகளையும் இறங்கும் கற்களையும் படகுக்குள் அடுக்கினர். கம்பத்தில் விரிந்த பாய் நிலக்காற்றை நிறைத்துக்கொண்டதும், படகு மணலை உரசியபடி நகர்ந்து, சிற்றலைகளை வெட்டிக்கொண்டு கடலுக்குள் சென்றது. படகின் பின்பக்கத்தில் கயிற்றைச் சுருட்டிக்கொண்டிருந்த இளம் குளியாள் ஒருவன் கடலைப் பார்த்தான்.

விடியலில் புறப்படும் தோணி

“காத்து நல்லாத்தானே இருக்கு, மண்டாடி?”

“மேல காத்து நல்லாத்தான் இருக்கு. கீழ நீரோட்டம் கொஞ்சம் கிழக்கே இழுக்குது. கடலோட முகத்தைப் பாரு. சிற்றலை ஒரே பக்கமா ஓடுது.”

இளம் குளியாள் கடலை உற்றுப் பார்த்தான். அவனுக்கு எல்லா அலைகளும் ஒன்றுபோலவே தெரிந்தன.

“எனக்கு ஒண்ணும் தெரியலையே.”

“பார்த்துப் பழகு. காத்து கன்னத்துல சொல்லும்; நீர் ஓட்டம் படகடியில் சொல்லும்.”

இரவில் நிலம் விரைவாகக் குளிரும். கடல், பகலில் பெற்ற வெப்பத்தை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ளும். இந்த வெப்ப வேறுபாட்டால் அதிகாலையில் கரையிலிருந்து கடலை நோக்கி நிலக்காற்று வீசும். அந்தக் காற்றைப் பிடித்தே சங்கு குளிக்கும் படகுகள் நடுக்கடலுக்குச் சென்றன. பகல் ஏறி நிலம் சூடானதும் கடலிலிருந்து கரையை நோக்கிக் கடற்காற்று திரும்பும். மாலை நேரத்தில் அந்தக் காற்று படகுகளை மீண்டும் கரைக்கு அழைத்து வரும்.

காற்று சரியான நேரத்தில் வீசாத நாட்களில் படகுகள் கரையிலேயே நிற்கும். நடுக்கடலில் காற்று நின்றுவிட்டால் துடுப்பின் உதவியோடு பயணம் தொடரும். எதிர்க்காற்று வலுத்தால் பீரலை அடைவதற்குள் குளிக்கும் நேரம் குறைந்துவிடும். சங்கு நிறைந்த கடலடி கிடைத்தாலும், அங்கு சென்று சேர முடியாவிட்டால் அன்றைய நாள் வீணாகும்.

சங்கு குளிக்கும் படகின் கடல் வழிகாட்டியே பாறு மண்டாடி. சம்மட்டியார் கரையில் தொழிலை ஒழுங்குபடுத்துவார். தோடை, குளியாளர்களை விரைவாக ஆழத்திற்குக் கொண்டுசெல்லும் இறங்கும் கற்களையும் அவற்றின் கயிறுகளையும் கவனித்துக்கொள்வான். குளியாளன் அடித்தளத்தை அடைந்ததும் கல்லை மேலே இழுத்து மீண்டும் தயார் நிலையில் வைப்பது, கயிறுகள் சிக்காமல் பார்ப்பது, படகுக்குள் புகும் நீரை வெளியேற்றுவது, குடிநீரைப் பாதுகாப்பது ஆகியவை அவனுடைய வேலைகள். பாறு மண்டாடி படகைச் சங்கு கிடக்கும் பார், பீரல்களுக்கு வழிநடத்துவார். எங்கு படகை நிறுத்த வேண்டும், எந்த இடத்தில் குளியாளர்களை முதலில் இறக்கிப் பார்க்க வேண்டும், அன்றைய கடல் குளிப்பதற்கு ஏற்ற நிலையில் இருக்கிறதா என்பதையும் அவரே முடிவு செய்வார்.

பல ஆண்டுகள் கடலோடு வாழ்ந்த அனுபவமே பாறு மண்டாடியின் தகுதி. தூத்துக்குடிக் கரையிலிருந்து பல மைல் தொலைவில் பரந்து கிடக்கும் கடலடி நிலங்களின் இருப்பிடமும் ஆழமும் அவருக்கு அத்துபடி. கரையோர ஆலயத்தின் கோபுரம், உயர்ந்து நிற்கும் பனைத் தொகுதி, மணல்மேடு ஆகியவற்றை ஒன்றோடு ஒன்று இணைத்துப் பார்த்து, கடலில் தன் இருப்பிடத்தை மனக்கணக்கில் குறித்துக்கொள்வார்.

கடல் கண்களுக்கு ஒரே நிறத்தில் தெரிவதில்லை. கரைக்கு அருகிலுள்ள ஆழம் குறைந்த நீர் பச்சை கலந்த நீலமாகத் தெரியும். ஆழம் கூடும்போது அது கருநீலமாக மாறும். கடலடியில் மணல் பரப்பு இருந்தால் ஒரு தோற்றம்; பாறைத் தளம் இருந்தால் வேறொரு தோற்றம். வெயில், மேகம், நீரின் கலக்கம், மீன் கூட்டம் ஆகியவற்றால் அந்த நிறங்கள் மாறினாலும், பழகிய கண்கள் அவற்றைத் தவறவிடாது.

மேகங்களின் நகர்வு, கடற்பறவைகள் பறக்கும் திசை, நீர்மேல் வரிசையாக ஓடும் சிற்றலைகள், படகின் அடிப்பகுதியைத் தட்டும் நீரின் வேகம், பாயின் இழுப்பு என இவை அனைத்தையும் சேர்த்தே மண்டாடி கடலின் அன்றைய போக்கை அறிந்துகொள்வார். மேலே வீசும் காற்றும் கடலுக்குள் ஓடும் நீரோட்டமும் சில நேரங்களில் வெவ்வேறு திசைகளில் செல்லும். இதை அறியாமல் குளியாளன் இறங்கினால், அவன் நினைத்த இடத்திலிருந்து நீரோட்டம் அவனை இழுத்து சென்றுவிடும்.

பாறு மண்டாடியின் எச்சரிக்கையை மீறி எந்த ஒரு படகும் ஆழ்கடலுக்குச் செல்லாது. சங்கு அதிகமாகக் கிடைக்கும் என்ற ஆசையில் குளியாளர்கள் அவருடன் வாதிட்டாலும், கடைசி முடிவைச் சொல்லும் பொறுப்பு அவரிடம் இருந்தது. கடலடியில் கிடப்பதை குளியாளன் தன் கண்களால் காண்பான். அந்தக் குளியாளனை எங்கு இறக்கலாம் என்பதை மண்டாடி கடலின் மேற்பரப்பிலிருந்தே கணிப்பார்.

அன்றைய தூத்துக்குடியில் சங்கு குளித்தல் தொழில் சிறப்பாக நடைபெற்ற காலம் அது. அதன் வேர்கள் தாமிரபரணி கடலோடு கலந்த இடத்திற்கு அருகிலிருந்த பண்டைய கொற்கையில் துவங்கி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முத்து மற்றும் சங்கு குளித்தல் புகழ்பெற்றிருந்தது.

சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியும், தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரமும் கொற்கையின் கடல்வளத்தைப் பதிவு செய்துள்ளன. பாண்டியர் காலத்தில் முத்துக் குளியாளர்கள், சங்கு குளியாளர்கள், வணிகர்கள், அணிகலன் செய்பவர்கள் எனப் பலரும் வாழ்ந்த பெரும் துறைமுகமாக கொற்கை விளங்கியது. தாமிரபரணி கொண்டு வந்த மணல் தொடர்ந்து படிந்ததால் கடல் மெதுவாகக் கொற்கையை விட்டு விலகியது. துறைமுகத்தின் பெருமை முதலில் காயலுக்கும், பின்னர் புன்னக்காயலுக்கும், இறுதியில் தூத்துக்குடிக்கும் வந்து சேர்ந்தது.

துறைமுகங்கள் மாறின. ஆட்சிகள் மாறின. கடற்கரையில் பறந்த கொடிகளும் மாறின. ஆனால், சங்கு குளிக்கும் மீனவ மக்களின் அன்றாட வாழ்வும், வீரமும், தொழிலறிவும் அவ்வபோது உயிரிழப்பால் ஏற்படும் துயரங்களும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது.

தூத்துக்குடிக் கடலில் விளைந்த சங்குகள் கனமாகவும் உறுதியாகவும் இருந்தன. இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சங்குகள் வங்காளத்தின் டாக்கா நகரத்தை அடைந்தன. அங்குள்ள ‘சங்காரி’ கலைஞர்கள் அவற்றை வட்டமாக அறுத்து, தேய்த்து, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய மங்கள வளையல்களாக மாற்றினர். சில சங்குகள் தொலைதூர மலைப்பகுதிகளிலும் புனித அணிகலன்களாக மதிக்கப்பட்டன.

கடலடியில் மூச்சை அடக்கி எடுத்த ஒரு சங்கு, அதை எடுத்த குளியாளின் கையில் நீண்ட நேரம் தங்குவதில்லை. அவன் வலைப்பையிலிருந்து சம்மட்டியாரின் கூடைக்குச் சென்று, அங்கிருந்து குத்தகைதாரரின் பண்டகசாலையை அடைந்து, பல கடல்களையும் நிலங்களையும் கடந்து வேறொருவரின் கையில் வளையலாக மாறியது. அந்தச் சங்குக்காகக் கடலடியில் உயிரோடு போராடிய குளியாளின் பெயரை அதை அணிந்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

1801ஆம் ஆண்டுக்குப் பின்னர் நெல்லைக் கடற்கரையின் சங்கு மற்றும் முத்துக் குளிக்கும் உரிமைகள் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றன. அந்த உரிமைகள் குத்தகைக்கு விடப்பட்டன. குத்தகைதாரர்கள், உள்ளூரைச் சேர்ந்த சம்மட்டியார்களின் வழியாகக் குளியாளர்களை வேலைக்கு அமர்த்தினர்.

அந்தக் குளியாளர்களில் ஒருவன்தான் ஆண்டனி பாண்டியன்.

படகின் அனியத்தில் இரு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு, கால்களை நன்றாக ஊன்றி நின்றிருந்தான். படகு அலையின் மீது ஏறி இறங்கும்போதும் அவனுடைய நெடிய உடல் அசையாமல் நின்றது. அகன்ற தோள்களும் வலிமையான கைகளும், எதையும் நேருக்கு நேர் பார்க்கும் மிடுக்கான கண்களும் அவனுக்கு இருந்தன.

மண்டாடி கடலைப் பார்த்தபடி படகின் போக்கைச் சிறிது மாற்றினார்.

“நடுப் பீரலோட நிறுத்திக்கலாம். கீழோட்டம் மாறிக் கிடக்கு,” என்றார்.

ஆண்டனி அவரைத் திரும்பிப் பார்த்தான்.

“நேத்து அங்க ஒண்ணும் கிடைக்கலையே. வட்டக்கல் பீரலுக்குப் போங்க.”

“காற்று இப்ப நமக்குச் சாதகமா இருக்கு. கீழ இருக்கிற ஓட்டம் அப்படி இல்ல.”

“ஒரு குளி பார்த்துட்டு வர்றேன். இல்லன்னா திரும்பலாம்.”

“கடல் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்காது, ஆண்டனி.”

“நானும் இன்னைக்குத்தான் குளிக்க வரலையே, மண்டாடி.”

அவனது குரலில் தயக்கம் இல்லை.

ஆண்டனிக்கு தன் மூச்சிலும் உடல் வலிமையிலும் கடலறிவிலும் மிகுந்த நம்பிக்கை இருந்தது. பலமுறை மற்றவர்கள் தயங்கிய இடத்தில் அவன் இறங்கியிருந்தான். அவன் எடுத்த முடிவுகள் பெரும்பாலும் வெற்றியடைந்தன. அதனால் எச்சரிக்கையைக் கேட்ட பின்னரும், தன் எண்ணத்தையே செயல்படுத்தும் பழக்கம் அவனுக்குள் வளர்ந்திருந்தது.

மண்டாடியின் எச்சரிக்கைக்குப் பின்னால் பல ஆண்டுகள் கடல் கற்றுக் கொடுத்த அனுபவம் இருந்தது. ஆண்டனியின் மறுப்புக்குப் பின்னால், தன் கணிப்பும் வலிமையும் இதுவரை தன்னை ஏமாற்றியதில்லை என்ற நம்பிக்கை இருந்தது.

மண்டாடி சில கணங்கள் அவனைப் பார்த்தார். பின்னர் படகை வட்டக்கல் பீரல் இருக்கும் திசை நோக்கிச் செலுத்தினார்.

பீரலை அடைந்ததும் படகு உடனே நங்கூரமிடப்படவில்லை. சங்கு படுகையின் சரியான இடத்தை அறிய, படகை மெதுவாக ஓட்டத்தோடு நகரவிட்டு, முதலில் இரு குளியாளர்களை வெவ்வேறு இடங்களில் இறக்கிப் பார்த்தனர். அவர்கள் கொண்டுவந்த சங்குகள் குறைவாக இருந்தன.

மூன்றாவது முறையாக ஆண்டனி இறங்கத் தயாரானான்.

இடுப்பில் சங்கு சேகரிக்கும் வலைப்பையை இறுக்கிக் கட்டிக்கொண்டு, இறங்கும் கல்லின் கயிற்றை இரு கைகளாலும் பிடித்தான். கால்களை அந்தக் கனமான கல்லின் மீது வைத்தான். மார்பில் சிலுவைக் குறியிட்டுவிட்டு, ஒரே மூச்சில் கடலுக்குள் பாய்ந்தான்.

கல்லின் எடை அவனை வேகமாகக் கீழே அழைத்துச் சென்றது. மேற்பரப்பின் வெளிச்சம் மெல்லக் குறைந்தது. காதுகளுக்குள் அழுத்தம் ஏறியது. உடலைச் சுற்றிய நீரின் குளிர்ச்சி அதிகரித்தது. சில நொடிகளில் அவனுடைய கால்கள் கடலடியைத் தொட்டன.

கடலடியில் பவளப் பாறைகளும் கடினமான நிலப்பரப்பும் நிறைந்த இடத்தை ‘பாறு’ என்று அழைத்தனர். நுண்ணிய மணலும் சிறிதளவு சேறும் கலந்து சமமாக விரிந்த அடித்தளத்தை ‘பீரல்’ என்றனர். சங்குகள் வாழவும், உணவு தேடி ஊர்ந்து செல்லவும் ஏற்ற இடங்களாகப் பல பீரல்கள் விளங்கின.

அடித்தளத்தைத் தொட்டதும் ஆண்டனி இறங்கும் கல்லிலிருந்து கால்களை விலக்கினான். மேலே இருந்த தோடை, கல்லின் கயிற்றை உடனே படகை நோக்கி இழுக்கத் தொடங்கினான்.

ஆண்டனி மணல் படுகையை நிதானமாகப் பார்த்தான். சில சங்குகள் மணலுக்குள் பாதியாகப் புதைந்திருக்கும். உணவு தேடி மெதுவாக ஊர்ந்து செல்லும்போது, தன் கனமான உடலால் மணலில் மெல்லிய தடத்தை விட்டுச் செல்லும்.

அந்தத் தடத்தை கண்டுபிடிப்பது சங்கு குளியாளர்களின் தனித்திறமை. கடலடியில் மங்கலாகத் தெரியும் சிறு மேடு பள்ளங்களில் வளைந்து செல்லும் கோடு, புதிதாகப் புரண்ட மணலின் நிறமாற்றம் ஆகியவற்றை வைத்து சங்கு சென்ற பாதையை அவர்கள் கண்டுபிடிப்பார்கள். உடல் வலிமையைவிட இந்தக் கண்பழக்கமும் அனுபவமும் பல நேரங்களில் அதிக சங்குகளைப் பெற்றுத் தந்தன.

ஆண்டனியின் கண்கள் மணலில் வளைந்து சென்ற ஒரு தடத்தைப் பிடித்தன. அதைத் தொடர்ந்து சில அடி நீந்தி, இரு கைகளாலும் மணலைத் துழாவினான். அவனது விரல்கள் கடினமான ஒன்றைத் தொட்டன. மணலை விலக்கிப் பார்த்தபோது பெரிய சங்கு ஒன்று பாதியாகப் புதைந்து கிடந்தது.

அதை எடுத்து இடுப்பில் கட்டியிருந்த வலைப்பைக்குள் போட்டான். அருகிலேயே மற்றொரு தடம் தெரிந்தது. அதைத் தொடர்ந்து இன்னொரு சங்கை எடுத்தான். மூச்சு முட்டத் தொடங்கும் வரை அவன் மணலைத் துழாவிக்கொண்டிருந்தான்.

கடலடியில் சங்கு எடுக்கும் ஆண்டனி

மூச்சு முட்டத் தொடங்கியதும் அவன் மணலை உதைத்து, உடலை மேல்நோக்கித் திருப்பினான்.

கடலின் ஆழத்திலிருந்து தன் வலிமையால் மேலெழுந்த ஆண்டனி, படகின் அருகே நீரைப் பிளந்துகொண்டு வந்தான். தோடை அவனது கையைப் பிடித்து மேலேற்றினான். இடுப்பிலிருந்த வலைப்பையைத் தூக்கிப் படகுக்குள் வீசியதும், அதிலிருந்து உருண்ட சங்குகளைப் பார்த்து மற்ற குளியாளர்கள் ஆரவாரம் செய்தனர்.

சங்குகளுடன் தோணிக்குத் திரும்பும் ஆண்டனி

ஆண்டனி மூச்சைச் சீராக்கிக்கொண்டே மண்டாடியைப் பார்த்துச் சிரித்தான்.

“பாத்தீங்களா? வட்டக்கல்லு நம்மள வெறுங்கையோட அனுப்பல.”

மண்டாடி சங்குகளைப் பார்த்தார். பின்னர் கடலை நோக்கினார்.

“இன்னைக்கு கொடுத்திருக்கு. தினமும் கொடுக்கும்னு நினைக்காதே.”

ஆண்டனி அடுத்த குளிக்குத் தயாரானான்.

அன்றும் அவனுடைய முடிவு வெற்றி பெற்றது. மற்ற குளியாளர்களைவிட அதிகமான சங்குகளோடு கரை திரும்பினான். ஒவ்வொரு வெற்றியும் தன் கணிப்பு தவறாது என்ற நம்பிக்கையை அவனுக்குள் மேலும் வளர்த்தது.

ஆண்டனி வீராப்புடன் மண்டாடியுடன் பேசுபவனாக இருந்தாலும், இளகிய மனமுடையவன். பிறர் கஷ்டபடுவதை கண்டால் ஓடிச்சென்று உதவி செய்வான். கடலுக்குச் சென்ற மீனவர்கள் யாராவது கரை திரும்பாமல் போனால், அவர்களைத் தேடிச் செல்லும் படகில் முதலில் ஏறுபவன் அவன். கடலில் தவறி விழுந்த பொருள் எத்தனை பாகம் ஆழத்தில் கிடந்தாலும், மூச்சை அடக்கி இறங்கி மீட்டுவரும் திறமை அவனுக்கு இருந்தது. ஊருக்குள் அநீதியைக் கண்டால் அவனுடைய கோபம் சட்டென எழும். அதே நெஞ்சில் மற்றவர்களுக்கான பாசமும் நிறைந்திருந்தது. எவ்வளவு சோர்வாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியைத் தவறவிடமாட்டான்.

தன் உயிரையும் மரணத்தையும் தீர்மானிப்பவர் கர்த்தர் என்று நம்பிய ஆண்டனி, கடலில் தன் உடல் வலிமையும் அனுபவமும் தன்னை எப்போதும் காப்பாற்றும் என்றும் நம்பினான்.

அந்த இரு நம்பிக்கைகளில் எது முதலில் சோதிக்கப்படப் போகிறது என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.

தொடரும்.. 

Comments

Popular posts from this blog

Muthupet Mangrove Reserve Forest and Lagoon - An Enchating Place for Eco-Tourists

Flora and Fauna of Muthupet Mangroves, Southeast Coast of India