Posts

ஐப்பசி ஒன்று🙏

Image
 ஐப்பசி ஒன்று🙏 புரட்டாசி துவங்கியும் நிலம் காய்ந்து வான் நோக்க, திரைகடல் ஓடியும் தேட இயலாத திரவியம் போல், பெய்யாத மழைக்குத் தவித்தது சோழநாட்டு நெல் வயலொன்று… புரட்டாசி துவங்கியும் தாகமாய் இரை தேடி, அல்லாடிய கழுகு தள்ளாடி அமர, மனம் நெகிழ மழை வேண்டி  ஒற்றைக்காலில் நின்றது மருத நிலப் பனைமரமொன்று… தாய்மைக்கு ஏங்கும், மௌனத் துயர்போல, பறக்கக் காத்திருந்தன பருவமடைந்த ஈசல்கள், கரைந்தாலும் பொருட்டல்ல   மாமழையே தேவலை  என வேண்டி நின்றது கரையான் புற்றொன்று… ஊருக்கு வெளியே, கோயில் குறுங்காட்டில், மிச்சமிருந்த மூலிகை  புதர் மத்தியில், இலைவாடி  மழை வேண்டி  மன்றாடியது மணம் வீசும்  மகிழ மரமொன்றும் கூட … அன்பும் கருணையும் கொண்ட  இயற்கை அன்னை, இந்த ஐப்பசியில் மனமிறங்கி அவர்களுக்கு மழை  அருள் செய்தால்… புல்லுக்கும் ஆங்கே  பொசியுமாம் என  புல்லாய் நாமும்  பயனடைவோமே ! Balaji Vedharajan

காவிரியும் கடலும்...

Image
ஐப்பசி, கார்த்திகை மழைக்காலத்தில் காவிரி ஆற்றின் வெள்ளநீர் நம் கடலில் கலக்கும் போது, அடர்த்தி குறைந்த நன்னீர், அடர்த்தி மிக்க கடல் நீருடன் உடனே கலந்துவிடாது. ஊடலால் பிரிந்திருக்கும் தலைவனும் தலைவியும் போல, அவை சில காலம் பிரிந்தே இருக்கும். கலங்கிய நன்னீர் கடலின் மேற்பரப்பிலும், தெளிந்த கடல் நீர் அடிப்பகுதியிலும் தனித்தனியாக நிற்கும். தை பிறக்கும் அறுவடை காலத்தில், ஜல்லிக்கட்டில் காளைகளும் காளையரும் சீறி வீரத்தை வெளிப்படுத்தும் நேரத்தில், வாடை காற்றின் வேகம் மெல்ல குறையும். அப்போது கடல் நீரும் நன்னீரும், பொருள் ஈட்டிச் சென்ற தலைவன் மீண்டும் தலைவியுடன் சேர்ந்து உள்ளம் இரண்டற கலப்பது போல, ஒன்றோடு ஒன்று கலக்கத் தொடங்கும். “உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்” என்ற திருக்குறளுக்கு ஏற்ப, பிரிவு அளவுக்கு மீறினால் வாழ்வு இனிமையடையாது என்பதை உணர்ந்த தலைவனும் தலைவியும் மீண்டும் கூடுவது போல, நன்னீரும் கடல் நீரும் சேரும். அவற்றின் கூடலுக்கு உதவுவது போல, வானில் மிதக்கும் நிலவு கடல் நீரை ஈர்த்து, வெள்ளமும் வடுவும் ஏற்படுத்தி துணை நிற்கும். அதே சமயம், திரைக்கடல் ஓடி பொருள் கொண்டு வ...

சித்திரையில் பூக்கும் வாட்டாளை

Image
இந்த சித்திரை துவங்கிய நன்னாளில், நம் கடலில் இன்று எடுக்கப்பட்ட புகைப்படம். வாட்டாலை  (கடல் தாழை) என அழைக்கப்படும் Enhalus accoroides பூக்க துவங்கி உள்ளது.  சித்திரை மாதத்தில் இவ்வாறு மலர்வது, இந்த வருட பருவநிலை மாற்றங்களின் இயற்கையான சீரான ஓட்டத்தைக் குறிக்கும் விதமாக இருக்கலாம். இந்த கடல்புல் இனத்தில் ஆண் மற்றும் பெண் பூக்கள் தனித்தனியாக இருக்கும். ஆண் பூக்கள் சிறியதாகவும், முதலில் கடலடியில் உருவாகி பின்னர் நீர்மேற்பரப்பிற்கு விடப்படுவதும் சிறப்பு.  எனவே, "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு" எனும் திருக்குறளுக்கு, இவற்றையும் உவமையாக கொள்ளலாமோ!  ஆண் மலர்கள்  நீரில் மிதந்து மேலே வந்து உடைந்து, உள்ளிருக்கும் மகரந்தத் துகள்களை வெளியிடுகின்றன. பெண் பூக்கள் நீண்ட தண்டு மூலம் நேரடியாக நீர்மேற்பரப்பை அடைந்து திறக்கின்றன. இரு கைகளை விரித்தது  போல, பெண் பூக்கள் நீரின் மேற்பரப்பில் மிதந்து காத்திருக்கும். அப்போது, நீர்மேல் மிதக்கும் ஆண் பூக்களில் இருந்து வெளியான மகரந்தம்,  அலைகளின் உதவியுடன் பெண் பூவிற்கு சேர்கிறது. இது “மேற்பரப்பு மகரந்தச...

கரும்புத்தாழை அறிக

Image
நீங்கள் நம் கடல் கரைக்கு செல்லும்போது, நிறைய கடல் புற்கள் ஒதுங்கி இருப்பதை காணலாம்.  அதில் கடல் கரும்பு அல்லது கரும்பு தாழை(Cymodocea serrulata ) என்ற வகையை எப்படி கண்டறியலாம் என தெரிந்து உங்கள் இளைய தலைமுறைக்கு விளக்கலாம்.  14 வகை கடல் புற்களில்  கட, இந்த குறிப்பிட்ட இனத்தைக் கண்டறிய இந்த நான்கு முக்கிய அடையாளங்களை கவனியுங்கள்: 1. இலையின் நுனிப்பகுதி இலையின் நுனியை உற்றுப் பார்த்தால், சிறிய ரம்பம் போன்ற பற்கள் (Serrations) இருக்கும். மொபைல் போனில் இலை நுனியை ஒரு போட்டோ எடுத்து பாருங்கள். நுனியில் ரம்பம் போன்ற பற்கள் இருந்தால் அவை Cymodocea serrulata.  இலை நுனியை விரலால் தடவிப் பார்த்தால் சொரசொரப்பாக இருக்கும். இதுவே இந்த இனத்தின் மிக முக்கியமான அடையாளம். 2. தண்டுப் பகுதியில் உள்ள தழும்புகள் (Leaf Scars) இலையின் தண்டுப் பகுதியை (Stem) கவனித்தால், பழைய இலைகள் உதிர்ந்த இடத்தில் தழும்புகள் இருக்கும். முக்கிய குறிப்பு: இந்தத் தழும்புகள் தண்டினை முழுமையாகச் சுற்றியிருக்காது. ஒரு "பாதி வட்டம்" அல்லது "திறந்த அடைப்புக்குறி" போல இருக்கும். இது அதன் நெருங்கிய இனமான Cymodocea...

கொம்பன் சுறா காவலுக்கு

Image
மாசாத்துவான் மகள் மகிழ்ந்து நடந்த , புகாரின் வீதி - கடலுக்குள் இன்று , கொம்பன் சுறா காவலுக்கு. கொற்கைக் கோமான் கொலுவில் அமர்ந்த , முத்துப் பீடம் – கடலுக்குள் இன்று , முந்நீர் வாழ் சிப்பிகள் காவலுக்கு. மாமல்லனின் குடைவரை எஞ்சியது ஒன்று மீதம் ஆறும் - கடலுக்குள் இன்று , காவலுக்கு கடல் ஓங்கிகள் . தொப்புள்கொடியாம் ஈழம்- குமரிக்கண்டத் தொன் தமிழர் அதை நடந்தே கடந்திருப்பாரோ ? கடல்கோள் தமிழ்நிலம் கேட்டால் பல கதைகள் கதைக்கும் , நகரும் மணல்மேடுகளும் – நம் தீவுகள் இருபத்தொன்றும் கோடி யென முடியும் மூன்று நிலமுனைகளும் , கிழக்கே நீண்டு தொப்புள்கொடியாய் இணைந்திருந்திருக்கும் – அதை அன்றே ஆழி தின்று தீர்த்திருக்குமோ! தமிழ்நிலச் சான்றோரே , அறிவியல் சொல் கேளீர் , எம் கேளிரெ! ஆழிக்கு அழிவில்லை - ஆயினும் மணல் வற்றிய ஆற்றின் வழி கடல் நிரம்பி காவிரிச் சமவெளியில் கண்மாய்கள் நிறைக்கும் கரும்புகை கக்கும் கணவாய்கள் காவல் காக்கும். தமிழ் நிலம் காப்பீர். Balaji Vedharajan  

மருந்தீஸ்வரர் ஆலயம் - மருங்கப்பள்ளம்

Image
lமருங்கப்பள்ளம் மருந்தீஸ்வரர் கோவில், தஞ்சை மாவட்டம் மாருதியின் மூலிகைமலைத் துண்டம் விழுந்த இடமே!  மருதநிலம் விழுந்த இடம் மருந்துப் பள்ளமானதே!  மருந்துப் பள்ளமருவி காலப்போக்கில் மருங்கப் பள்ளமானதே!  மூலிகைவளர் மருந்துகுளம் தீர்க்கும்பிணி தீர்த்தமானதே! ஐந்திங்கள் நின்சன்னதியை அன்பர்கள் சுற்றி வர!  ஐமுழுக்கும்  பசும்பால் படைக்கும் அடியாரின் நோய் தீர! மன்னன் நோய்தீர அருள்புரிந்த  பாதிரி மருந்தீஸ்வரா!  மருங்கப் பள்ள மலர்ந்த சர்வேஸ்வரா! Balaji Vedharajan

சுனாமி நினைவுகள்

Image
இன்று 26 டிசம்பர் சுனாமி நினைவு தினம்.  21 வருடங்களுக்கு முன், 2004 இல் PhD படிப்புக்காக தயார் செய்து கொண்டு இருந்த காலம்.   கிறிஸ்துமஸ் பொதுவாக வேளாங்கண்ணியில் ஒரு சிறப்பான காலம். விழாக்கோலம் பூண்டு, பல்வேறு மாநில மக்கள் உற்சாகத்துடன் வருவார்கள்.  அங்கு கடை வைத்து இருக்கும் வியாபாரிகள் இரவு பகலாக வேலை செய்வார்கள்.   அன்று காலைச் செய்தியில், கடல் அலைகள் தாக்கியதாக தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் வந்து கொண்டு இருந்தது.  சுனாமி என்று பெயர் அப்போது மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை  தங்கையின் வீடு வேளாங்கண்ணியில் இருந்ததால், பலமுறை ஃபோன் செய்தும் எடுக்கவில்லை.  பதட்டத்தில் அம்மா உடனே சென்று பார்க்க சொன்னார். அவசரத்தில் ஒரு அம்பாஸடர் காரை வாடகைக்கு எடுத்து கொண்டு நண்பர் அன்புவுடன் கிளம்பினேன். அம்பாஸடர் அரை நூற்றாண்டு காலமாக, நம் ஒவ்வொரு தேவைக்கும் வந்து நிற்கும்.   சகோதரியுடன் பிறந்த ஆண்களுக்கு எப்போதும் குடும்பத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களை திருமணம் செய்து கொடுத்த பிறகு, என்ன செய்கிறமொ இல்லையோ, அவர்களு...

தேசம் காக்கும் சாமிகள்

Image
தேசம் காக்கும் சாமிகள்! இறுகப்பற்றிய நம்பிக்கை, இறுமாப்புடன் தர்க்கம், நாளெல்லாம் கதைப்பேசி, நீங்கள் நன்றாக உறங்கும் வேளையில்... நதிகள் எல்லாம் ஒரே கடலாகுமென தெரிந்தும் தர்க்கமேன்? எனக் கடவுள் கவலையில் ஆழ்ந்திருப்பார். அவருக்கு அருகில், சிகர உச்சியில், சில்லிடும் குளிர்காற்றில், சீரியப் பணியில், இரவெல்லாம் விழித்திருக்கும் தேசத்தின் புதல்வர்கள், தினம் சுதந்திரம் காக்கும் பகத்சிங்குகள். எல்லைக்காவல் சாமிகள். வெள்ளையனிடம் அடிவாங்கி உயிர் கொடுத்து இரவில் பெற்றதை, அவர்களிடம் ஒப்படைத்து, நிம்மதியாய் துயிலுங்கள், நேசித்தாலும் வெறுத்தாலும், நேசமுடன் உங்களையும், கவசமாய் காக்கும் சீருடைச் சாமிகள். அங்கே எல்லையில் அடரிருளில் அளவளாவ, உற்றார் யாருமில்லை. இமயத்தின் பேரமைதியில், இங்குள்ள நிகழ்வுகளை, எங்கோ தூரத்தில், எல்லையில் நின்று, வலையொளியில் கண்டால், சொந்தப் பிள்ளைகளுக்குள், சொத்துப்பிணக்கை கண்டு, தேம்பியழும் தாயைப்போல், பெரும் துயரில், கால்கடுக்க வருந்தி நிற்கும் எல்லைச்சாமிகள். இந்த கார்த்திகையில், இதுவரை இல்லாத, வருத்தங்களும் வேறுபாடும், அது ஒருபுறமிருக்க... அதே கார்த்திகையில்,...

சிவ வழி

Image
  எங்கும் ஒளியாய், ஓங்கார ஒலியாய் ஒலிக்கும் அருளானே! எல்லை இலாத   சிவமே !  மானிடற்கெல்லாம் மறைநின் அருமையுணர, எவ்வடிவும்  எடுக்கும்  ஆதாரத் தத்துவமே🙏!   லிங்கமே நின் முதல் வடிவு! தில்லை நடராசனே   ஐந்தொழில்   குறிக்கும் சக்தி வடிவு! தட்சிணா மூர்த்தியே ஞானறிவு குறிக்கும் குரு வடிவு!   உமா-மகேஸ்வரனே நின்கருணையும் அன்பும் குறிக்கும்   கிருபை வடிவு🙏!   கேட்போர் கேட்கட்டும், நினக்கேன் திருவுருவென்று? சிவம் உணர்ந்தோர்   அறிவார் அவர்தம் மனம் ஒருங்க, அருவத் தத்துவம் உள்ளுணர, அன்பாய் நின்கழல் கண்டுணர, அடியார்க்கும், பக்தர்க்கும் ஆனந்தக் கண்ணீராய் கண்கொள்ளா காட்சியாம் நின் திருவடிவு. அதைத் தினம் கண்டு பெரும்பேறு பெற – இந்த அற்பனுக்கு அருள்வாயோ! ஆலகாலனே! – நின் மேல் எங்கள் அன்பை எங்ஙனம் சொல்ல? ‘ஆ’ வின் பாலும், சந்தனமும்   பூசி குளிர்வித்து , ஆளியும், தும்பையும், வில்வமும் அலங்கரித்து, ஓதுவார்க்கு   ஓய்வின்றி ஊழியம் செய்து, உன்இல் மிளிர உழவாரப்   பணி செய்து, உனைச்...

முதுமை 4

Image
முதுமை  - 4 இறைவா ! முதுமையில் முடியும்  ஒருவழிப்பாதையில்... வெள்ளத்தில் செல்லும்  எறும்பாய் மானிடர் நாங்கள்,  மீண்டும் ஒருமுறை  காலம் சென்றோரை காண  வரம் தா இறைவா!  முதுமை இட்டு செல்லும்  மூப்பின் மறுபக்கம்  எப்படி இருக்கும் என  அவர்களிடம் கொஞ்சம் கேட்க வேண்டும்.  காலத்தின் கோலத்தில்  இழந்த அன்பான உறவுகளை... நெருங்கிய நண்பர்களை.... சொல்ல மறந்த விளக்கங்களை... தயங்கிய காதல்களை...  கொடுக்க மறந்த கடிதங்களை... வாங்க மறந்த கடன்களை... செல்ல எண்ணிய கோவில்களை..  கேட்காத மன்னிப்புகளை..  அன்போடு பேச மறந்த உடன்பிறப்பை  அஞ்சறைப்  பெட்டிக்குள் சேமித்த கனவுகளை..  அப்பாவின் புரியாத டைரி கணக்குகளை  ஒரு முறையேனும் கண்டு கேட்க,  கோபமாய் திரும்பி கொள்ள,  ஒரு நொடி  வரம் தா இறைவா!  இளமையில் இருந்த அவர்களிடம்  செல்லமாய் கோபிக்ககூட ஆளில்லா..  இம்முதுமையின் களைப்பையும்,  தனிமைத் துயரையும் பகிர   வரம் தா இறைவா!  - Balaji Vedharajan image: Gemini

முதுமை 3

Image
முதுமை - 3 படியேறும் பேருந்தும், நெடுந்தூர இரயில்  நடைமேடையும், என்றுதான்  மதிப்பளிக்குமோ  முதுமைக்கு? கடந்து செல்லும்போது  கைகொடுப்போம்  உதவிக்கு..  -Balaji Vedharajan image: Gemini

முதுமை 2

Image
முதுமை - 2  முதுமையில் நிற்கையிலே..  பெருங்குரலெடுத்து  பெற்றெடுத்த அன்னையுமில்லை, சுற்றி நின்ற  உறவுகளுமில்லை, கதை சொல்லி - நெய்  கலந்து ரசஞ்சோறு ஊட்டிய  கரங்களும் இல்லை.  தூக்கி வளர்த்த தந்தையுமில்லை ஓடி விளையாடிய நட்புமில்லை. வந்தபோது புன்முறுவலாய் பேசி சொல்லாமல் இறங்கும் தொடர்வண்டி பயணி  போல், செல்லும்போது சொல்வதுமில்லை... இப்படி  அத்துனை பேரும், சொல்லாமல் சென்றார்களே... இந்த முது(தனி)மையை பற்றி? இருக்கும்போது  உடும்பாய் பற்றிய அத்தனை  உலக விஷயங்களும் இங்கே இருக்க  எங்கே அவர்கள்?  பத்திரமாய் பாதுகாத்த  சொத்து பத்திரங்களும், உறவு கசந்து அடைத்த வேலிகளும்,  அலமாரியில் அடுக்கிய  விருப்ப உடுப்புகளும், பரணியில்  பாங்காய் அடுக்கிய  பல வருட  பொங்கல் பானைகளும், பல கல்யாணங் கண்ட முற்றத்து வாசல்களும், புளியிட்டு விளக்கிய பித்தளை பாத்திரங்களும், அத்தனையும் பத்திரமாய்  இன்னும் இருக்க,  எங்கே அவர்கள்?  - Balaji Vedharajan image: Gemini

முதுமை 1

Image
முதுமை - 1  தொலைபேசி  வண்ணத்திரையில்  பேசி சிரிக்கும்  தூர தேச உறவுகளில்,  பொத்தானை அழுத்திப்  பேரன்  முடிக்கும் வினாடிகளில், உதிர்ந்தே போகிறது….  வண்ணங்கள்.  இரக்கமின்றி  மீண்டும் சூழும்  முதுமையின்  கருப்பு வெள்ளை   எண்ணங்கள்!  - Balaji Vedharajan image: Gemini

அறம் கண்ட இருக்கை

Image
சென்னை நகர ரயில் பயணத்தில்...  ஜன்னலோரக்  காற்றை நேசித்து ஒரு பெரியவர். எழுபது வயது இருக்கும். காலம் வரைந்த கோட்டோவியமாய் முகச்சுருக்கங்கள். எளிமையான கதர் வேட்டி சட்டைக்குள் ஒடுங்கி இருக்கையின் ஓரம் அமர்ந்திருந்தார்.  இரயிலின் பரபரப்பிற்குள் சலனம் இல்லா சிலையாய் அவர்.  தினமும் வேலைக்கு சென்று திரும்பும் அயர்ச்சியோ, மனப்பளுவோ, எதிர்கால திட்டங்களோ அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. அவரை பொறுத்தவரை, அந்த பயண கணத்தில் மட்டுமே இருந்திருப்பார்.  ஆன்மா உயிர்ப்புடன் இருக்கும்போது, மனவுடல் சலனமற்று இருக்குமோ? அதே  இருக்கையில் ஒரு இடம் விட்டு பக்கத்தில், இருப்பைக் காட்டும் இயல்பில், போதையில் நடுத்தர வயதில் உடல் மெலிந்த மற்றொருவர்.  காற்றில் கோபமாய் குறை சொல்லி ஆற்றாமையில்... குடித்த வீரன்.. ஆர்பாரிக்கும் மன எழுச்சியில் கதைத்துக் கொண்டு இருந்தார்.  அவ்வபோது தலையைக் கோதி, முழுக்கைச் சட்டையின் பொத்தான்களையும் சரி செய்து கொண்டார்.   1980 களின் காது மறைக்கும் கிராப் தலையுடன் , பெல் பாட்டம் அணிந்து  உற்சாகமாய் வாழ்க்கையை துவங்கி இருப்பார் போலும், துவை...

அருவ அரணே!

Image
அருவ அரணே! அன்பின் உருவே, அனைத்திற்கும் ஆதாரமே,  எம் சிவனே! அடியாரை  ஆளும், நின்சக்தியின் வெளிப்பாடே  அனைத்துயிரினமே!  படைத்தல், காத்தல், அழித்தல்,  மறைத்தல்,  அருளல் என  அனைத்தும் நின்செயல் எனும்,  சைவ சித்தாந்தம் போற்றும் – அறியாதார்  சிந்தனைக்குள்  சிக்காத சிவபரம்பொருளே!  இமயத்தின் ருத்ரனே!  தென்னகத்தின் சிவனே ! சோழரின் பெருமையே! ஆன்மிகத் தமிழ் வளர்த்த,   அடியாரின் அண்ணலே! நின் தத்துவம் பல்லாண்டு வளர்ந்தோங்கும்  இப் பாரதத்தின் பரம்பொருளே!  அருவமாய் முனிவர்க்கு,  அருளும் சித்தானந்த, ஆன்மிக பரம்பொருளே! ஒளிப்பிழம்பே!    திருவுருவமாய் பக்தர்க்கு,  திருமேனியில், தில்லையிலுறையும் நடராசனே ! அருவுருவமாய் விளங்கும் என  அடியார் நல்வாக்கின்படி,  அடியேனின் சிற்றறிவுக்கு  விளங்கா ஒளி விளக்கே,  உனை என்று காண்பேனோ ?🙏🙏 Balaji Vedharajan.

தேசம் எங்கள் தேசம்.

Image
தேசம் எங்கள் தேசம்  ---------------------------------------- சர்வ தேசமும்  திரும்பிப் பார்க்கும்  தேசம் எங்கள் தேசம்... குருதிப் பெருக சாய்ந்த போதும்,  காத்த மூவர்ணகொடி வீழா.. குமரனின் தேசம் எங்கள் தேசம்... கப்போலோட்டிய தமிழன் முதல்  காமராசர் வரை,  கண்ட தேசம் எங்கள் தேசம்... காளி வாழ் வங்கம் முதல்,  காந்தாரம் வரை பரந்திருந்த  தேசம் எங்கள் தேசம்... பாரதியின் வரிகளும், கலாமின் கனவுகளும், நெஞ்சில் நான்முக அரிமாவும் சுமந்து, பகலிரவு பாராது சீராய்  சான்றோர் பலர் ஓய்வின்றி  பாரதப் பணி செய்யும்  தேசம் எங்கள் தேசம்... சித்தாந்த சாத்திரங்கள் நாளும்  சரியை, கிரியை, யோகம், ஞானம் - என  சைவ நாற்பதங்கள் நாளும் திருமுறைகள் பனிரெண்டும் - அருளும்   தென்னாடுடையானின்  தேசம் எங்கள் தேசம்... கொடுவரியின் சுந்தர வங்கம்,  கொடுப்புலியின் கோதாவரி தெலுங்கம், அரிபடா ஆமையின் கலிங்கம்,  ஆவூரியா காக்கும் தமிழரின் அகம் - கடல்  அடிமட்ட நீர் எழும்பி வளம் கொடுக்கும் கேரளம், இயற்கை இயல்மாறா நெதராணியின் கருநாடகம்,  கு...

"ஈர நிலங்கள் காப்போம்"

Image
"ஈர நிலங்கள் காப்போம்" --------------------------------- பொறியியல் பிழை இல்லா கூட்டில், ஓய்வில் நீர்காகப்  பறவை ஒன்று  மெல்ல மணிக்கண்ணுறங்க..   வாஸ்துவும் வாசலும் இல்லா,   மேல் திறந்த அதன் கூடு,  மழையும்,  வெயிலும், வெளிச்சமும்,  எப்போதும் வரலாம் என  இயற்கையின் இயல்பாய் இருக்க... காற்றில்,  கிளைகளோடு ஆடும்,  கடனும் எடையுமில்லா  அதன் கூடு - அது குறித்து, கிஞ்சித்தும் பயமில்லை அப்பறவைக்கு.  விரிக்கச் சிறகும், வானமும்  இருக்க பயமேன்?  அப்பறவை   எங்கும் இடம்பெயர்வதில்லை...  அதற்கான  உணவும்,  உறைவிடமும்  ஒருங்கே இங்கிருக்க, தூர வலசைக்கு அவசியமுமில்லை... மூர்ச்சையாகும் இருள்சூழ் மண்ணில்,   வேர்களை நேர் செலுத்தி  உவப்பாய் உவர்ப்பில் நிற்கும் தில்லை – அது தன்னில்  பறவை கூடு கட்ட  கிளை வாடகையோ, காற்றில் இலை அசைய தனிக்காசோ  கேட்பதில்லை.  வரும் ஐப்பசியும்,   வாடைக்காற்றும் வந்தால்,  இறையும், இரையும் நிரம்பி இருக்கும்  எம் ஈரத் தமிழ் நி...

கற்றதோ சிறு கடலறிவு.

Image
கற்றதோ சிறு கடலறிவு.  பெற்றதோ நுனித் துரும்பளவு, நிற்பதோ நின் தாள் நோக்கி - சிந்தையில், கொண்டதோ சிவத்தொண்டு. ஓம்காரமாய் பற்றியதோ  உம்  கழல், ஈட்டியதோ உம் அருள்  தவிர்த்து ஒன்றுமில்லை! நெற்றியில், இட்டதோ உம் திருநீறும்,  ஆக்கினையும், யாக்கையதில் - தீ  சுட்டதும் ஒருபிடி நீறே யாவர்க்கும். உயிர்  விண்டதும் - சுடலைத் தணலில், தெளித்த பால்  பட்டதும் பந்தம் நீங்க, கரையினின்று  விட்டதும் கடல் நீர் கலந்து - ஊறி  பட்டென உடைபடும் நீறுநிறை கலமும் என்பும் உறவும். பிறவி கட்டவிழ்த்து, நின் நினைவில்  ஆழ்ந்து - எண்ணத்தில் எட்டா  இறை கலந்து உள்ளுருகும்  அடியெனின் சடையானே!  கலப்பேன் யான் உன்னுடனே, ஒரு பிடி எரி நீறாய்...  தில்லையனே! நீலக்  கடலானே! நீ அறிவாயோ,  அடியேன் எம் தவத்தை? 🙏 Balaji Vedharajan

அலையாத்திக்காட்டு மாடுகளும் - நீலக்கார்பனும்...

Image
2002 இல் அலையாத்திக் காடுகளையும் பாதுகாக்க வேண்டி நான் மேற்கொண்ட 1100 km பைக் பயணத்தில், பொதுவாக அலையாத்தி குறித்த விழிப்புணர்வு குறைவாகவே காணப்பட்டது. அப்பயணத்தில், கடலோர கிராமத்தில் தங்கி இருந்த போது, நண்பர் ஒருவர் கொடுத்த இரவு உணவை சமைக்க, நன்கு பட்டுப்போன சுள்ளிக்குச்சிகள் பயன்படுத்தினார். அலையாத்தி விறகுகள் நன்றாக அடுப்பில் எரியும் திறன் கொண்டவை என்று கூறுவார்கள். ஆனால் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, மக்களிடம் அலையாத்திக் காடுகள் குறித்த பார்வையை முற்றிலும் மாற்றியது. பரவலாக இந்தியா முழுக்க இக்காடு வளர்க்கும் திட்டங்கள் துவங்கப்பட்டன . குறிப்பாக இந்தியாவின் கிழக்கு கடலோர மாநிலங்களில் அலையாத்தி வளர்ப்பு – சுனாமி தடுப்பாகவே முன்னிலைப்படுத்தப்பட்டன. தற்போது, புளூ கார்பன் என அழைக்கப்படும் பருவ நிலை மற்ற தீர்வாக அலையாத்தி கருதப்படுவதால், சர்வதேச அளவில் இவற்றின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. நீலக்கார்பன் என்றால் என்ன? என்று பார்ப்போம் மனிதர்கள், தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு, புவியில் இயற்கையாக சேமிக்கப்பட்ட பெட்ரோலிய எண்ணையை (ஹைட்ரோ கார்பன்) பெருமளவில் உறிஞ்சி எடுத்...

ஆழிக் கதைகள் - 1 (பாலாஜி வேதராஜன்)

Image
ஆழிக்கதைகள் - 1  ஒட மர நிழல் தேடி தாகத்தில் அலையும் குருகும் - முற்பகல் கடல் ஈராட்டித் தணலில் உமுறியும் கருகும். சான்றோரே அறிவீர் - பின்  விடாச்சோனை வெளுத்துப் பெய்யும் - பிற்பகல்  படல்  அற்ற உவர்நீரும் புனல் போல் ஓடும்.  தடமற்ற பெரும் மணற்றிட்டு பேரிடரினின்று காக்கும் அதுபோல் - எப்பகல் வேளையிலும்  தாய் திருநாட்டின் கடல் வளம் காப்பிரே. - பாலாஜி வேதராஜன் --------------------------------- விளக்கம்:  ஓட மரங்கள் எனப்படும் கடலோரங்களில் வளரும் மரங்களின் நிழலை தேடி குருகு (பறவை) அலையும் வேளையில், ஈராட்டி (கடல் காற்று எந்த திசையிலும் நகராமல் இருக்கும்போது) ஏற்படும் வெப்பத்தில் உமுறி எனப்படும் கடலோர செடிகளும் கருகும்.   பொதுவாக உமுறிகள் நீர்ச்சத்து மிக்க தாவரங்கள், அவை நன்கு வறட்சியை தாங்கும்.  அவையும் கூட கருகும் என்று சொல்வதன் மூலம் – முற்பகல் கடலோர நில வெயிலின் தாக்கத்தை விளக்க முற்பட்டுள்ளேன்.   உமுறிகள் நம் கடல் பகுதியில் மூன்று வகை உண்டு. பெரும்பஞ்ச காலத்தில் இவை நம் மக்களால் உணவாக எடுத்து கொள்ளப்பட்டதாகவும், சில நாடுகளில் இவை சால...